You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாமல்லபுரம் விடுதியில் விஜயை சந்தித்த போது என்ன நடந்தது? கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகவல்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
"குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன்" என, விஜய் உறுதியளித்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், இந்நிகழ்வில் நான்கு குடும்பங்கள் பங்கேற்கவில்லை.
நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு 30 நாட்களுக்குப் பிறகு விஜய் சந்தித்ததை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எப்படிப் பார்க்கின்றன? அவர்களிடம் விஜய் பேசியது என்ன?
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்கு தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் செல்லாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதேநேரம், கரூர் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை இரண்டு வாரங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஒத்திவைப்பதாக, அக்டோபர் 1 அன்று அக்கட்சியின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் அழைப்பின் மூலம் விஜய் பேசினார்.
2 குடும்பங்களுக்கு வரவு வைக்கப்படாத நிதி
தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக 39 குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக நாளேடுகளில் செய்தி வெளியானது.
இரண்டு குடும்பங்களுக்கு நிவாரண நிதி செல்லவில்லை என கூறப்படுவது குறித்து தவெக திருச்சி மண்டல வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அரசுவிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"வங்கிக் கணக்குகளைக் கொடுப்பதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குழப்பம் நீடித்ததால் வரவு வைக்கப்படவில்லை. தீபாவளியை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைத்த பிறகு வரவு வைக்கப்படும்" எனக் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கையை மத்திய புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்துக்கு அழைத்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
விஜய் பேசியது என்ன?
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூரில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் தவெக நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
திங்கள்கிழமையன்று காலை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் படங்களுக்கு தனித்தனியாக மலர் அஞ்சலி செலுத்திய விஜய், பின்னர் தங்களுக்கு ஆறுதல் கூறியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
ஆனால், சந்திப்பின்போது பேசப்பட்ட விவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை தமிழக வெற்றிக் கழகம் வெளியிடவில்லை.
"எங்களுக்கு இருந்த ஒரே மகனும் உயிரிழந்துவிட்ட வேதனையோடுதான் சென்றோம்" எனக் கூறுகிறார் முருகேசன்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இவரது மகன் தாமரைக்கண்ணன் உயிரிழந்துவிட்டார்.
தனது மகன் எம்.ஏ ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு தரைவிரிப்பு ஒட்டும் வேலையைச் செய்து வந்ததாக முருகேசன் குறிப்பிட்டார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கரூருக்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டு சென்றுள்ளான். இந்த விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. கூட்டத்தில் மயக்கம் போட்டு அவன் கீழே விழுந்துவிட்டதாக கூறினார்கள். அதிகாலை 2 மணியளவில் ஆஸ்பத்திரிக்கு போனபோது இறந்துவிட்டதாக சொன்னார்கள்" என்கிறார்.
"தாமரைக்கண்ணனுக்கு திருமணம் நடந்து ஓராண்டு கூட முடியவில்லை" எனக் கூறும் முருகேசன், "வாழ்க்கையைத் தொடங்கும்போதே என் மகன் இறந்துவிட்டான். மருமகளுக்கு மருத்துவர்கள் இந்த மாதம் பிரசவத்துக்குத் தேதி குறித்துள்ளனர். அதுதான் வேதனையை அதிகரிக்கிறது" எனவும் தெரிவித்தார்.
விஜய் ஆறுதல் கூறியது குறித்து விவரித்த முருகேசன், "மகன் இறந்துபோனதை நினைத்து அழுது கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் பேசிய விஜய், 'வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மகனாக செய்து தருகிறேன்' எனக் கூறினார்" என்கிறார்.
"விஜய் பேசும்போது கட்சி நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை" எனக் கூறிய முருகேசன், " ஒவ்வொருவருடனும் தனித்தனியாக வந்து அவர் பேசினார். கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவிகளைச் செய்து தருவதாகக் கூறினார். மருமகளுக்கு பிரசவ தேதி நெருங்குவதால் அதற்கான உதவிகளைச் செய்து தருகிறேன் என உறுதியளித்தார்" எனவும் தெரிவித்தார்.
கரூர் சம்பவம் குறித்த கேள்விக்கு விஜய் அளித்த பதில்
கரூர் மாவட்டம் வடக்கு காந்தி கிராமம், அன்பு நகரை சேர்ந்த கிஷோர் என்பவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.
வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி கிஷோர் உயிரிழந்துவிட்டார். இவரின் தந்தை கணேஷ், கரூரில் உள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
கணேஷிடம் பிபிசி தமிழ் பேசியது. "எனக்கு ஒரே ஒரு மகன்தான். மனைவியும் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். விஜய் வருவதால் கூட்டத்துக்குப் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றான். ஆனால், அவன் இறந்துபோய்விட்டதாக இரவு 2.30 மணிக்குத்தான் தெரியும்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாமல்லபுரம் சென்றிருந்தோம். என்னிடம் விஜய் பேசும்போது, 'குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள். மகன் இல்லை எனக் கவலைப்பட வேண்டாம்' எனக் கூறினார். சுமார் ஐந்து நிமிடங்கள் என்னுடன் பேசினார்" என்கிறார்.
குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக விஜய் உறுதியளித்ததாகக் கூறிய கணேஷ், " ஐந்து லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு போடப்பட்டுள்ளதாக விஜய் கூறினார். அதில் தேவைப்படும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் என்றார். தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்தார்" எனக் குறிப்பிட்டார்.
"கரூர் கூட்ட நெரிசல் குறித்து ஏதேனும் தெரிவித்தாரா?" எனக் கேட்டபோது, " அதைப் பற்றி கேட்டபோது, 'என்ன நடந்தது என்றே தெரியவில்லை' எனக் கூறி தலைகுனிந்து கொண்டார். கரூர் சம்பவம் குறித்து வேறு எதையும் அவர் பேசவில்லை" எனக் கூறினார்.
மாமல்லபுரம் செல்லாத 4 குடும்பங்கள்
மாமல்லபுரத்தில் நடந்த ஆறுதல் கூறும் நிகழ்வுக்கு உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினர் செல்லவில்லை. அதில் வடிவேல் என்பவரின் குடும்பமும் ஒன்று.
தேநீர் கடை ஒன்றை வடிவேல் நடத்தி வந்துள்ளார். 53 வயதான இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர். இவரின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
மாமல்லபுரத்தில் நடந்த ஆறுதல் கூறும் நிகழ்வுக்கு வடிவேலின் குடும்பத்தினர் வராதது குறித்து அவரது உறவினர் சரவணனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"கூட்டத்துக்குச் சென்ற வடிவேல் இறந்துவிட்டார். அவர் இறந்து முப்பது நாள்கள் ஆகிவிட்டது. அதற்கான சடங்குகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால், 'எங்களால் வர முடியாது' எனக் கூறிவிட்டோம்" என்கிறார்.
"விஜயை இன்னொரு நாள் வந்து பார்ப்பதாக கூறிவிட்டோம்" எனக் கூறுகிறார் சரவணன்.
ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்
மாமல்லபுரத்தில் ஆறுதல் கூறும் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தவெக தரப்பில் இருந்து வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 20 லட்ச ரூபாயை திருப்பி அனுப்பிவிட்டதாக சங்கவி என்பவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டி கொங்கு நகரைச் சேர்ந்த இவரின் கணவர் ரமேஷ், கடந்த செப்டெம்பர் 27 அன்று தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
"நேரில் வந்து விஜய் ஆறுதல் சொல்வார் என்று தான் எதிர்பார்த்தோம். பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்தை வைத்து இறந்த உயிரை யாராலும் திருப்பித் தர முடியாது" என, செய்தியாளர்களிடம் ரமேஷின் மனைவி சங்கவி கூறியுள்ளார்.
"நாங்களாக தேடிச் சென்று விஜயைப் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாதிக்கப்பட்ட தங்களைத் தவிர்த்துவிட்டு தங்களின் வேறு சில உறவினர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று ஆறுதல் கூறும் நிகழ்வில் இடம்பெற வைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை.
கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இது புதிய அணுகுமுறையாக உள்ளதாகக் கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "இந்த விவகாரத்தில் அக்கட்சியினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கருத்து கூற வேண்டும். நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை" எனக் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு