You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா: இளம் வழக்கறிஞர்களை உருவாக்கும் தசை சிதைவு நோய் பாதித்த ஆசிரியை
மகாராஷ்டிர மாநிலத்தின் இச்சல்கரஞ்சியை சேர்ந்த ப்ரீத்தி பட்வா தசை சிதைவு நோய் எனப்படும் அரிய மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் கண்டறியப்பட்டபோது அவருக்கு 20 வயது, அவர் அப்போது சட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.
தசை சிதைவு நோய் கழுத்துக்குக் கீழே உள்ள பகுதிகளைப் பலவீனப்படுத்துகிறது. தசைகள் சுருங்குவதால் கைகளும் கால்களும் மெல்ல செயலிழக்கத் தொடங்கும். இந்த நோயால் அவர் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது, உடல் அசைவுகள் படிப்படியாகக் குறைந்தன. ஆனால் மனம் தளராமல் இளங்கலை சட்டப்படிப்பை முடித்தவர், எல்லா தடைகளையும் தாண்டி முதுகலைப் பட்டமும் பெற்றார்.
“உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதே எனது நோக்கமாக இருந்தது. நமது அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் அந்த உரிமைகளைப் பெறுவது கடினமாக உள்ளது.
நான் அவர்களுக்காக வேலை செய்ய விரும்பினேன், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தர விரும்பினேன். இந்த நோக்கத்துடன்தான் சட்டப் படிப்பில் சேர்ந்தேன்,” என்கிறார் ப்ரீத்தி பட்வா.
ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு கோலாப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் குறித்து பாடம் நடத்தினார் ப்ரீத்தி. கடந்த 5 ஆண்டுகளாகத் தனது வீட்டில் மாணவர்களுக்கு சட்டம் கற்பிக்கும் தனியார் ஆசிரியையாக மாறியுள்ளார்.
“ஒரு வழக்கறிஞராக நீதிமன்றத்தில் என்னால் வாதாட முடியாது என்பது எனக்குத் தெரியும். நீதிமன்றத்திற்கு சென்று வருவதும் சாத்தியமில்லை. ஆனால் சட்டம் கற்பிக்கத் தேவையான அனைத்துத் திறமைகளும் தகுதிகளும் என்னிடம் உள்ளன.
எனது மாணவர்களில் குறைந்தது 30, 40 பேர் பல்வேறு நீதிமன்றங்களில் வெற்றிகரமான வழக்கறிஞர்களாகப் பணிபுரிகின்றனர். அவர்களில் 4 பேர் நீதிபதிகளாகவும் இருக்கின்றனர்.” என்று கூறுகிறார் ப்ரீத்தி பட்வா.
மேலும் விவரம் காணொளியில்.
செய்தியாளர்- சர்பராஸ் சனாதி
படத்தொகுப்பு- அரவிந்த் பரேக்கர்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)