மதுரையில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்ற வளர்ப்புத் தந்தை - வளர்ப்புத் தாயும் கைது

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
மதுரையில் 6 மாதம் முதலே எடுத்து வளர்த்த சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தையே பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. அவரது மனைவியின் தங்கை மகளான அந்த சிறுமிக்கு 11 வயதே ஆகிறது. இதற்கு உடந்தையாக இருந்த வளர்ப்புத் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 வயது சிறுமிக்கு என்ன நடந்தது? வளர்ப்புத் தந்தைக்கு வளர்ப்புத் தாய் எந்த வகையில் உடந்தையாக இருந்தார்? இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்
மதுரையில் சிறுமிக்கு நடந்தது என்ன?
மதுரை கூடல்புதூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மார்ச் 21-ஆம் தேதி தனது வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்த அந்த சிறுமி மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியின் தாத்தா கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சந்தேக மரணம் என வழக்குப் பதிவு
சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 174 பிரிவின் கீழ் சந்தேக மரணமாக வழக்கைப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர்.
சிறுமி 6 மாத குழந்தையாக இருந்த போதே அவரது தாயார் இறந்துவிட்டார். அவரது தந்தையும் விட்டுச் சென்றதால் சிறுமி் அவரது பெரியம்மா வீட்டில் வளர்ந்து வந்திருக்கிறார். அவரது பெரியப்பா ராணுவத்தில் பணியாற்றி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
உடற்கூறு ஆய்வு அளித்த அதிர்ச்சி தகவல் என்ன?
சிறுமியின் உடற்கூறு ஆய்வு கடந்த மார்ச் 22-ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. அதில், முதற்கட்டமாக சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

வளர்ப்பு தாய், தந்தை போலீசாரிடம் கூறியது என்ன?
“சம்பவ நாளன்று 11 வயது சிறுமி பிற்பகல் குளிப்பதற்காக சென்று விட்டு வெளியே வரவில்லை. இதில் சந்தேகம் அடைந்த நான், மேல் வீட்டில் உள்ள பெண்ணின் உதவியுடன் கதவை தட்டி பார்த்தேன். அப்போதும் கதவு திறக்கப்படாததால் அதனை உடைத்து உள்ளே பார்த்த போது சிறுமி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்”, என்று போலீசாரிடம் சிறுமியின் வளர்ப்புத் தாயும், தந்தையும் தெரிவித்துள்ளனர்.
இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
போலீசாரிடம் சிக்கியது எப்படி?
போலீசாருக்கு அவர்கள் இருவரது பேச்சில் சந்தேகம் எழுந்துள்ளது. மீண்டும் அவர்களை அழைத்து விசாரித்த போது, சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்ய முயன்று கொலை செய்ததை வளர்ப்பு தந்தை ஒப்புக்கொண்டு இருக்கிறார். கொலையை மறைப்பதற்கு அவரது மனைவி உடந்தையாக இருந்ததை கண்டுபிடித்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ராணுவத்திலிருந்து விடுமுறைக்கு வந்த வளர்ப்பு தந்தை
காலையில் சிறுமியை நான் பார்த்தேன் என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத பக்கத்து வீட்டு நபர். அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில்,
“மார்ச் 21-ஆம் தேதியன்று காலையில் நான் சிறுமியை பார்த்தேன், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். தேர்வுகள் முடிந்துவிட்டதாக என்னிடம் கூறினார்.
அவரது வளர்ப்புத் தந்தை சிறுமி உயிரிழந்த இரண்டு தினங்களுக்கு முன்புதான் ராணுவத்திலிருந்து ஒரு மாத கால விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தார். பிற்பகல் 3 மணியளவில் சிறுமி குளியலறையிலிருந்து வரவில்லை என அவரது வளர்ப்பு தந்தை வெளியே வந்து உதவி கேட்டார்.
நான் வாசலில் நின்றபடி பார்த்தேன். மேல் வீட்டிலிருப்பவர்கள் உதவிக்குச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் சிறுமியை காரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிலர் சிறுமிக்கு வலிப்பு வந்ததாக கூறினர். அன்று இரவுதான் சிறுமி இறந்துவிட்டார் என்ற தகவல் தெரியும்”, என்றார்.

கொலை நடந்தது எப்படி?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை அதிகாரி கூறும் போது.
“சிறுமி 6 மாத குழந்தையாக இருந்த போது அவரது தாய் மறைந்துவிட்டதால், பிறகு பெரியம்மா, பெரியப்பா வளர்ப்பில் வளர்ந்து வந்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருந்துள்ளார். அவர் கடந்த 4 வருடத்திற்கு முன்பு கண்மாயில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சிறுமியின் பெரியப்பா ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருவதால் ஆண்டில் இரண்டு மாதம் மட்டுமே வீட்டில் இருப்பார். அப்படித்தான் கடந்த மார்ச் 19-ஆம் தேதி இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
மார்ச் 21-ல் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். அப்பொழுது சிறுமி கூச்சலிடவே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமியை குளியலறையில் வைத்து உள் தாழ்ப்பாளிட்டு குளிக்கச் சென்று மீண்டும் வெளியில் வரவில்லை என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடியிருக்கிறார்.
பின்னர் அவரே கதவை உடைப்பது போல உடைத்து மருத்துவமனைக்கு அழைத்தும் சென்றிருக்கிறார், இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்ததை விசாரணையில் ராணுவ வீரர் ஒப்புக் கொண்டு இருக்கிறார்”, என்று கூறினார்.

மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு
“சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி கூடல் புதூர் போலீசாரால் வளர்ப்பு தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டனர். சந்தேக மரணமாக பதியப்பட்ட வழக்கை கொலை (302 )மற்றும் தடயங்களை அழித்தல் (201) மற்றும் போக்சோ சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்”, என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு மன நோய்
குழந்தைகள், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்காவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் செ.ராம சுப்பிரமணியன், "குழந்தைகள் மீதான பாலியல் கவர்ச்சி பீடோஃபைல் (Paedophillia) என்ற ஒரு விதமான மன நோய். அதற்கு முறையான சிகிச்சை கிடையாது. அந்த நோயால் இவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது மதுவை உட்கொண்டு இப்படியாக செய்திருக்கலாம்.
நமது சமூகத்தில் பள்ளிகளில் சரியான தொடுதல்( Good Touch), தவறான தொடுதல் ( Bad touch) கற்பிக்கப்படுகிறது. ஆனால், அது முறையாக பின்பற்றப்படுவது இல்லை.
குழந்தைகளிடம் வெளி ஆட்கள் தவறாக தொடும்பொழுது அதனை பெற்றோரிடம் கூற வேண்டும் என சொல்லி வளர்க்கின்றனர். ஆனால், குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர் அந்த மாதிரி நடந்து கொண்டால் அதனை ஆசிரியர்களிடம் கூற வேண்டுமென கூறி வளர்க்க வேண்டும்”, என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் உடலில் ஏதேனும் காயம் இருந்தால் அதனை ஆசிரியர்கள் கண்காணித்து அவர்களிடம் பேசி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உதவி செய்யலாம். இதன் வழியாகவே இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களை தடுக்க முடியும்”, என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
போக்சோ சட்டம் என்றால் என்ன?
- இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களை பாதுகாக்க 2012- ஆம் ஆண்டு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
- இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவனோ, சிறுமியோ பாலியல் வல்லுறவு, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல், ஆபாச படம் எடுத்தல் என்பது போன்ற பாலியல் பிரச்சனைகளை மற்றவர்களிடமிருந்து எதிர்கொண்டாலோ அல்லது மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டாலோ இந்த சட்டம் பாதுகாப்பு அளிக்கும்.
- பாலியல் செயல்களுக்கான சிறார்களை கடத்தும் நபர்கள் மீதும் இந்த சட்டம் பாயும்.
- குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றத்தின் தன்மைக்கேற்ற அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இத்தகைய குற்றங்கள் நடப்பது தெரிந்தும் அதை பற்றி புகார் தெரிவிக்காமல் மறைத்தால் கூட அந்த செயலுக்கு ஆறு மாத சிறை தண்டனை அல்லது சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் கொடுக்கப்படலாம்.
குழந்தைகளுக்கு உதவி எண்கள்
குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அதனை தங்களின் குடும்பத்தினரிடம் கூறத் தயங்கினால் 1098 என்ற அரசின் குழந்தைகள் நல மையத்தின் இலவச எண்ணிற்க்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.
மன நலன் சார்ந்த பிரச்சனைகளை எதிர்க் கொள்ளும் குழந்தைகள் 104 என்ற எண்ணை அழைத்து உதவி பெறலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
























