இந்தியா 8வது வெற்றி: அதிரடியில் மிரட்டும் தென் ஆப்ரிக்காவை 83 ரன்களில் சுருட்டியது எப்படி?

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி 8-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரையிலான போட்டிகளில் 400 ரன்களை அநாயசமாக குவித்து எதிரணிகளை மிரட்டி வந்த தென் ஆப்ரிக்காவை வெறும் 83 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

சச்சின் சாதனையை சமன் செய்த கோலியின் சதம் உதவியுடன் 326 ரன்களைக் குவித்த இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. இதன் மூலம் 8 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் தொடர்கிறது.

சேவாக்கை நினைவூட்டிய ரோஹித்

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் ஷம்ஸி சேர்க்கப்பட்டிருந்தார்.

ரோஹித் சர்மா, கில் ஆட்டத்தைத் தொடங்கினர். இங்கிடியின் முதல் ஓவரில் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அதன்பின் ரோஹித் சர்மா வெளுத்து வாங்கினார். ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்தபோது, 15 ஆண்டுகளுக்கு முன் வீரேந்திர சேவாக்கின் ஆட்டத்தைப் பார்ப்பதைப் போல் இருந்தது.

விக்கெட் இழப்பை பற்றிக் கவலைப்படாமல், எதிரணி பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைக்கும் விதத்தில் சேவாக்கின் விளாசல் இருக்கும். சேவாக் களத்தில் இருந்தாலே பந்துவீச்சாளர்கள் எவ்வாறு பந்துவீசுவது என்று தெரியாமல் திணறுவார்கள். அதே உத்தியை இன்று ரோஹித் சர்மா கையாண்டார்.

யான்சென் வீசிய 2வது ஓவரில் சுப்மான் கில் 2 பவுண்டரி உள்ளிட்ட 17 ரன்கள் சேர்த்தார். இங்கிடி வீசிய 3வது ஓவரில் ரோஹித் சர்மா 2 பவுண்டரியும், கில் ஒரு பவுண்டரி என அதிரடியாக ஆடினர். யான்சென் வீசிய 4வது ஓவரிலும் ரோஹித் 2 பவுண்டரிகள் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.

இங்கிடி வீசிய 5-வது ஓவரில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 5 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. 6-வது ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து பவுமாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா ரன்னில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

விக்கெட் இல்லாத யான்சென்

அடுத்துவந்த கோலி, கில்லுடன் இணைந்தார். யான்சென் வீசிய 7-வது ஓவரில் கில் ஒரு சிக்ஸர் விளாசினார். அதன்பின் கோலி, கில் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசி ரன்ரேட்டை ஏறுமுகத்திலேயே வைத்திருந்தனர். ரபாடா வீசிய 10-வது ஓவரில் கோலி தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இந்திய அணி பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சென் பவர்ப்ளேயில் விக்கெட் இன்றி இருந்ததில்லை. முதல்முறையாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்தான் யான்சென் பவர் ப்ளேயில் விக்கெட் இன்றி இருந்தார்.

காணொளிக் குறிப்பு, கோலி: சச்சின் கணிப்பை உண்மையாக்கிய கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன்

கில்லுக்கு படம் காட்டிய மகராஜ்

11-வது ஓவரை கேசவ் மகராஜ் வீச வந்தார். அவரை அழைத்தமைக்கு நல்ல பலன் கிடைத்து. மகராஜ் வீசிய 3வது பந்தை ஃபிரன்ட் புட் செய்து கில் அடிக்க முயன்றார். மகராஜ் பந்தை நன்றாக டாஸ் செய்து தூக்கி வீசினார், அந்த பந்தை ஸ்ட்ரைக் செய்தபோது பந்து போல்டாகியது.

கில் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 52 ஆயிரம் ரசிகர்கள் இன்று வந்திருந்தனர். கில் ஆட்டமிழந்து சென்ற போது, மைதானமே மவுனமாக இருந்தது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

நிதான ஆட்டம்

11-வது ஓவர்கள் முதல் 20வது ஓவர்கள் வரை இந்திய அணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் வகையில் மகராஜ், ரபாடா, இங்கிடி பந்துவீசினர். இதனால் இந்த 10 ஓவர்களில் இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் மந்தமாக பேட் செய்தார். இதனால் 11வது ஓவருக்குப்பின் எந்த பவுண்டரியும் இந்திய அணிக்குக் கிடைக்கவில்லை.

முதல் 10 ஓவர்களில் ரோஹித் சர்மா அமைத்துக் கொடுத்த ரன்ரேட்டை, கோலி, ஸ்ரேயாஸ் நழுவவிட்டனர். ரோஹித், கில் களத்தில் இருந்தபோது 14 பவுண்டரி, 3 சிக்ஸர் அடிக்கப்பட்டநிலையில் 10 முதல் 20 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது.

விராட் கோலி மட்டுமே ஓரளவுக்கு ரன்களை சேர்த்துவந்தார், ஆனால், ஸ்ரேயாஸ் மந்தமாக ஆடியதால், தேநீர் இடைவேளையின்போது, கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் திராவிட் ஆகியோர் இஷான் கிஷனிடம் ஏதோ அறிவுரை கூறிஅனுப்பினர். இதன்பின்பு ஸ்ரேயாஸ் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

பிறந்த நாளில் கோலி அசத்தல்

மகராஜ் வீசிய 28-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸர் விளாசி, 10 ரன்கள் சேர்த்தார். பொறுமையாக பேட் செய்த கோலி, தனது 35-வது பிறந்தநாளில் 55 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 20 முதல் 30 ஓவர்கள் இடைவெளியில் இந்திய அணி பேட்டர்கள் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பேட் செய்ததால், ஸ்கோர் வேகமெடுத்தது.

கியரை மாற்றிய ஸ்ரேயாஸ்

யான்சென் வீசிய 31-வது ஓவரில் ஸ்ரேயாஸ் 3 பவுண்டரிகள் உள்ளிட்ட14 ரன்கள் சேர்த்து ரன் சேர்க்கும் கியரை மாற்றினார். 64 பந்துகளில் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் ஸ்ரேயாஸ் 34 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார், அதன்பின் அடுத்த 34 பந்துகளில் 48 ரன்களை விளாசியுள்ளார்.

மார்க்ரம் வீசிய 34-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸரும், கோலி பவுண்டரியும் அடித்து 14 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 34 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது.

இங்கிடி வீசிய 37-வது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் கடைசிப் பந்து ஸ்லோ பாலாக வந்ததை கவனிக்காமல் மார்க்ரம்மிடம் கேட்ச் கொடுத்து ஸ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ்-கோலி கூட்டணி 134 ரன்கள் சேர்த்தனர்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ரன்ரேட் மீண்டும் மந்தம்

அடுத்துவந்த கேஎல்.ராகுல், கோலியுடன் இணைந்தார். ராகுல் வந்தபின் இந்திய அணியின் ரன் சேர்க்கும் வேகம் படுத்துவிட்டது. ரபாடா, இங்கிடியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்த்து ஷாட்களை அடிக்க ராகுல் திணறினார், கோலியும் ஒரு பவுண்டரிக்கு மேல் அடிக்க முடியாமல் ஒரு ரன், 2 ரன்களாகவே அடித்தார். இதனால் 40 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

40 ஓவர்களுக்குப் பின்பும் கோலியும், ராகுலும் ரன் சேர்க்க சிரமப்பட்டனர். அதிலும் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மந்தமாக இருந்தது. பிறந்தநாளில் சதம் அடிக்க வேண்டும், சச்சினின் 49-வது சதத்தை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு கோலி பந்துகளை வீணடித்தார்.

யான்சென் வீசிய 43-வது ஓவரில் டூசெனிடம் கேட்ச் கொடுத்து, ராகுல் 8 ரன்னில் வெளியேறினார். 17 பந்துகளில் ராகுல் 8 ரன்கள் சேர்த்த ராகுல் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார், ஓவருக்கு ஓரு பவுண்டரி என படபடவென ரன்களைச் சேர்த்தார். ஆனால், விராட் கோலி 102 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆமை வேகத்தில் பேட் செய்தார். டெத் ஓவர்களில்தான் ரன் சேர்க்க முடியும், ஆனால், அந்த ஓவர்களை விராட் கோலி தேவையற்ற முறையில் வீணடித்து ரன்ரேட்டை உயரவிடாமல் இழுத்துப் பிடித்தார். டெத் ஓவரில் விராட் கோலி 150 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தும், 1,486 ரன்களை சேர்த்திருந்தும் இன்று ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் அவரது பேட்டிங் அமைந்திருந்தது.

ஒருநாள் போட்டியைப் பார்க்கிறோமா அல்லது டெஸ்ட் போட்டியை பார்க்கிறோமோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோலியின் பேட்டிங் குறித்து மீம்ஸ்களையும், கிண்டல்களையும் உலவவிட்டனர்.

ஜான்சன் வீசிய 45-வது ஓவரில் சூர்யகுமார் 2 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சேர்த்ததால் ஸ்கோர் வேகமெடுத்தது. ஷம்சி வீசிய 46வது ஓவரை வீணடிக்கும் வகையில் கோலி பேட்செய்து ஒரு ரன் சேர்த்தார், அதே ஓவரில் ஸ்ட்ரைக் சூர்யகுமாருக்கு கிடைத்தவுடன் பவுண்டரி அடித்த நிலையில் 22 ரன்களில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். சூர்யகுமார் களத்தில் இருந்தவரை இந்திய அணி 340 ரன்கள்வரை எடுக்கும் வாய்ப்பு இருந்தது. அவர் ஆட்டமிழந்தபின், அந்த நம்பிக்கையும், கணிப்பும் குறைந்தது.

அடுத்துவந்த ஜடேஜா, கோலியுடன் இணைந்தார். ரபாடா வீசிய 47-வது ஓவரில் ஒரு பவுண்டரி உள்ளிட்ட 8 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 300 ரன்கள் சேர்த்தது.

சுயநலத்துடன் ஆடினாரா கோலி?

தனிப்பட்ட சாதனைக்காக பந்துகளை வீணடித்து பேட் செய்த விராட் கோலி, அதை நிறைவேற்றினார். ரபாடா வீசிய 49-வது ஓவரில் ஒரு ரன் சேர்த்து 119 பந்துகளில் தனது 35-வது பிறந்தநாளில், 49-வது சதத்தை நிறைவு செய்து சச்சின் சாதனையை சமன் செய்தார். 49-வது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 309 ரன்கள் சேர்த்தது.

இங்கிடி வீசிய கடைசி ஓவரில் ஜடேஜா அதிரடியாக ஆடி 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 16 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 326 ரன்கள் குவித்தது.

விராட் கோலி 101 ரன்களிலும், ஜடேஜா 29 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

‘வைடு’களில் சாதனை

தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் மட்டும் 21 வைடு பந்துகளை வீசியது. யான்சென் தொடங்கி வைத்த வைடு பந்துகள், அடுத்தடுத்து பல பந்துவீச்சாளர்கள் என சுழற்பந்துவீச்சாளர்களும் வீசினர். ஏற்கெனவே வைடு பந்துகள் வீசியதில் பெரிய சாதனையை தென் ஆப்ரிக்கா செய்துள்ளது. 2000ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 25 வைடுகளை தென் ஆப்ரிக்கா வீசியது. அதன்பின் 2008ம் ஆண்டில் கென்ய அணிக்கு எதிராக 21 வைடுகளை தென் ஆப்பிக்கா வீசியது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றிய டீ காக்

327 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது. டீகாக், பவுமா ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரில் 2 ரன்கள் சேர்த்தது தென் ஆப்பிரிக்கா

சிராஜ் வீசிய 2வது ஓவரில் 3வது பந்தில் பவுண்டரி அடித்த டீ காக், 4-வது பந்தில் க்ளீன் போல்டாகி 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிராஜ் தனது லென்த்தைக் குறைத்து, லேசான கட்டருடன் வீசியதால், டீ காக்கால் பந்தை அடிக்கமுடியாமல் போல்டாகியது.

கடந்த போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக இருந்து 4 சதங்கள் அடித்த டீ காக் 5 ரன்னில் வெளியேற்றி மிகப்பெரிய விக்கெட்டை இந்தியா சாய்த்தது. அடுத்துவந்த டூசென்,பவுமாவுடன் சேர்ந்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் பவுமா பவர்ப்ளே ஓவர்கள் வரை நீடித்திருப்பதே அரிது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஷமியிடம் மோதலாமா!

இந்த ஆட்டத்திலாவது நீடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தற்கு ஏமாற்றம் அளித்தார். ஜடேஜா வீசிய 9-வது ஓவரில் 11 ரன்னில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு வந்த மார்க்ரம் வந்தவேகத்தில் 10வது ஓவரை வீசிய ஷமியின் பந்துவீச்சில் அதிரடியாக 2 பவுண்டரிகள் விளாசினார்.

இந்த சீசனில் ஷமியின் ஃபார்ம் தெரியாமல் அதிரடியாக பவுண்டரி விளாசிய மார்க்ரம் அதற்கான பலனை அனுபவித்தார். 10-வது ஓவரின் 5வது பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து மார்க்ரம் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பவர்ப்ளே ஓவருக்குள் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்தது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

கிளாசனுக்கே இந்த நிலைமையா?

கிளாசன், டூசென் கூட்டணி சேர்ந்து அணியின் விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், பல போட்டிகளில் அதிரடியாக பேட்டை சுழற்றிய கிளாசன் ஜடேஜா பந்துவீச்சில் திணறினானார். ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் கிளாசன் கால்காப்பில் வாங்கி ஒரு ரன்னில் வெளியேறினார்.

இன்றைய கிரிக்கெட் உலகில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய பேட்டர்களில் முதன்மையானவர் கிளாசன். ஆனால், கிளாசனே ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று கால்காப்பில் வாங்கினார், அதற்கு ஜடேஜா அப்பீல் செய்யவே கள நடுவர் அவுட் வழங்கவில்லை. இதையடுத்து, கேப்டன் ரோஹித் சர்மா 3வது நடுவரிடம் செல்லவே, ரீப்ளேயில் கிளாசன் இடதுகாலில் பந்துபட்டு ஸ்டெம்பைக் குறிவைத்தது தெரியவந்தது. இதையடுத்து, கிளாசன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

டூசெனுக்கு அவுட் வழங்க மறுப்பு

14-வது ஓவரை ஷமி வீச வந்தார். ஷமியின் முதல்பந்திலேயே டூசென் கால்காப்பில் வாங்கி 13 ரன்னில் ஆட்டமிழந்தார். இதற்கும் நடுவர் அவுட் வழங்கவில்லை. ஆனால், ரீப்ளேயில் டூசெனின் கால்காப்பில் பட்டுதான் பந்து பேட்டில்பட்டது தெரியவந்தது, அதிலும் ஸ்டெம்பை மறித்து கால்காப்பில் வாங்கியது தெரியவந்ததால் டூசென் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்ரிக்கா திணறியது. மில்லர், யான்சென் கூட்டணி அணியை மோசமான வீழ்ச்சியிலிருந்து தூக்கி நிறுத்த முயன்றனர். 15 ஓவரில்தான் தென் ஆப்ரிக்க அணி 50 ரன்களை எட்டியது. ஷமியின் துல்லியமான, லென்த் பந்துவீச்சில் யான்சென், மில்லர் ரன் சேர்க்க திணறினர். பல அணிகளுக்கு எதிராக 300 ரன்களை அனாசயமாக சேஸ் செய்த தென் ஆப்ரிக்க பேட்டர்கள் இந்திய பந்துவீச்சாளர்கள் முன் சரணடைந்தனர்.

ஜடேஜா வீசிய 17-வது ஓவரில் மில்லர் 11 ரன்னில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேசவ் மகராஜும் நிலைக்கவில்லை. ஜடேஜா வீசிய19-வது ஓவரில் க்ளீன் போல்டாகி7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா பந்துவீசத் தொடங்கியது முதல் அவரின் ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார், தென் ஆப்ரிக்காவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார். 68 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையை தென் ஆப்ரிகக்க சந்தித்தது.

ஜடேஜா வீசிய 19-வது ஓவரில் 4வது பந்தை கேசவ் மகராஜ் பெரிய ஷாட் அடிக்க முயன்றார். ஆனால், பந்து அவரை பீட்டன் செய்து கிளீன் போல்டாகியது. மகராஜ் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஜடேஜா பந்துவீசத் தொடங்கியது முதல் அவரின் ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார், தென் ஆப்ரிக்காவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார். 68 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையை தென் ஆப்ரிக்கா சந்தித்தது.

ஜடேஜா வீசிய 19-வது ஓவரில் 4வது பந்தை கேசவ் மகராஜ் பெரிய ஷாட் அடிக்க முயன்றார். ஆனால், பந்து அவரை பீட்டன் செய்து கிளீன் போல்டாகியது. மகராஜ் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்து தடுமாறியது. குல்தீப் யாதவும், ஜடேஜாவும் சேர்ந்து தென் ஆப்ரிக்க டெய்லண்டர்களான யான்சென், ரபாடாவை ரன் சேர்க்கவிடாமல் துல்லியமாகப் பந்துவீசி திணறவிட்டனர்,

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

குல்தீப் வீசிய 26-வது ஓவரில் யான்சென் 14ரன்கள் சேர்த்தநிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சிறிது நேரமே தாக்குப் பிடித்த ரபாடாவும் வெளியேறினார். ஜடேஜா வீசிய 26-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 6 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த லுங்கி இங்கிடி வந்தவேகத்திலேயே நடையைக் கட்டினார். குல்தீப் வீசிய 27-வது ஓவரின் முதல் பந்தில் இங்கிடி க்ளீன் போல்டாகி ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸ் 27.1 ஓவர்களில் 83 ரன்களில் முடிந்தது,

இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது. இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். ஷமி, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

35 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த தென் ஆப்ரிக்க அணி, அடுத்த, 58 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிலும் 67 ரன்களில் இருந்து 83 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்ரிக்கா.

2-வது இந்தியர் ஜடேஜா

உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஜடேஜா பெற்றார். இதற்கு முன் யுவராஜ் சிங் 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஆட்ட நாயகன் கோலி

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன், 2.456 நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்தில் இருக்கிறது. தென் ஆப்ரிக்க அணி 12புள்ளிகளுடன், 1.376 நிகர ரன்ரேட்டுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.

இந்த போட்டியில் முத்தாய்ப்பாக விராட் கோலி தனது 35-வது பிறந்தநாளான இன்று, சர்வதேச அரங்கில் தனது 49-வது சதத்தைபதிவு செய்தார். இதன் மூலம் கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை கோலி சமன் செய்தார். இந்தப் போட்டியில் சதம் கண்ட விராட் கோலி (101)ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொல்கத்தா ஈடன் கார்டனில் உள்ள 5வது ஆடுகளத்தின் ஒருமுனை பேட்டர்களுக்கும், மற்றொரு முனை சுழற்பந்துவீச்சாளர்களுக்கம் நன்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார்போல், தென் ஆப்ரிக்க சேஸிங்கில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷமி, சிராஜின் துல்லியமான, லைன் லென்த் பந்துவீச்சுக்கு தென் ஆப்ரிக்க பேட்டர்கள் இரையாகினர். அதேபோல ஜடேஜா, குல்தீப் யாதவின் நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சுக்கும் தாக்குப் பிடிக்கமுடியாமல் நிலைகுலைந்தனர்.

"பேட் செய்வது கடினமாக இருந்தது" - தென் ஆப்ரிக்க கேப்டன்

தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறுகையில் “ எங்கள் முன் இருந்த சவால் தெரியும், எங்களைச் சுற்றியிருந்த சூழலும் தெரியும். எந்த நியாயமும் கற்பிக்கவில்லை. பேட்டிங்கைப் பொறுத்தவரை, முதல் 10 ஓவர்கள் பந்துகளைச் சமாளித்து ஆடுவது சவாலாக இருந்தது. அதன்பின்பும் சிறப்பாக ஆடினோம். இந்திய அணியில் சீராக விக்கெட்டுகளை எடுக்கமுடியாமல் பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டது தவறு. இந்த சூழல் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தது, பலவற்றைக் கற்றுக்கொண்டோம். ஆடுகளத்துக்கு ஏற்ப எங்களின் ஆட்டத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்தார்

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

"கோலியால்தான் முடியும்" - ரோகித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “கடந்த 3 போட்டிகளைப் பார்த்தால் நாங்கள் சூழலுக்கு ஏற்றாற்போல் விளையாடுகிறோம், சூழலை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இங்கிலாந்து அணிக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தினோம்.

கடந்த போட்டியில் தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டை இழந்தாலும், நல்ல ஸ்கோரை எடுத்தோம், வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இன்று நடந்த போட்டியில் ஆடுகளம் சவாலானது, ரன் சேர்ப்பது கடினமானது. ஆனால், கோலி போன்ற அனுபவசாலிகள்தான் சூழலுக்கு ஏற்ப ஆட முடியும். ஸ்ரேயாஸையும் மறக்க முடியாது” எனத் தெரிவித்தார்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)