'ஒரு மணி நேரத்தில் 6 பேர் கொலை': தேடப்பட்ட நபர் கொலை சம்பவத்திற்கு முன் பதிவு செய்த செல்ஃபியில் என்ன இருந்தது?

    • எழுதியவர், பல்லா சதீஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உங்களைச் சங்கடத்துக்கு உள்ளாக்கலாம்)

ஆறு பேரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பி. ராஜ் குமார் இறந்துவிட்டார் என்று ஃபியூச்சர் சிட்டி கமிஷனர் தருண் ஜோஷி அறிவித்துள்ளார்.

இன்று மதியம் ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள கொத்தூர் மண்டலத்தின் பெஞ்செர்லா கிராமத்தில் ராஜ் குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரங்காரெட்டி மாவட்டம் ஷாபாத் பகுதியில் ஒரு சிறுமி உட்பட ஆறு பேரைக் கொலை செய்த வழக்கில் ராஜ் குமார் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அவரைத் தேடி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். இந்நிலையில், திங்கட்கிழமை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

"ராஜ் குமாரிடம் பல சிம் கார்டுகள் இருந்தன. எங்கள் தகவலின்படி, அவர் 16 சிம் கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். பெட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும் பழக்கம் காரணமாக அவர் இத்தனை சிம் கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். அவர் அடிக்கடி தொலைபேசிகளையும் மாற்றி வந்துள்ளார். அவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார்" என்று கமிஷனர் தருண் ஜோஷி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தில், கொலை செய்வதற்காக அவர் ஒரு காரை வாடகைக்கு எடுத்ததாக கமிஷனர் கூறினார். ராஜ் குமாரைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கமிஷனர் தருண் ஜோஷி ஊடகங்களுக்கு விளக்கினார்.

"இன்று மதியம் 100 என்ற எண்ணிற்கு அழைப்பு வந்தது. பெஞ்செர்லா அருகே உள்ள ஒரு பகுதியில் ஒரு உடல் கிடப்பதாக அவர்கள் கூறினர். நாங்கள் அங்கு சென்று பரிசோதித்தபோது, அது ராஜ் குமாரின் உடல் என்பது தெரியவந்தது.

உடலுடன் ஒரு தொலைபேசி, பேருந்து டிக்கெட் மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அருகில் ஒரு லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்து கேன் கண்டெடுக்கப்பட்டது. அவர் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து இறந்திருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். அவரிடமிருந்து 1,260 ரூபாய் ரொக்கப் பணத்தையும் நாங்கள் கண்டெடுத்தோம்" என்று தருண் ஜோஷி கூறினார்.

மொபைல் போனில் இருந்த செல்ஃபி வீடியோ

கொலை நடந்த நாளான ஜூலை 10 அன்று மாலை 4.55 மணிக்கு ராஜ் குமார் தனது கைப்பேசியில் ஒரு காணொளியைப் பதிவு செய்திருப்பதாக ஆணையர் தருண் ஜோஷி கூறினார்.

ராஜ் குமாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொலைபேசி ஊடகங்களுக்குக் காட்டப்பட்டது. அதில் 2.26 நிமிட வீடியோ இருந்ததாகவும், அதன் ஒரு பகுதியைத் தான் திரையிடப் போவதாகவும் கமிஷனர் கூறினார். அந்த வீடியோ இயக்கப்பட்டு, அதன் ஒரு பகுதி ஊடகங்களுக்குத் திரையிடப்பட்டது.

தான் விரக்தி அடைந்துவிட்டதாகவும், தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாகவும் ராஜ் குமார் அந்த வீடியோவில் கூறியிருந்ததாக கமிஷனர் தெரிவித்தார். கொலை செய்த பிறகு ராஜ் குமார் தனது தந்தையிடமும் இதே விஷயத்தைக் கூறியதாக அவர் தெரிவித்தார்.

காவல் ஆணையர் வெளியிட்ட வீடியோவில், "என்னிடமிருந்த பணம் முழுவதையும் அவர்களிடம் கொடுத்தேன். 2 ஏக்கர் நிலத்தை விற்று அதில் பாதி பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன். அந்தப் பணத்தை என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு என்னை அடைத்து வைத்தார்கள். என்னையும், என் இரண்டு குழந்தைகளையும் நிலம் இல்லாதவர்களாக விட்டுச் சென்றார்கள். அந்தப் பெண்ணை நம்பி கடன் வாங்கி, இறுதியில் என்னை நிலம் இல்லாதவராக ஆக்கிவிட்டார்கள். கடைசியாக என் மீது வழக்குப் பதிவு செய்து என்னை சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள். என்னை இவ்வளவு ஏமாற்றியதற்காக அந்தப் பெண்ணையும் அந்தக் குடும்பத்தையும்..." என்ற வார்த்தைகள் மட்டுமே கேட்கின்றன.

அந்த வீடியோவில், அப்பெண்ணின் குடும்பத்தினர் தன்னைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக ராஜ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், ராஜ் குமாருக்கும் அந்தச் சிறுமிக்கும் நெருக்கமான உறவு இருந்ததா என்று பிபிசி முன்னதாக அந்தச் சிறுமியின் மாமாவிடம் கேட்டிருந்தது. அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

என்ன நடந்தது?

ரங்காரெட்டி மாவட்டம் ஷாபாத் மண்டலம் தைவாலாகுடா கிராமத்தைச் சேர்ந்த ராஜ் குமார், ஆறு பேரைக் கொலை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஆவார்.

ஜூலை 10ஆம் தேதி இரவு முதல் 11ஆம் தேதி காலைக்கு இடைப்பட்ட நேரத்தில் பி. ராஜ்குமார் ஆறு பேரைக் கொலை செய்ததாக ஃபியூச்சர் சிட்டி போலீஸ் கமிஷனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"இந்த ஆண்டு மே 16 அன்று ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் முதலில் தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சிறுமியின் தாயையும் பாட்டியையும் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அச்சிறுமியை தைவாலாகுடா என்ற கிராமத்திற்கு இழுத்துச் சென்று, அங்குள்ள ஒரு குளத்தின் அருகே கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அதன் பிறகு அதே கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று தனது மனைவி மற்றும் இரு சிறு குழந்தைகளைக் கொலை செய்தார். இவை அனைத்தும் இரவு 11 முதல் 12 மணிக்குள் நடந்துள்ளது" என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு