பிரியங்கா சோப்ரா: 'நடிகர்களுக்கு இணையான சம்பளம் நடிகைகளுக்கு தரப்படுவது இல்லை'

பட மூலாதாரம், Getty Images
திரையுலகில் அது பாலிவுட் ஆனாலும் சரி, ஹாலிவுட் ஆனாலும் சரி ஆண் நடிகர்களுக்கு இணையான சம ஊதியம் நடிகைகளுக்கு தரப்படுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ்.
2022ஆம் ஆண்டுக்கான உலகம் முழுவதும் உள்ள ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.
அதில் ஒருவராக இந்திய நடிகையும் முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவும் இடம்பிடித்துள்ளார்.
இதையொட்டி அவரிடம் பிபிசி நடத்திய நேர்காணலில் இடம்பெற்ற சில கேள்விகளும் அதற்கான பதிலையும் இங்கே வழங்குகிறோம்.
உலக அழகி போட்டியில் வெற்றி பெற்று 23 ஆண்டுகள் கடந்த பிறகு, இந்த வயதிலும் திரைத்துறையில் நீங்கள் நிலைத்திருக்க என்ன காரணம்?
"பேஷன் துறையில் இந்த 40 வயதில் நான் இருப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. சிறப்பாக நடனமாடுகிறேன் எனும் போது உடல்வாகை வைத்து என்னை தீர்மானிப்பதில் எனக்கு விருப்பமில்லை. பேஷன் துறையை சுற்றி நிறைய சிக்கல்கள் உள்ளன. அதே நேரம் அவற்றால் ஊக்கமளிக்கவும் முடியும். நிறைய விஷயங்கள் மாற வேண்டும். சிறிய நகரில் இருந்து வந்த எனக்கு 'எனது வாழ்க்கை மாறிவிட்டது, எல்லா கேமராவும் என்னை நோக்கி இருக்கிறது' என்று அந்த நேரத்தில் ஆச்சரியமாக இருந்தது." உங்கள் நிறம் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?
"நான் கருப்பாக இருக்கிறேன், டஸ்கியாக இருக்கிறேன் என்றார்கள். டஸ்கி என்றால் என்ன? முன்பு நாம் கருப்பாக இருக்கிறோம், நாம் அழகாக இல்லை என்று நினைத்திருக்கிறேன். அதே சமயம், சக நடிகர்களை விட நான் திறமையானவள் என்று நினைத்தாலும் அதை நிரூபிக்க நாம் கடினமாக உழைக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். ஏனெனில் இது மிகவும் இயல்பானது. நான் வளரும்போது எனது தொழில்முறை வாழ்க்கையில் இது சரியா தவறா என தெரியாத விஷயங்களைப் பார்த்தேன் என நினைக்கிறேன். பிறகு நான் அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது."

பட மூலாதாரம், Getty Images
திரை உலகில் நடிகர்கள், நடிகைகளுக்கு இடையே உள்ள சம்பள வேறுபாடு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
"60 படங்களுக்கும் மேல் நான் நடித்து விட்டேன். ஆனால், என்னுடன் நடிக்கும் ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளம் எனக்கு கொடுக்கப்பட்டதே இல்லை. நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே நான் வாங்குகிறேன். இது மிகப்பெரிய வித்தியாசம். இன்றும் நிறைய நடிகைகள் இதை எதிர்கொள்கிறார்கள். தற்போது பாலிவுட்டில் நான் நடித்தால் ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளத்தை கேட்பேன். "
சமூக ஊடகங்களில் உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
"சமூக ஊடகங்களில் எல்லோரும் எப்போதும் நல்லவராக இருக்க முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் 'நீ இந்தத் தவறை செய்தாய், அந்தத் தவறை செய்தாய், இதை பற்றி நீ எதுவும் சொல்லவில்லை, இதை பற்றி நீ கருத்து சொன்னாய்' என்று சிலர் சொல்வார்கள். நம்மால் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. இதை ஆரம்பத்திலேயே நான் உணர்ந்துவிட்டேன்.
என்னுடைய தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்த போது அனைவரும் நம்மை விரும்ப வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
நான் அரசியல்வாதி அல்ல, நான் நடிகர். என்னால் சட்டத்தை மாற்றவோ உருவாக்கவோ முடியாது. ஆனால், என்னால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
நாம் தினமும் என்ன செய்கிறோம், நம்மால் நல்லவராக இருக்க முடியுமா, நம்முடைய வாழ்க்கையில் என்ன செயலாற்றுகிறோம் என்பதை பற்றிதான் நான் சிந்திப்பேன்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





























