You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நான் அதிகம் நேசிப்பது..' - ஸ்மிருதி மந்தனா கூறிய பதில் என்ன?
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, "கிரிக்கெட்டைவிட நான் அதிகம் நேசிப்பது வேறு எதுவுமில்லை" என்று கூறியுள்ளார்.
புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஸ்மிருதி பேசியபோது, "இந்திய ஜெர்சியை அணிந்து மைதானத்தில் இறங்கும்போது, நாட்டிற்காக விளையாடி போட்டியில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனதில் இருக்காது" என்றார்.
ஸ்மிருதி மந்தனா அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களால் சமீப காலமாக செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.
பாடகர் பலாஷ் முச்சலுடன் நடைபெறவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாக அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது பலாஷ் முச்சலும் தனது வாழ்வில் முன்னோக்கிச் செல்ல முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், அது ஒத்திவைக்கப்பட்டது.
ஸ்மிருதி மந்தனாவின் தந்தையின் உடல்நலக் குறைவு காரணமாகத் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாகக் திருமண நாளில் அவரது மேலாளர் கூறியிருந்தார்.
'கருத்து வேறுபாடு என்பது விளையாட்டின் ஒரு பகுதி'
கடந்த மாதம்தான் இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
அந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 45 ரன்கள் எடுத்தார்.
விளையாடும்போது அவருக்கும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இடையே எப்போதாவது வாக்குவாதம் ஏற்படுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஸ்மிருதி, அதே நிகழ்வில் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுரை சுட்டிக்காட்டி, "இதை நீங்கள் வாக்குவாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் கருத்து வேறுபாடு என்பது விளையாட்டின் ஒரு பகுதி. விளையாட்டைப் பற்றி எங்களுக்குள் விவாதம் நடந்துகொண்டே இருக்கும். கருத்து வேறுபாடு இருப்பதன் அர்த்தம், நீங்கள் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள் என்பதே" என்றார்.
தனக்கும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசிய ஸ்மிருதி, "நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம். நான் அவரிடம் ஒரு விஷயத்திற்கு முடியாது என்று எளிதாகச் சொல்ல முடியும், அவரும் என்னிடம் முடியாது என்று சொல்ல முடியும்" என்றார்.
ஸ்மிருதியின் கூற்றுப்படி, அவர் ஒருமுறை மைதானத்தில் இறங்கிவிட்டால், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான 'அனைத்து சிக்கல்களையும் மறந்து, கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.'
'ஒவ்வொரு முறையும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும்'
கிரிக்கெட் உங்களுக்கு வாழ்க்கையில் என்ன கற்றுக் கொடுத்தது?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஸ்மிருதி, "ஒவ்வொரு இன்னிங்ஸையும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கிரிக்கெட் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. மோசமான நாட்களும் உண்டு, நல்ல நாட்களும் உண்டு. ஆனால் நீங்கள் தொடர்ந்து உங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.
நமக்காக மட்டுமல்ல, நம்முடன் நிற்பவர்களுக்காகவும் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் தனக்குக் கற்றுக் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
ஸ்மிருதி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் 57.18 என்ற சராசரியுடன் 629 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும்.
மேலும், 117 ஒருநாள் போட்டிகளில் 48.38 என்ற சராசரியுடன் 5,322 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் 14 சதங்கள் அடித்துள்ளார்.
திருமணம் பற்றி என்ன சொன்னார்?
ஸ்மிருதி மந்தனா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, பலாஷ் முச்சலுடனான திருமணம் முறிந்த தகவலைத் தெரிவித்தார்.
மேலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் வெளியிட்ட பதிவில், "கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகமான யூகங்கள் நிலவி வந்தன. அதைப் பற்றி இப்போது வெளிப்படையாகப் பேசுவது அவசியம் என்று நான் உணர்ந்தேன்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு