மோதியின் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் தடுமாறுகிறதா காங்கிரஸ்? இந்து, முஸ்லிம் சமநிலையை எட்டுவது எப்படி?

ராகுல் காந்தி, CONGRESS

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராகுல் காந்தி
    • எழுதியவர், ஃபைசல் முகமது அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு மத்தியில், கட்சி தன்னுடன் இந்துக்களையும் ஒன்றிணைத்துச்செல்லவேண்டும் என்று காங்கிரஸுக்குள் இருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

நரேந்திர மோதி அரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்துக்களை ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் சிறுபான்மையினரின் பலத்தால் மட்டும் இந்தப் போரில் வெற்றி பெற முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி கூறியுள்ளார்.

காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

ஏ.கே.ஆண்டனி கேரள முதல்வராக இருந்துள்ளார். தற்போது காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக உள்ளார்.

கோயிலுக்கு செல்பவர்களை, நெற்றியில் பொட்டு-சந்தனம் இட்டுக்கொள்பவர்களை மென்மையான இந்துவாதிகள் என்று அழைப்பது, நரேந்திர மோதிக்கு மீண்டும் வெற்றியை பெற்றுத்தர உதவிடும் என்றும் மோதிக்கு எதிரான போராட்டத்தில் இந்துக்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது என்றும் கடந்த புதன்கிழமை திருவனந்தபுரத்தில் ஏ.கே.ஆண்டனி கூறினார்.

 முன்னதாக டிசம்பர் 28ஆம் தேதி காங்கிரஸின் 138வது நிறுவக தினத்தன்று, இதுபோன்ற 'இணைப்பை' உருவாக்க, கட்சித் தொண்டர்களுக்கு என்ன உத்திகள் அளிக்கப்பட்டன என்பது தெளிவாகத்தெரியவில்லை.

காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

அரசியலில் மதம் பற்றிய காங்கிரஸின் கொள்கை

ஒரு காலத்தில் நாட்டின் எல்லா மதங்கள், சாதிகள் மற்றும் வகுப்புகளின் சங்கமமாக கருதப்பட்ட காங்கிரஸிடமிருந்து பெரும்பான்மையினரின் ஒரு பெரிய பகுதி தற்போது விலகியே இருப்பது தீவிர கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

இதுவரை கட்சியால் இது தொடர்பாக தெளிவான சிந்தனையையோ அல்லது உத்தியையோ தயார் செய்ய முடியவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அப்போதைய பம்பாயில் (இப்போது மும்பை) காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டது. இதையொட்டி கட்சி, தனது நிறுவக நாளை கொண்டாட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அரசியலில் மதம் குறித்த காங்கிரஸின் உறுதியற்ற கொள்கையின் விளைவாக சமீப ஆண்டுகளில் கட்சிக்குள் இருந்து அவ்வப்போது இத்தகைய அறிக்கைகள் வெளியாகின்றன என்று எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான ரஷீத் கித்வாய் கருதுகிறார்.

"சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதாக கட்சி மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த எண்ணத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியாக இது இருக்கலாம்,” என்று லோக்மத் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் ஷரத் குப்தா குறிப்பிட்டார்.

முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள்

காங்கிரஸ் முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதாக பாரதிய ஜனதா கட்சியும், பிற இந்துத்துவ அமைப்புகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

ஏ.கே.ஆண்டனியின் சமீபத்திய அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த பாஜக, "இந்துக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கருதுகிறது” என்று கூறியதாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஏ.கே. ஆண்டனியின் இந்த யோசனை புதியது அல்ல என்றும் நீண்டகாலமாக இந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியாக உள்ளார் என்றும் காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த பிருத்விராஜ் செளஹான், பிபிசியிடம் தெரிவித்தார்.

இருப்பினும் ஆண்டனியின் அறிக்கை திரித்து பொருள் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து அவரது கருத்தை அறிய ஏ.கே. ஆண்டனியை தொடர்பு கொள்ள பிபிசி முயற்சி செய்தது. ஆனால் அவர் இது பற்றி எதுவும் கூற மறுத்து விட்டார்.

காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஏ.கே.ஆண்டனி

ஏ.கே.ஆண்டனியின் அறிக்கை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவர் எந்த அர்த்தத்தில் இதைச்சொன்னாரோ அது சரியான விதத்தில் விளக்கப்படவில்லை என்று கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும், ஆண்டனியை நெருக்கமாக அறிந்தவருமான வி.கே.செரியன் கூறுகிறார்.

“மோதிக்கு எதிரான போராட்டத்தில் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகம் ஆகிய இரண்டின் ஆதரவும் நமக்குத்தேவை.

சிறுபான்மையினரைப் போலவே பெரும்பான்மையினருக்கும் கோயிலுக்குச் சென்று திலகம் இட்டுக்கொள்ள உரிமை உண்டு. இப்படிப்பட்டவர்களை மென்மையான இந்துவாதிகள் என்று முத்திரை குத்துவது மோதி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உதவி செய்யும்.

மோதிக்கு எதிரான (அரசியல்) போராட்டத்தில் இந்துக்களையும் நம்முடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரையும் சேர்த்து அழைத்துச் செல்ல காங்கிரஸ் முயற்சி செய்கிறது,” என்று ஆண்டனி கூறியதாக செரியன் குறிப்பிட்டார்.

ஏ.கே. ஆண்டனி 1996, 1999 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் ஓரளவுக்கு இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டார். கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு பிற காரணிகளுடன் கூடவே ’பொருளாதார தாராளமயமாக்கல்’, 'காவி பயங்கரவாதம்', 'கல்வியை காவிமயமாக்கல்' போன்ற சொற்பதங்களை பயன்படுத்தியதே  காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.

உதய்பூர் சிந்தனை மாநாடு

ஆனால் கடந்த சில நாட்களாக ஏ.கே.ஆண்டனியின் அறிக்கை விவாதிக்கப்பட்டு வருகிறது.

'’நாம் முஸ்லிம்களின் கட்சி என்று மக்களுக்கு சொல்வதில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது,” என்று 2018ஆம் ஆண்டு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தொண்டர்களிடையே ஆற்றிய உரையில் குறிப்பிட்டதில் இருந்து, காங்கிரஸ் கட்சிக்குள் முஸ்லிம் பிம்பத்தை அகற்ற வேண்டும் என்ற கவலை எவ்வளவு ஆழமாக ஊடுருவி உள்ளது என்பது தெரியவருகிறது.

மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தன் ஷிவரில் (சிந்தனை மாநாடு) இந்துத்துவா குறித்து கட்சிக்குள் கடும் விவாதம் நடந்தது.

இந்து, தீஜ் பண்டிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான கமல்நாத் ஆகியோர்,  கூறினார்கள்.

சித்தாந்த விஷயங்களில் காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவாக இருக்க வேண்டும் என்று தென்னிந்தியாவின் சில தலைவர்களும், பிரித்விராஜ் செளஹானும் கூறினர்.

காங்கிரஸின் ' அவுட்ரீச் திட்டம்'

உதய்பூர் மாநாட்டில் சித்தாந்தம் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் வெளிவந்த மேலும் ஒரு விஷயம் மக்கள் தொடர்பு பிரசாரம். இது 'அவுட்ரீச் புரோகிராம்' என்று அழைக்கப்பட்டது. அதன் வரையறைகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்னிலையில் விவாதிக்கப்பட்டன என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதன் கீழ் பல மாநிலங்களின் உள்ளூர் தலைவர்கள் தஹி ஹாண்டி போட்டி, விநாயகர் பூஜை போன்ற நிகழ்ச்சிகளைத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும் இது  வேறு விதமான விளைவுகளையும் ஏற்படுத்தியது. உதாரணமாக, மத்திய பிரதேசத்தின் போபாலில் சில முஸ்லிம் தொண்டர்கள், பக்ரீத் பண்டிகையையொட்டி பலி ஆடுகளுடன் கட்சித் தலைமையகத்தை அடைந்தனர். கட்சி இந்து பண்டிகைகளைக் கொண்டாட முடியுமானால், முஸ்லிம் பண்டிகைகளை ஏன் கொண்டாடக்கூடாது என்று அவர்கள் வினவினர்.

கட்சி காவல்துறையை அழைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.

சத்தீஸ்கரில் பூபேஷ் பகேல் அரசு முதல் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்தின் முந்தைய அரசு வரை, ராமர் வனவாசத்தில் இருந்தபோது சென்றதாக கூறப்படும் பாதையை சீரமைத்து மேம்படுத்துதல், பசு மூத்திரம், சாணம் வாங்குதல், கோஷாலா மற்றும் ஆன்மிகத் துறை அமைத்தல், சமஸ்கிருதப் படிப்புக்கு முக்கியத்துவம் அளித்தது போன்றவை இந்துக்களை ஒன்றிணைப்பதற்கான கட்சியின் முயற்சிகளின் ஒரு பகுதியாவே கருதப்படுகிறது.

முஸ்லிம்களிடமிருந்து தூரம், பசுவதை, சபரிமலை

"பாஜக எங்களை முஸ்லிம் கட்சி என்று அழைத்தது. எங்கள் எதிரிகளால் திணிக்கப்பட்ட முத்திரையை அகற்றுவதற்காக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்,”என்று மத்திய பிரதேச தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பூபேஷ் பகேல் இந்து நிகழ்ச்சிகளில் வெளிப்படையாகப் பங்கேற்று வருகிறார். இந்துத்துவ நிகழ்ச்சிகளில் இருந்து காங்கிரஸ் வலுக்கட்டாயமாக ஒதுங்கி இருந்து வெற்றிடத்தை விடக்கூடாது என்றும் இதை இட்டுநிரப்ப பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்றும் பிபிசி உடனான பழைய உரையாடலில் அவர் கூறியிருந்தார்.

பாஜக வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அவரே அவ்வப்போது கோவில்களுக்கும், மடங்களுக்கும் சென்று வருகிறார். அவரை பூணுல் அணிபவர் என்று வர்ணிக்க கட்சித் தலைவர்கள் தயங்குவதில்லை.

"அரசியலில் மத விவகாரம் காங்கிரசுக்கு உடலில் குத்திய முள் போன்றது. சித்தாந்தம் குறித்த தெளிவும் அதனிடம் இல்லை. ஆண்டனி இந்த விஷயத்தை முன்னுக்கு கொண்டு வர விரும்புகிறார். பூனை கழுத்தில் எப்படி மணி கட்டுவது என்று காங்கிரஸுக்கே தெரியாது,” என்று ரஷீத் கித்வாய் கூறினார்.

“பொருளாதாரம், மதம் மற்றும் சாதிவெறி போன்ற பிரச்சனைகளில் இடதுசாரி அரசியல் கட்சிகள், பாஜக போன்ற வலதுசாரிக் கட்சிகள், சோஷியலிச சித்தாந்தக் கட்சிகள் மற்றும் திமுக ஆகியவற்றின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.”

ஆனால் காங்கிரஸில் இந்த விஷயங்கள் தொடர்பாக இன்றும் தெளிவின்மை உள்ளது. இந்த விஷயங்கள் குறித்து கட்சியில் பலவிதமான கருத்துகள் உள்ளன. ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் விஷயம் தொடர்பாக சில நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு இடங்களில் இருந்து கருத்துக்கள் எழுகின்றன.

காங்கிரஸ், பாஜக

பட மூலாதாரம், Getty Images

கட்சியின் இரட்டை நிலைப்பாடு

உத்தர பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி என்ற பெயரில் படுகொலை நடந்ததை தொடர்ந்து  பசுவதை தடை குறித்து பாஜக பேசியபோது, பல தசாப்தங்களுக்கு முன் 1955ஆம் ஆண்டே காங்கிரஸ் இந்தவிஷயத்தில் ஒரு முன்முயற்சியை எடுத்தது என்பதையும், 1955 இல் சில மாநிலங்களில் பசு வதை தடை செய்யப்பட்டது என்றும் பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் அறிக்கை விடுத்தனர்.

பசு வதைக்கு எதிராக தேசிய சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க தனது கட்சி தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக கட்சியின் தலைவர் (அப்போதைய) சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்து பேசுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார்.

சபரிமலையில் பெண்கள் நுழைவு விவகாரத்திலும் அக்கட்சி இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. முதலில் எல்லா வயது இந்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பை அது பாராட்டியது. ஆனால் பின்னர் கட்சி வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தது. காங்கிரஸின் மத்திய தலைமையின் கருத்தும் கேரள பிரதேச காங்கிரஸின் கருத்தும் வெவ்வேறாக இருந்தது.

ஆனால், காங்கிரஸ் தலைவர்களால் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகள், கட்சியின் பெரிய தலைவர்களின் விருப்பப்படி நடக்கின்றன என்பதை ஏற்க தான் தயாராக இல்லை என்கிறார் ஷரத் குப்தா.

காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

இந்து வாக்குகளின் தேவை

எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் மதச்சார்பின்மை போன்ற விஷயங்களை தெளிவாக விளக்குவது இன்றைய சூழ்நிலையில் கடினமாகிவிட்டது என்று பிருத்விராஜ் செளஹான் கூறுகிறார்.

" எல்லா மதத்தினரிடம் இருந்தும் சமமான இடைவெளியை காங்கிரஸ் பராமரிக்கவேண்டும். சாதாரண மக்களுக்கு எடுத்துச்சொல்லும்விதமாக அரசியல் சாசனம் குறித்த அதிகபட்ச தகவல்களை தன் தொண்டர்களுக்கு அளிப்பதும் அவசியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நாட்களில் தொண்டர்களுக்கான அரசியல் சாசன முகாமை காங்கிரஸ் நடத்தியது. இதேபோன்ற ஒரு முகாம் நவி மும்பையில் டிசம்பர் 8 ஆம் தேதி நடத்தப்பட்டது.

2014 ஆம் ஆண்டு 31 சதவிகித வாக்குகளைப் பெற்ற பாஜக, கடந்த பொதுத் தேர்தலில் (2019 தேர்தலில்) 37 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. எல்லா இந்துக்களும் தன்னுடன் இருப்பதாக பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் இப்போதும் பாஜகவை நோக்கிச் செல்லாத இந்து வாக்குகளின் பெரிய சதவிகிதம் உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு கருத்து நிலவுகிறது.

ராகுல் காந்தி, CONGRESS

பட மூலாதாரம், ANI

மதசார்பின்மை மீதான நெருக்கடி

"தொண்ணூறுகளின் தசாப்தத்தில் 'பச்சா-பச்சா ராம் கா, மந்திர் கே காம் கா' ( ராமரின் ஒவ்வொரு குழந்தையும் கோவில் வேலைக்காக) போன்ற முழக்கங்கள் எங்கும் ஒலித்தபோதும் கூட, கடந்த எட்டு வருடங்களில் காணப்படுவதைப்போல பொது மக்களின் மனநிலை முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கவில்லை,”என்று ஷரத் குப்தா கூறுகிறார்.

பாஜகவின் ஒரு முஸ்லிம் தலைவருடன் தனது உரையாடலை குறிப்பிட்ட ஷரத் குப்தா,” 'கட்சி டிக்கெட் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று நான் அவரிடம் கேட்டபோது, ​​​​ காத்திருப்பேன் என்று அவர் பதில் சொன்னார். மற்ற கட்சிகளும் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பதற்கு முன்பு சிந்திக்கின்றன என்றும் அவர் கூறினார்,” என்றார்.

நாட்டை ஆளும் கட்சி தேர்தலில் முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுப்பதை தவிர்க்கும் அதே வேளையில் காங்கிரஸிலும் இந்த சமூகத்தினருக்கு வாய்ப்பு கொடுப்பது முன்பு போல் இல்லை.

2014 பொதுத் தேர்தலில் கட்சி தனது மொத்த வேட்பாளர்களில் ஆறு சதவிகிதத்திற்கும் குறைவாகவே முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது.

இந்து தேசியவாதம்

தற்போது எழுந்துள்ள மதசார்பின்மை குறித்த நெருக்கடி திடீரென உருவானது அல்ல, ஆனால் காங்கிரஸ் கட்சியில் 1980களிலிருந்தே இதன் பின்னணி உருவாகி வருவது தெரிகிறது என்று பிரெஞ்சு அறிஞர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரோல், சமீபத்தில் தனது கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார்.  

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை சிறுபான்மை கல்வி அமைப்பாக அறிவித்தது, பிந்தரன்வாலேவை ஊக்குவித்தது, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் உதவியுடன் கட்டப்பட்ட பாரத் மாதா மந்திர் திட்டத்தில் பங்கேற்றதையும் இது தொடர்பாக கிறிஸ்டோஃப் ஜாஃப்ரோல் குறிப்பிடுகிறார்.

காங்கிரஸ்

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, இந்திரா காந்தி

இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தியின் ஆட்சியின் போது  பாபர் மசூதியின் பூட்டை திறந்தது, ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியது, பின்னர் ஷா பானோ வழக்கில் தன் நிலைப்பாட்டை மாற்றியது ஆகியவை நடந்து பல காலம் ஆகவில்லை. பின்னர் பி.வி.நரசிம்மராவ் அரசு பதவியில் இருந்தபோது பாபர் மசூதி இடிப்பும் நடந்தது.

காங்கிரஸை 'போலி மதசார்பின்மைவாதிகள்' என்று இந்துவாதிகள் அழைக்க இந்த சம்பவங்கள் வாய்ப்பளித்ததாக ஜாஃப்ரோல் கூறுகிறார். “இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் இந்த முடிவுகளால் இந்தியாவின் மதசார்பற்ற பாரம்பரியத்தை நீர்க்கச்செய்ததன் மூலம் இந்து தேசியவாதத்திற்கான கதவைத் திறந்தனர்” என்று அவர் எழுதியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: