You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா குண்டுவீசிய அணு சக்தி நிலையத்தை உடனே கட்ட தொடங்கிவிட்டதா இரான்?
இரான் ஃபோர்டோ அணுசக்தி தளத்தில் பெரிய அளவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது மாக்சர் டெக்னாலஜியின் (Maxar Technologies) செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட இரானிய அணுசக்தி நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்த தாக்குதலை அற்புதமான ராணுவ வெற்றி என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், இரான் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என அமெரிக்க பாதுகாப்பு துறையின் உளவுப்பிரிவின் ஆரம்பக்கால மதிப்பீட்டு தரவுகள் கசிந்தன.
இரான் சில மாதங்களில் அணுகுண்டு தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டலை தொடங்கும் திறனைக் கொண்டிருப்பதாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான், ஃபோர்டோ அணுசக்தி தளத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், அமெரிக்காவின் பதுங்கு குழிகளைத் தகர்க்கும் குண்டுகளால் சேதமடைந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் ஆழ்துளை இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் செல்வது, ஒரு புல்டோசரும் ஒரு லாரியும் மலையிலிருந்து கீழே இறங்குவது போன்றவை பதிவாகியுள்ளன.
ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவு வாயில் மற்றும் கட்டடத்திலும் கட்டுமான இயந்திரங்கள் வேலை செய்து வருகின்றன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் அத்தளத்தின் நுழைவு வாயில் மற்றும் கட்டடத்தின் கிழக்குப் பகுதிகள் சேதமடைந்திருந்தன.
ஜூன் 28-ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படங்களை அணுஆயுத நிபுணரான டேவிட் ஆல்பிரைட் (David Albright) பகுப்பாய்வு செய்தார். ஃபோர்டோ அணு தளத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளில், தாக்குதலால் ஏற்பட்ட குழிகளை மண்ணால் நிரப்பும் வேலைகளும் அடங்கும் என அவர் கருதுகிறார்.
அதேபோல், அங்கு ஏற்பட்ட சேதம் மதிப்பாய்வு செய்யப்பட்டிருக்கவும் கதிரியக்க மாதிரிகள் எடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கருதுகிறார்.
இதன் முழு விவரம் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு