Z-10 ME: சீனாவின் தாக்குதல் ஹெலிகாப்டரை வாங்கிய பாகிஸ்தான் - சிறப்பம்சம் என்ன?
Z-10 ME.. இது சீனாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தாக்குதல் ஹெலிகாப்டராகும். இதன் உருவாக்கப் பணிகள் 1994-ஆம் ஆண்டு தொடங்கின. தற்போது இது மிக முன்னேறிய தொழில்நுட்பங்களுடன் செயல்படுகிறது. பகலோ, இரவோ, பனிமூட்டமோ, தெளிந்த வானமோ…இந்த ஹெலிகாப்டர் துல்லியமாக தாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதுப்பற்றி இப்போது பேசப்படுவது ஏன்?
சீனாவில் தயாரிக்கப்பட்ட Z-10 ME ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்டதை ISPR எனப்படும் பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அமெரிக்காவிலிருந்து மூன்று அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இந்தியா வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் உள்ள அமெரிக்கா தயாரித்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களுடன் ஒப்பிடுகையில் சீனாவின் இந்த ஹெலிகாப்டர்கள் எப்படி இருக்கும்?
Z-10 ME ஹெலிகாப்டரின் சிறப்பம்சம்
அதிநவீன வசதிகளுடனான Z-10 ME ஹெலிகாப்டர்கள் எல்லா காலநிலைகளிலும், பகலிலோ, இரவிலோ துல்லியமான தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
"Z-10 ME ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ள ரேடர் மூடுபனியிலும் வெகு சிறப்பாகச் செயல்படும்."
"இந்த ஹெலிகாப்டரின் துப்பாக்கிகள் ஹெல்மெட் மவுண்டட் சைட்ஸுடன் (Helmet Mounted Sight) இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, இது ஒரு நகரும் ஆயுத அமைப்பாகும், பைலட் எந்த திசையைப் பார்த்தாலும், துப்பாக்கி தானாக அந்த திசையில் சுடும்" என்கிறார் முஸாமில் ஜிப்ரான்.
அப்பாச்சி மற்றும் Z-10 M ஹெலிகாப்டர்கள் இடையேயான வேறுபாடுகள்
டிபென்ஸ் செக்யூரிட்டி ஆசியாவின் கூற்றுப்படி, Z-10 ME ஹெலிகாப்டரின் அதிக பட்ச வேகம் மணிக்கு 300 கிலோமீட்டராக உள்ளது.
போயிங் நிறுவனத்தின் படி, அப்பாச்சி ஹெலிகாப்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 279 கிலோமீட்டராக உள்ளது.
இருப்பினும், சீரான பறக்கும் வேகத்தை பொருத்தவரை அப்பாச்சி சிறப்பாகச் செயல்படுகிறது.
பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆய்வாளர் சவுத்ரி ஃபாரூக்-கின் (Chaudhary Farooq) கூற்றுப்படி இந்த ஹெலிகாப்டரில் பலவகையான ஆயுதங்களைப் பொருத்த முடியும்.
இதில், 16 ஆன்டி-டேங்க் வழிகாட்டி ஏவுகணைகள், 32- ட்யூப் ராக்கெட் பாட்கள் மற்றும் TY-90 வானிலிருந்து வானில் ஏவக்கூடிய ஏவுகணைகளை பொருத்தலாம் என அவர் கூறுகிறார்.
அதே சமயம், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் 16 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. இதன் கீழே பொருத்தப்பட்டிருக்கும் துப்பாக்கியில் ஒரே நேரத்தில் 30 மில்லி மீட்டர் அளவுள்ள 1,200 தோட்டாக்களை லோட் செய்ய முடியும்.
முஸாமில் ஜிப்ரானின் கூற்றுப்படி, Z-10 M-யின் இன்ஜினின் புகை வெளியேற்றும் அமைப்பு கிடைமட்டமாக இல்லாமல் 45 டிகிரி கோணத்தில் பின்புறமாகச் சாய்ந்துள்ளது. இதனால், இதன் heat signature எனப்படும் வெப்ப அடர்வு கணிசமாகக் குறைகிறது."
"இதன் காரணமாக, எதிரிகளின் ரேடர் அல்லது வெப்பத்தை உணரும் கருவி இந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிப்பதில் சிரமத்தைச் சந்திக்கின்றன" என அவர் கூறுகிறார்.
ஆனால் இந்த ஹெலிகாப்டர்கள் இதுவரை எந்த போரிலும் பயன்படுத்தப்படவில்லை.
அதேசமயம், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பல போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் நிரூபிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் அப்பாச்சி முன்னிலை பெறுகிறது.
Z-10 M ஹெலிகாப்டரை பாகிஸ்தான் தேர்ந்தெடுத்தது எப்படி?
பாகிஸ்தான் ராணுவம் முதலில் AH 1Z viper ஹெலிகாப்டர்களை வாங்கத் திட்டமிட்டது. 2015இல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது, ஆனால் இந்தியாவுடனான வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகள் காரணமாக இதிலிருந்து பின்வாங்கியது.
பின்னர், துருக்கியின் T129 ஹெலிகாப்டர்களை வாங்கப் பாகிஸ்தான் முயன்றது, ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அது கைவிடப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் சீனாவை நாடியது.
இறுதியில், பாகிஸ்தான் Z-10ME-ஐ தேர்ந்தெடுத்தது. பாகிஸ்தான் நிபுணர்கள் Z-10 ME ஹெலிகாப்டர்களில் பாகிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப அப்பாச்சி போன்ற ரேடர், வானிலிருந்து வானில் தாக்கும் மற்றும் வானிலிருந்து தரையில் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளைப் பொருத்தினர்.
சீனா - பாகிஸ்தான் இடையேயான உறவு
கடந்த சில தசாப்தங்களாக பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பாதுகாப்பு கூட்டாண்மை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 1965ஆம் ஆண்டு பாகிஸ்தான்-இந்தியப் போருக்குப் பிறகு, அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆயுதத் தடை விதித்தது. இதனால் பாகிஸ்தான் சீனாவை நாடியது.
SIPRI எனப்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, 2020 முதல் 2024 வரை பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81% சீனாவிலிருந்து வந்தவை.
2015-2019 மற்றும் 2020-2024 ஆண்டுகளுக்கு இடையில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 61% அதிகரித்தது என SIPRI தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையின்படி, சீனாவிலிருந்து பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்களில் நவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
பாகிஸ்தானில் உள்ளூரில் தயாரிக்கப்படும் சில ஆயுதங்களில் சீனாவின் பங்களிப்பு உள்ளது. இவை சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையாகவோ அல்லது சீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவையாகவோ உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



