தமிழ்நாடு எல்லைக்குள் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: தீர்வு என்ன ?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து, சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து ஒரு வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில், இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள 17 மாவட்டங்களில் கழிவுகள் எப்படி கையாளுப்படுகின்றன என்பது பற்றிய விரிவாவான அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கழிவுகளை கொட்டுவது குறித்து உறுதியான முடிவுகளை இரண்டு மாநில அரசு எடுக்கவில்லையெனில், அண்டை மாநிலங்களில் கழிவுகளை கொட்டும் நடைமுறையை நிறுத்த முடியாது என்று கூறியுள்ள பசுமை தீர்ப்பாயம், இரண்டு மாநில தலைமை செயலாளர்களையும் இந்த வழக்கில் இணைத்துள்ளது.
தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களும், கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களும் 2023 ஜனவரி 20ம்தேதி பதில் தெரிவிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவக் கழிவுகள் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசி, கையுறை, முகக்கவசம், செயற்கை சுவாச குழாய்கள், சிறுநீர் பைகள், ரத்தம் மற்றும் சீழ் துடைத்த பஞ்சுகள் உள்ளிட்டவை கழிவுகள் பட்டியலில் அடங்கும். ஒரு சில மருந்து பொருட்கள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் படுக்கை உறைகள், நாப்கின்கள் போன்றவையும் கழிவுகளாக கொட்டப்படுகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை என்ன?
கடந்த சில ஆண்டுகளாக தமிழக எல்லையில் உள்ள கேரள மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலமாக பலமுறை மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. மருத்துவக் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு, அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், பல மனுக்கள் பொதுமக்கள் சார்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவது குறித்த செய்திகளை கவனித்த பசுமை தீர்ப்பாயம் இரண்டு மாநில அரசுகளும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு மாநிலங்களில் உள்ள எல்லை மாவட்டங்களில் கழிவுகளை எப்படி கையாளுகிறார்கள் என்ற விரிவான அறிக்கையை கேட்டுள்ளது.
கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாக இருப்பது ஏன் என்றும் அதற்கான தீர்வுகள் என்ன என நிபுணர்களிடம் பிபிசி தமிழ் கேட்டறிந்தது.
மருத்துவக் கழிவுகள் கையாளப்படுவதற்கு பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் 2016ல் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வழிமுறைகளை பின்பற்றினால் இதுபோன்ற கழிவுகளை அண்டை மாநிலங்களில் கொட்டுவதும், முறையற்ற வகையில் கழிவுகளை கொட்டுவதை தடுக்கமுடியும் என்கிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

''இந்த விவகாரத்தில் குப்பை கையாளுவதை பிரதானமாக கொண்டு செயல்படுவதை விட எல்லை பிரச்னையாக பார்ப்பதால்தான் தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சட்டத்திற்கு புறம்பாக மருத்துவக் கழிவை கொட்டுபவர்கள் யார், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற விதியை பின்பற்றவேண்டும். அதனை விடுத்து, குப்பையை கொண்டுவந்து கொட்டும் லாரிகளை மட்டுமே பிரச்னையாகப் பார்க்கிறோம். எல்லைக் கோடுகளை வைத்துக்கொண்டு உண்மையான பிரச்னையை புறக்கணிக்கக்கூடாது. ஒருவேளை எல்லை கோட்டிற்குள் தமிழக எல்லை மாவட்டத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் குப்பைகளை கொட்டினாலும், தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும். அதனால், நிரந்தரத் தீர்வை நோக்கி செயல்படவேண்டியதுதான் தற்போதைய தேவை,'' என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.
செய்ய வேண்டியது என்ன ?

பட மூலாதாரம், Getty Images
மருத்துவக் கழிவுகளைக் கையாள்வதில் இரு மாநில அரசுகளும் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்தார் நித்யானந்த் ஜெயராமன்.
இரண்டு மாநில அதிகாரிகளும் குப்பை எங்கிருந்து உருவாகிறது, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் குப்பைகளை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைச் சோதிக்கவேண்டும். அந்த மருத்துவமனைகளில் சட்டவிதிமுறைகளின்படி, மருத்துவ கழிவுகள் கையாளப்படுகிறதா, அவ்வாறு கையாளப்படவில்லையெனில், அதற்கான நடவடிக்கை எடுத்து அதனை உறுதிப்படுத்துவது அவசியம்.
மருத்துவக் கழிவுகளில் தொற்று ஏற்படுத்தும் கழிவு, தொற்று ஏற்படுத்தாத கழிவுகள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. அதில் தொற்று ஏற்படுத்தும் கழிவுகளை இன்சனெரேட்டர் கொண்டு எரிக்க வேண்டும். அதற்கான வசதிகளை உறுதிசெய்யவேண்டும்.
சோதனைச் சாவடியில் மாநில எல்லையில் வரும் லாரிகளை திருப்பி அனுப்புவது தற்காலிகத் தீர்வு.
மருத்துவக் கழிவுகளை கொட்டும் இடங்களில் உள்ள நீர்நிலைகளை சோதித்தால், கழிவுகள் கொட்டுவதால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டை கண்டறியலாம்.
இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணைந்து இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தவேண்டும். வெறும் நோட்டீஸ் கொடுப்பது போன்ற நடவடிக்கை அல்லாமல், குற்றவியல் நடவடிக்கை தேவைப்படும் இடங்களில் அதனை அமல்படுத்த முயற்சிகள் எடுக்கவேண்டும் என்கிறார் அவர்.
மருத்துவக் கழிவுகளை கையாளுவதில் நவீன கண்டுபிடுப்புகள் என்ன ?
சென்னை ஐஐடி பேராசிரியர் இந்துமதி நம்பி, தற்போது மருத்துவக் கழிவுகள் கையாள்வது தொடர்பான ஒரு ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் பேசியபோது, மருத்துவக் கழிவுகளை எந்த வகையில் பயனுள்ள பொருளாக மாற்றமுடியும் என்று விளக்கினார்.

பட மூலாதாரம், INDHUMATHI
''மருத்துவக் கழிவு என்றதும், தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சத்தில்தான் நாம் இருக்கிறோம். தொற்று ஏற்படுத்தும் கழிவுகள் எரித்துவிட்டு, தொற்று ஏற்படுத்தாத கழிவுகள், அதாவது முகக் கவசம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒருமுறை மட்டும் அணியும் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கலந்த கழிவுகளை எண்ணெய்யாக மாற்றமுடியும். உருக்கப்பட்ட அந்த எண்ணெயை பலவிதமான ஆலைகளில் பயன்படுத்தமுடியும். தற்போது நாங்கள் உருவாகியுள்ள மருத்துவக் கழிவுகளை எண்ணெயாக மாற்றும் கருவியை சோதனை செய்வதற்கான முயற்சியில் உள்ளோம்,'' என்கிறார் இந்துமதி.
''மருத்துவக் கழிவுகளைப் பொறுத்தவரை, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் எல்லாமே அபாயகரமானவை என்ற பார்வையை மாற்றவேண்டும். குப்பை சேகரிக்கும் நிறுவனங்களை ஊக்குவித்து, தொற்று ஏற்படுத்தாத மருத்துவக் கழிவுகளை கையாள்வது எப்படி என்றும் நவீன கருவிகளை கொண்டு எண்ணெய் தயாரித்து, அதில் அவர்களுக்கு லாபம் தரும் தொழில் யுக்தியை கொடுத்தால், கழிவுகளை கொட்டும் பிரச்னையை தீர்வுக்குக் கொண்டுவரலாம்,'' என்கிறார்.
''உதாரணமாக, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக குறைந்தபட்ச விலை கொடுத்த வாங்கும் நிறுவனங்கள் இருப்பதால்தான் பலரும் அதனை சேகரிக்கிறார்கள். அதுபோல, மருத்துவக் கழிவுகளை காசாக்குவது எப்படி என்ற விதத்தில் ஆய்வுகளை மேம்படுத்தினால் மேலும் பல தீர்வுகளை நாம் கண்டறியலாம்,'' என இந்துமதி கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















