மூன்று விக்கெட்டுகள் விழுந்ததும் ராகுலின் காதில் கோலி சொன்ன ரகசியம்

கோலி ராகுல

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

உலகக்கோப்பைத் தொடர் தொடங்கும் முன்புவரை இந்திய அணியின் மிகப்பெரிய கவலையாக இருந்தது, அணியில் நடுவரிசை பேட்டிங் குறித்துதான். அதிலும் 4,5-வது பேட்டர்கள் சரியாக அமையவில்லை என்பது பெரிய கவலையாக இருந்தது.

ஆனால் இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் “கிங்” கோலி, கே.எல்.ராகுல் இருவரும் வெளிப்படுத்திய பொறுப்பான பேட்டிங்கைப் பார்த்தபின், நடுவரிசை குறித்த கவலை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நீங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாதாளத்தில் விழுந்த நேரத்தில் ஆகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய கோலியும், கேஎல்.ராகுலும் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். கோலி 85 ரன்கள், கே.எல்.ராகுல் 97 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆட்டநாயகன் விருதும் கேஎல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 52 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி புள்ளிக்கணக்கை 2 என்று தொடங்கினாலும், எதிர்பார்த்த அளவு நிகரரன்ரேட் உயராமல் 0.883 என்ற அளவிலேயே இருக்கிறது. ஒருவேளை 200 ரன்கள் இலக்கை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 20 ஓவர்களில் சேஸிங் செய்திருந்தால், நிகர ரன்ரேட் எகிறியிருக்கும்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு கைகொடுத்த சுழற்பந்துவீச்சு

இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். உலகிலேயே தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துள்ளோம் என்று மார்தட்டிக்கொள்ளும் அளவுக்கு பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்பதுதான் நிதர்சனம். குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் எந்த அணிக்கும் வரும் போட்டிகளில் சிம்மசொப்னமாக இருப்பார்கள். எந்த நாட்டிலும் தனது ஜம்பத்தை காண்பிக்கும், ஆஸ்திரேலிய அணி துணைக்கண்டத்தில் அதிலும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது, தன்னை அறியாமல் கட்டுண்டுவிடுகிறது. ஆஸ்திரேலிய அணியிலும் ஆடம் ஸம்பா இருந்தாலும், அவரின் பந்துவீச்சு இந்திய அணியிடம் எடுபடவில்லை.

2வதாக 2 ரன்களுக்குள் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி, மிகப்பெரிய அழுதத்தில் இருந்தது. அந்த நேரத்தில் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி, ராகுலின் ஆட்டம் ஆகச்சிறந்தது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இந்த இரு அம்சங்கள்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

கேட்ச் விட்டதால் மேட்ச் காலி..!

விராட் கோலி 12 ரன்கள் சேர்த்திருந்த போது ஹசல்வுட் பந்துவீச்சில் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிப்பதில் அலெக்ஸ் கேரே, மார்ஷ் இடையே சரியான புரிந்துணர்வு இன்மையால் கேட்சை கோட்டைவிட்டனர். கிரிக்கெட்டில் “கேட்ச் லாஸ் மேட்ச் லாஸ்” என்பார்கள். அதுபோல, விராட் கோலிக்கு கேட்சை கோட்டைவிட்டதற்கு ஆஸ்திரேலியா மிகப்பெரிய விலை கொடுத்துவிட்டது.

இதேபோல கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில், பாகிஸ்தான் அணி கோலிக்கு கேட்ச் விட்டதன் பலனை கடைசியில் அனுபவித்தது. அதேபோல இன்று ஆஸ்திரேலியாவும் அனுபவித்துள்ளது.

ஆஸ்திரேலியா தோற்றது ஏன்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சென்னை ஆடுகளம் மெதுவானது, பந்து நின்றுதான் பேட்டருக்கு வரும். முதல் 10 ஓவர்கள் வரை பேட்டர் சமாளித்துவிட்டால் அதன்பின் ஆடிவிடலாம். ஆனால், வேகமான ஆடுகளில் விளையாடிப் பழக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் இந்த ஆடுகளத்தில் எதிர்பார்த்த ஷாட்களை ஆடமுடியவில்லை. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்று வலுவாக இருந்தது. ஆனால், 30 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சில் இழந்தது. வேகப்பந்துவீச்சில் விளையாடிப் பழக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேட்டர்கள் துணைக்கண்டத்தில் அதிலும் இந்தியாவில் விளையாடும்போது இயல்பாகவே சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள்.

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்கள்தான் இந்தியாவில் அதிகம் இருக்கின்றன என்பது தெரிந்தும், ஆடம் ஸம்பா என்ற தனி ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டுமே ஆஸ்திரேலியா எந்த தைரியத்தில் அழைத்து வந்துள்ளது தெரியவில்லை.

சென்னையில் திடீரென இன்று இரவு லேசான பனிப்பொழிவு இருந்தது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சிரமத்தைஅளித்தது. அதிலும் குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களான ஆடம் ஸம்பா, மேக்ஸ்வெல் ஆகியோரால் பந்தை இறுகப்பற்றி வீச முடியாத சூழல் ஏற்பட்டது. பனிப் பொழிவு காரணமாக நடுவர்கள் பந்தை இருமுறை மாற்றினர்.

சென்னையில் காற்றில் அதிகமாக ஈரப்பதம் இருந்தது, கடற்கரைக் காற்றின் ஈரப்பதம் ஆகியவை பந்துவீச்சாளர்கள் பந்தை இறுகப்பற்றி வீசுவதில் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் மேக்ஸ்வெல் ஆஃப்ஸ்பின்னும், ஆடம் ஸம்பாவின் லெக் ஸ்பின்னும் சிறிது கூட இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

173 டாட் பந்துகள்

இந்த ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் 173 டாட் பந்துகளை விட்டனர். அதாவது 28 ஓவர்களில் ரன் ஏதும் அடிக்காமல் பந்துகளை வீணடித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடியதிலேயே 3வது மிக மோசமான இன்னிங்ஸ் இதுவாகும்.

டாட் பந்துகள் வழங்கிய வகையில், பும்ரா 41 பந்துகள், ஜடேஜா 38 பந்துகள், அஸ்வின் 32 பந்துகள், குல்தீப் 31 பந்துகள், சிராஜ் 26 பந்துகளை டாட்பந்துகளாக வீசினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

ரோஹித் சர்மா டக் அவுட் ஆனது ஏன் ?

இந்திய அணியில் நடுவரிசை பேட்டிங் என்பது நீண்டகாலமாக இருந்து வரும் சிக்கலாக இருக்கிறது. 2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடங்கிய இந்த பிரச்சினை, 2023 வரை ஓயவில்லை. யாரை நம்பி 4வது மற்றும் 5வது இடத்தில் களமிறக்குவது என்ற நிலை இருந்தது. ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா என பலரையும் களமிறக்கி பரிசோதித்தும் பயனில்லை.

2021, டிசம்பர் 9ம் தேதி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு பேட்டியில் கூறுகையில் “ இந்திய அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் சூழலை எதிர்கொள்ளத் தயாராக நான் நடுவரிசையில் களமிறங்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இன்று அந்த சூழலும் வந்தது, கோலியும், கேஎல்.ராகுலும் காத்து நின்றார்கள். ரோஹித் இனி மகிழ்ச்சியோடு இருப்பார்.

ராகுலிடம் கோலி சொன்ன ரகசியம் என்ன?

ரன் ஏதும் எடுக்காமலேயே 3 வீரர்கள் அவுட் ஆன நிலையில், சிறிய ஸ்கோரை எட்டுவதற்கு தேவையான உத்தியை கோலியும் ராகுலும் களத்திலேயே வகுத்திருக்கின்றனர். இதை தனது பேட்டியின்போது ராகுல் தெரிவித்தார்.

"ஆட்டம் தொடங்குவதற்கு முன் கோலியுடன் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. குளித்துவிட்டு, ஃபீல்டிங் இன்னிங்ஸ் முடிந்து அரை மணி நேரம் வார்ம்-அப் செய்ய நினைத்தேன், ஆனால் நான் உடனடியாக உள்ளே வர வேண்டியிருந்தது. அப்போது நான் டெஸ்ட் கிரிக்கெட் போல விளையாட வேண்டும் என்று விராட் கூறினார். அணிக்காக இதை விளையாடுவதில் மகிழ்ச்சி. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் ஆதரவாக களம் இருந்தது." என்று ராகுல் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)