You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானை தாக்கிய அமெரிக்கா - உச்சகட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு, அடுத்து என்ன நடக்கும்?
இரான் இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பமாக இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இரான் சமாதானத்தை நாட வேண்டும் என்றும் பதில் தாக்குதல் தொடுத்தால் தங்களின் பதிலடி தற்போது நடத்தப்பட்ட தாக்குதலை விட மிக வலிமையானதாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மறுபுறம், தங்களின் இறையாண்மையை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என இரான் தெரிவித்துள்ளது.
இரான் மீது ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரானும் பதில் தாக்குதலை தொடங்கியது. ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த தாக்குதல் நீடித்து வருகிறது. இரானின் நிலத்துக்கு அடியில் அமைந்திருக்கும் அணுசக்தி நிலையங்களை தாக்குவது இஸ்ரேலுக்கு கடினமாக இருந்து வருகிறது. இதற்கான ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமே இருப்பதாக கருதப்படுகிறது.
இஸ்ரேல் இரான் மோதலில் தங்களுக்கு தொடர்பில்லை என கூறிவந்த அமெரிக்கா பின்னர், இரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வந்தது. இதன் தொடர்ச்சியாகதான் தற்போது இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இரான் மீது நடத்திய தாக்குதல் குறித்து பேசிய டிரம்ப், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்
அமெரிக்காவின் தாக்குதலை இரானும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கவின் தாக்குதலை இஸ்ரேல் பாராட்டியுள்ளது.
அதேநேரம், அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த தாக்குதலை டிரம்ப் நடத்தியிருப்பதாக ஜனநாயக கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
அமெரிக்கா நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் மீது இரான் இன்று மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் அவசரகால சேவை முகமை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு