"நீங்கள் தாக்கினால்..." - அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு இரான் எதிர்வினை - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், மேட் ஸ்பைவி மற்றும் டேபி வில்சன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
செவ்வாய்க்கிழமை நடந்த பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடர்ந்து, "இன்று இரவும் அவர்கள் மீது மீண்டும் பலத்த தாக்குதல் நடத்துவோம்" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சமிக்ஞை அளித்ததை அடுத்து, அமெரிக்கா இரான் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள துறைமுக நகரங்களான சிரிக் மற்றும் பண்டர் அப்பாஸ் உள்ளிட்ட இரானின் தென்பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளதாக, இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், "இரான் நேற்று கப்பல்கள் மீது நடத்திய குண்டுவீச்சுக்கு பழிவாங்கும் நடவடிக்கை இது. மீண்டும் இது நடந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்" என்று கூறியுள்ளார்.
இரான் மீதான தனது தொடர் இரண்டாவது இரவு தாக்குதல்களில் இரான் முழுவதும் தோராயமாக 90 இலக்குகளை தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவிக்கிறது.
விமானத் தாக்குதல்களின் வீடியோ தொகுப்புடன் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், "ஹோர்மூஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி மாலுமிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான இரானின் திறனை மேலும் சிதைப்பதுதான் இதன் நோக்கம்" என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) கூறியுள்ளது.
இலக்குகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோரக் கண்காணிப்பு அமைப்புகள், ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு தளங்கள், கடற்படை திறன்கள் மற்றும் இரானின் கடலோரப் பகுதியில் உள்ள ராணுவ தளவாட உள்கட்டமைப்புகள் ஆகியவை அடங்கும்.
"முந்தைய நாள் இரவில் இரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்று சென்ட்காம் கூறியுள்ளது.
"மிக முக்கிய சர்வதேச நீர்வழியில் சுதந்திரமாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிராகச் சமீபத்தில் இரான் நடத்திய நியாயமற்ற நடவடிக்கைக்கு அமெரிக்கா இரானைப் பொறுப்பேற்க வைக்கிறது" என்றும் ஒரு அறிக்கையில் அது கூறியுள்ளது.

பட மூலாதாரம், Centcom

பட மூலாதாரம், Centcom
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன.
அதன்படி, பஹ்ரைனின் தலைநகர் மனாமாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன, குவைத் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளது, மற்றும் கத்தார் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்காவுடனான இரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் இருக்கும் இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "அச்சுறுத்துவதும், வாக்குறுதிகளை மீறுவதும் இனி இலவசமானவை அல்ல என்பதை அமெரிக்கா இன்னும் கற்றுக்கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.
"நான் இதைத் தெளிவாகச் சொல்கிறேன். நீங்கள் தாக்கினால், நீங்களும் தாக்கப்படுவீர்கள்" என்று அப்பதிவில் எழுதியுள்ள அவர், ஹோர்மூஸ் நீரிணையானது இரானின் ஏற்பாடுகளின் கீழ் மட்டுமே திறக்கப்படும். "அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு" கட்டுப்பட்டு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
இரானியக் கடற்கரையின் பிற பகுதிகளான கொனாரக் மற்றும் சபாஹார் ஆகிய நகரங்களிலும் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பந்தர் அப்பாஸில் எட்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக இரானிய அரசுத் தொலைக்காட்சி தெரிவித்ததுடன், தெற்கு இரானில் உள்ள சிரிக் மற்றும் ஜாஸ்க் ஆகிய இரு துறைமுகங்களிலும் தலா இரண்டு ஏவுகணைகள் தாக்கியுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், இரானுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே நீண்டகாலமாக உரிமைப் பிரச்னை நிலவி வரும் அபு மூசா தீவிலும் இரண்டு ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக அது கூறியுள்ளது.
இரானிய அரசு ஊடகங்களின் செய்திகளின்படி, பண்டர் அப்பாஸில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை, இருப்பினும் சபாஹாரில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், புஷெஹ்ரில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பாராக்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சபாஹாரில் துண்டிக்கப்பட்ட மூன்று மின் இணைப்புகளில் இரண்டு விரைவாகச் சீரமைக்கப்பட்டுவிட்டதாகவும், மூன்றாவது இணைப்பு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் இரானிய மாணவர்களின் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை மாலை ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், இரான் "சிறிது நேரத்துக்கு முன்பு அழைத்தது" என்றும், ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள "மிகவும் தீவிரமாக" இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், "அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தகுதியானவர்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஒப்பந்தத்தை மதிப்பார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை, அதுதான் பிரச்னை" என்றார்.

பட மூலாதாரம், Reuters
நீரிணையில் மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, தாங்கள் "சக்திவாய்ந்த" தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
ஜூன் 17 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று அறியப்படும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே மிக மோசமான பரஸ்பரத் தாக்குதல்கள் செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை நிகழ்ந்தன.
இரானுடன் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என்று புதன்கிழமை அன்று டிரம்ப் கூறினார்.
மேலும் அமெரிக்கா "நேற்று இரவு அவர்கள் மீது மிகவும் பலத்த தாக்குதலை நடத்தியது" என்றும், "அநேகமாக இன்று இரவும் அவர்கள் மீது மீண்டும் பலத்த தாக்குதல் நடத்துவோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுகுறித்து அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இனி அவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் தேவையில்லை, அவர்கள் அற்பமானவர்கள். அப்படியென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அற்பமானவர்கள். அவர்கள் மிக மோசமான மனநிலை கொண்டவர்கள்" என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாங்கள் அநாகரிகத்துக்கு அநாகரிகத்தால் பதிலளிப்பதில்லை, செயலின் மூலம் பயமின்றி, மிகுந்த வீரியத்துடன் பதிலளிப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான அந்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டிய 60 நாட்கள் போர்நிறுத்தக் காலம், ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வது மற்றும் இரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்குவது ஆகியவை அடங்கும்.
பேச்சுவார்த்தைக்கான 60 நாட்கள் காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் மேலும் பேச்சுவார்த்தை நடத்துவது "நேர விரயம்" என்று தான் கருதுவதாக டிரம்ப் கூறினார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நடக்கும் முதல் தாக்குதல்கள் இவை அல்ல.
ஹோர்மூஸ் நீரிணையில் இரானிய ஏவுகணை ஒன்று சரக்குக் கப்பல் மீது தாக்கியதைத் தொடர்ந்து, ஜூன் 26 அன்று அமெரிக்கா இரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.
எண்ணெய்க் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 27 அன்றும் அமெரிக்கா மேலும் தாக்குதல்களை நடத்தியது. ஆனால் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் இரு தரப்பும் "பின்வாங்க" ஒப்புக்கொண்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































