You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீதிபதி சந்திரசூட்: இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியின் தனித்துவமான தீர்ப்புகள்
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக புதன்கிழமை பொறுப்பேற்றுள்ள டி.ஒய்.சந்திரசூட் கூர்மையான கருத்துகள் அடங்கிய தமது தீர்ப்புகளுக்காகப் பெயர் பெற்றவர்.
பல நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் இடம் பெற்ற நேரங்களில் பெரும்பான்மை நீதிபதிகளோடு மாறுபட்டு இவர் வழங்கிய தீர்ப்புகள் மிகவும் விவாதிக்கப்பட்டவை.
பெரும்பான்மையோடு உடன்பட்டு வழங்கிய தீர்ப்புகள் என்றாலும், மாறுபட்டு வழங்கிய தீர்ப்புகள் என்றாலும், நீதிபதி சந்திரசூட்டின் கூர்மையான கருத்துகள் நாட்டின் கொள்கைகள் மீது அழுத்தமான தாக்கம் செலுத்துகிறவை.
முக்கிய தீர்ப்புகள், கருத்துகள்
1. இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆதார் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதா என்ற வழக்கில் 2018 செப்டம்பர் 26-ம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது. ஆதார் சட்டம் செல்லும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆனால், இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
ஆதார் விவகாரத்தை நிதி மசோதாவாக எடுத்துக்கொண்டு நிறைவேற்றியது அரசமைப்புச்சட்டத்தின் மீதான மோசடி என்று அவர் தமது தீர்ப்பில் வருணித்தார். பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பே கட்டுப்படுத்தும் என்றாலும், சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு முக்கியமாகக் கவனிக்கப்பட்டது.
2. ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற இடத்தகராறு வழக்கில் அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று 2019 நவம்பரில் தீர்ப்பளித்தது இந்திய உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் சந்திரசூட் இடம் பெற்றிருந்தார். உடன்பட்ட தீர்ப்பையே அவரும் வழங்கினார் என்பதும் கவனிக்கப்பட்டது.
3. அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் அல்ல என்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நீதிபதி சந்திரசூட் பேசிய கருத்துகள் முக்கியத்துவம் பெற்றன.
அரசை எதிர்ப்பதை 'தேச துரோகம்' என்றும் 'ஜனநாயக எதிர்ப்பு' என்றும் முத்திரை குத்துவது 'அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் சுதந்திரம் மிக்க ஜனநாயகம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கங்களின் இதயத்தின் மீதான தாக்குதல்' என்று அப்போது சந்திரசூட் கூறினார்.
2020ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடந்து போராட்டம் நடந்து வந்த சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தது முக்கியத்துவம் பெற்றது.
4. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வயது வேறுபாடு இல்லாமல் எல்லாப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறு ஆய்வு மனுவை 7 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கவேண்டும் என்று 2019ம் ஆண்டு 5 நீதிபதிகள் பெஞ்ச் முடிவு செய்தது. அப்போது அது ஒருமித்த தீர்ப்பாக வரவில்லை. அந்த விவகாரத்தை பெரிய அமர்வு விசாரிக்கவேண்டும் என்று 3 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆனால், சந்திரசூட், ஃபாலி நாரிமன் ஆகிய இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
வயது வேறுபாடு இல்லாமல் எல்லாப் பெண்களும் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்ற முதல் தீர்ப்பு மதிக்கப்படவேண்டும் என்ற கருத்தை அவர்கள் தங்கள் தீர்ப்பில் வலியுறுத்தினர்.
தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக வலதுசாரிகள் போராட்டம் நடத்திவந்த நிலையில் இத்தகைய கருத்தை அவர்கள் வெளியிட்டனர்.
அவர்களது மாறுபட்ட தீர்ப்பின் சுருக்கம்:
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நல்ல நோக்கத்தோடு விமர்சிக்கலாம் என்றாலும், அந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் அல்லது ஆணைகள் அமலாவதைத் தடுப்பதும், தடுப்போருக்கு ஊக்கமளிப்பதும், நமது அரசியல் சாசன முறைகளின்படி பொறுத்துக் கொள்ள முடியாது.
இந்திய அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ளபடி, சட்டப்படியான ஆட்சியை நடைமுறையாக்குவதே நமது நோக்கம். இந்தியாவின் "புனித நூல்" அரசியல் சாசனம் என்பதை ஒவ்வோர் இந்தியரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மகா சாசனத்திலுள்ள குறிக்கோள்களை நனவாக்குவதற்கு, எல்லா மனித முயற்சிகளோடும் முன்செல்ல, இந்திய குடிமக்கள் நாம் ஒரு நாடாக நடைபோடுகிறோம் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லா அதிகாரிகளும் நடைமுறைப்படுத்தும் கடமை உள்ளது என இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது.
5. மகாராஷ்டிர மாநிலத்தின் பீமா கொரேகான் வழக்கில் பல மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு பிணையில்லாமல் சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து தனது கண்காணிப்பில் நடத்தவேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், ஒரே குரலில் அல்ல. இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 2 நீதிபதிகள் இந்தக் கோரிக்கையை நிராகரித்த நிலையில், மகாராஷ்டிர போலீஸ் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது, இதை நீதிமன்றக் கண்காணிப்பில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவே விசாரிக்கவேண்டும் என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார் டி.ஒய்.சந்திரசூட்.
“அதிகாரத்தில் இருப்போர் மத்தியில் ஆதரவைப் பெறாத லட்சியங்களை வலியுறுத்தும் தனி மனிதர்களுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரங்களைப் பெற உரிமை உண்டு. மாறுபடும் உரிமையே வீரியமிக்க ஜனநாயகங்களின் அடையாளச் சின்னம். பிரபலமற்ற லட்சியங்களை எடுத்துக்கொள்கிறவர்களை கொடுமைப்படுத்துவதன் மூலம் எதிர்த்தரப்பில் உள்ளவர்களின் குரல்களை நெறிக்க முடியாது,” என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார் சந்திரசூட்.
6. சமீபத்திய தீர்ப்பு ஒன்றில், 20-24 வார கர்ப்பத்தைக் கலைப்பதற்கு திருமணமான பெண்களைப் போலவே திருமணமாகாத பெண்களுக்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பளித்திருந்தார் சந்திரசூட்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்