You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் சதை உண்ணும் புழு அச்சுறுத்தல்- லட்சக்கணக்கான 'மலட்டு' ஈக்களை களமிறக்கிய அரசு
- எழுதியவர், மேக்ஸ் மட்சா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்காவில் 1966-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட, சதையை உண்ணும் ஒட்டுண்ணி தற்போது டெக்சாஸில் கண்டறியப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க விவசாயம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஸ்க்ரூவோர்ம் ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க வகுக்கப்பட்டுள்ள திட்டத்தின் முக்கிய அம்சமாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பல கோடி மலட்டுத்தன்மை கொண்ட ஈக்களை வெளியிடும் திட்டம் இடம்பெற்றுள்ளது.
எனினும், இந்த ஒட்டுண்ணியின் பரவலைத் தடுக்க தேவையான அளவுக்கு மலட்டுத் தன்மை கொண்ட ஈக்கள் தற்போது இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது தவிர, அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில் முதன்முறையாக இந்த ஒட்டுண்ணி கண்டறியப்பட்ட இடத்தைச் சுற்றி ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்கவும், இந்தப் பூச்சிகளைக் கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மனிதர்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து குறைவாகவே இருந்தாலும், இந்தப் பரவல் மாட்டிறைச்சி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் அஞ்சுகின்றனர்.
ஸ்க்ரூவோர்ம் என்பது ஒரு வகை ஒட்டுண்ணி ஈ ஆகும். உயிருடன் இருக்கும் வெப்ப ரத்தம் கொண்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் திறந்த காயங்கள் அல்லது உடலின் ஈரப்பதமான பகுதிகளில் இவை முட்டையிடுகின்றன.
அந்த முட்டைகள் பொரிந்த பிறகு, நூற்றுக்கணக்கான புழுக்கள் தங்களின் கூர்மையான வாய்ப்பகுதியால் சதைக்குள் ஊடுருவத் தொடங்குகின்றன.
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவை தொடர்ந்து உடல் சதைகளைத் தின்று, இறுதியில் அந்த விலங்கு அல்லது மனிதரின் உயிரையே பறிக்கக்கூடும்
புதன்கிழமை, அமெரிக்க அதிகாரிகள், 60 ஆண்டுகளுக்குப் பிறகு டெக்சாஸ் மாகாணத்தில் முதல் முறையாக ஸ்க்ரூவோர்ம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.
மூன்று வார வயதுடைய ஒரு கன்றுக்குட்டியின் தொப்புள் பகுதியில் இந்த புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஸ்க்ரூவார்ம் புழுக்களின் லார்வாக்கள் ஈக்களாக மாறி, குறுகிய தூரம் வரை பறக்கக்கூடியவை. இவை நீண்ட தூரம் பரவுவதற்கு முக்கியக் காரணம் மனிதர்கள் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதுதான்..
1970-களில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு, அமெரிக்காவில் அவ்வப்போது சில பாதிப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலமாகவே இந்த ஒட்டுண்ணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும், கால்நடைகள் அல்லது மனிதர்களிடையே இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த அறுபது ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க அதிகாரிகள் இந்தப் புழுக்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளப் போராடி வருகின்றனர். ஆனால் இதில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி குறைவுதான்.
கட்டுப்படுத்த என்ன வழி?
ஸ்க்ரூவோர்ம் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பயன்படுத்தும் முக்கியமான முறைகளில் ஒன்று, மலட்டுத் தன்மை கொண்ட ஸ்க்ரூவோர்ம் ஈக்களை பெருமளவில் வெளியிடுவது ஆகும்.
பெண் ஸ்க்ரூவோர்ம் ஈக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இணை சேர்வதால், மலட்டுத் தன்மை கொண்ட ஆண் ஈக்களுடன் இணை சேர்ந்தால் அவை இடும் முட்டைகள் கருவுறாது; அவற்றிலிருந்து புழுக்கள் வெளிவராது.
'மலட்டு பூச்சி நுட்பம்' என்று அழைக்கப்படும் இந்த முறை, பழ ஈக்கள் மற்றும் கொசுக்கள் உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஈக்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டு, பின்னர் கதிர்வீச்சுக்கு உட்படுத்தி மலட்டுத் தன்மையாக்கப்பட்ட பிறகு இயற்கைச் சூழலில் விடப்படுகின்றன.
எனினும், தற்போதைய பாதிப்பைக் கட்டுப்படுத்த வாரத்திற்கு 60 கோடி மலட்டுத் தன்மை கொண்ட ஸ்க்ரூவோர்ம் ஈக்களை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தற்போது அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள உற்பத்தி மையங்கள் இணைந்து வாரத்திற்கு சுமார் 10 கோடி ஈக்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது.
அமெரிக்க வேளாண் செயலர் புரூக் ரோலின்ஸ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டி கண்டறியப்பட்டதிலிருந்து, தரை வழியாக 40 லட்சம் மலட்டுத் தன்மை கொண்ட ஈக்கள் வெளியிடப்பட்டதாகவும், இதனுடன் பிப்ரவரி மாதம் முதல் வாரந்தோறும் விமானங்கள் மூலம் மேலும் 40 லட்சம் ஈக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
"இந்த ஒட்டுண்ணி அமெரிக்காவில் நிரந்தரமாகப் பரவிவிடும் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றும் அவர் கூறினார்.
ஆனால், டெக்சாஸில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளிட்ட விமர்சகர்கள், தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சிக்கலை டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் நிபுணர் சோன்யா ஸ்வைக்கரின் கூற்றுப்படி, கடந்த காலத்தில் மலட்டு ஈக்களை பயன்படுத்திய திட்டம், ஸ்க்ரூவோர்ம் பரவலை பனாமா மற்றும் கொலம்பியாவுக்கு இடையிலான அடர்ந்த காடுகள் நிறைந்த 'டேரியன் கேப்' பகுதிக்கு தள்ள உதவியது. அந்தக் காலத்தில், மத்திய அமெரிக்கா முழுவதும் வாரத்திற்கு 50 முதல் 70 கோடி மலட்டுத் தன்மை கொண்ட ஈக்கள் வெளியிடப்பட்டன.
இருப்பினும், சமீப ஆண்டுகளில் ஸ்க்ரூவோர்ம் மீண்டும் வடக்கு நோக்கி பரவத் தொடங்கியது. 2022-ஆம் ஆண்டு பனாமாவில் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்தன. பின்னர் மத்திய அமெரிக்காவின் பிற நாடுகளுக்கும் அவை பரவின. 2024-ஆம் ஆண்டில் மெக்சிகோவிலும் பாதிப்புகள் பதிவாகி, அமெரிக்க எல்லையை நோக்கி நகரத் தொடங்கின.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகளின்படி, மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் மனிதர்களுக்கு இதுவரை 2,070 ஸ்க்ரூவார்ம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் மெதுவாகவும், தாமதமானதாகவும் இருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்துள்ளனர். மத்திய அமெரிக்காவில் ஸ்க்ரூவார்ம் புழுக்களைக் கண்காணிக்கும் திட்டத்தை நிர்வகித்து வந்த அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமையை டிரம்ப் நிர்வாகம் கலைத்ததே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டெக்சாஸ் வேளாண் ஆணையர் சிட் மில்லர், மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். "மெக்சிகோ வழியாக இவை தடையின்றிப் பரவி, அமெரிக்க மண்ணை அடையும் வரை அரசாங்கம் மிகவும் மெதுவாக செயல்பட்டது" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பூச்சிக்கொல்லி பொறிகளைப் பயன்படுத்துமாறு மில்லர் வலியுறுத்தினார். ஆனால், வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசு அதிகாரிகள் இந்த யோசனையை நிராகரித்தனர். இந்தப் பொறிகள் ஸ்க்ரூவார்ம் புழுக்களைத் தடுப்பதில் பயனற்றவை என்றும், அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் புற்றுநோயை உண்டாக்கக்கூடும் என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் செயலர் புரூக் ரோலின்ஸ், இந்தப் புழுக்கள் வடக்கை நோக்கிப் பரவியதற்கு 'திறந்த எல்லை' கொள்கைகளும், கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளைக் கடத்தும் கடத்தல் கும்பல்களுமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், மெக்சிகோ அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்தார். மெக்சிகோவின் நடவடிக்கைகள் "எதிர்பார்த்த அளவு திருப்திகரமாக இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஸ்க்ரூவார்ம் புழுக்களை மோப்பம் பிடித்துக் கண்டறியும் நாய்களை அமெரிக்கா தனது எல்லைகளில் பணியமர்த்தியுள்ளது. அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மற்றும் வேளாண்மைத் துறையால் பயன்படுத்தப்படும் இந்தச் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள், "பீகிள் பிரிகேட்" என்று அழைக்கப்படுகின்றன.
இந்தப் பாதிப்பின் பரவலைக் கட்டுப்படுத்த, கால்நடைகளின் உடலில் உள்ள காயங்களை மூடி வைப்பதில் விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் ஸ்க்ரூவார்ம் புழுக்கள் காயங்களில் முட்டையிட்டுப் பரவுவதைத் தடுக்க முடியும்.
மக்கள் தங்களையும், தங்கள் செல்லப் பிராணிகளையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஏதேனும் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்க்ரூவார்ம் புழுக்கள் பொதுவாக வெப்பமான காலநிலைகளில் காணப்படுபவை. ஆனால், காலநிலை மாற்றம் காரணமாக இவை இப்போது வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இவை அமெரிக்கக் கண்டத்தின் வெப்பமண்டலப் பகுதிகளில் பூர்வீகமாகக் கொண்டவை என்பதால், இவற்றை அந்நிய ஆக்கிரமிப்பு இனமாக கருத முடியாது என்று ஸ்வைக்கர் குறிப்பிடுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு