உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு - அந்த சட்டப்பிரிவுகள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், DMK
தஞ்சையில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் "அவதூறாக பேசியதாக" சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு செவ்வாய்கிழமை காலையில் சென்ற காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர். மேலும், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், உதயநிதிக்கு முன் ஜாமீன் கோரி தொடரப்பட்ட மனு இன்று மதியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், உதயநிதியை இன்றே விடுவிக்க உத்தரவிட்டார்.
"உதயநிதியை விசாரணைக்குப் பிறகு இன்றே விடுவித்துவிட வேண்டும். முன்ஜாமீன் கோரும் மனு என்பதால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. காவல்துறை விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, தன் நீலாங்கரை இல்லத்தில் இருந்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி, வெட்டி, ஒட்டி போலி செய்திகளை பரப்புகின்றனர். இன்று என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்." என்றார்.

9 சட்டப்பிரிவுகள் என்ன?
உதயநிதியின் பேச்சு தொடர்பாக, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பிரிவுகளின் விவரத்தை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜேந்திரன் விளக்கினார். அதன்படி,
- பிஎன்எஸ் 196 - பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் - ஒரு நபரை அவதூறாகப் பேசியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், இதன்படி அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
- பிஎன்எஸ் 192 கலவரத்தை தூண்டுதல் - அதிகபட்சமாக ஆறு மாதங்கள் தண்டனை
- பிஎன்எஸ் 352 - பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவரை வேண்டுமென்று அவமதிப்பதை இப்பிரிவு குறிக்கிறது. இதன்படி, ஒருவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
- பிஎன்ஸ் 79 - பெண்ணின் கண்ணியத்துக்கு அல்லது மானத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல் - இதன்படி, அதிகபட்சமாக ஒருவருக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
- பிஎன்ஸ் 296(b) - பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல், இதற்கு அதிகபட்சமாக மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
- பிஎன்எஸ் 61 - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சட்டவிரோத செயலை செய்ய திட்டமிடுதல்.
- பிஎன்எஸ் 351 - ஒருவருக்கு மிரட்டல் விடுவது
- தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடைச் சட்டம் பிரிவு 4 - இதன்படி, ஒருவருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
- தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67

வழக்கறிஞர் கூறுவது என்ன?
உதயநிதி ஸ்டாலின் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட விதம் குறித்து பேசிய வழக்கறிஞர் விஜேந்திரன், "ஆர்னேஷ் குமார் எதிர் ஹரியாணா வழக்கில், ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக சிறைத் தண்டனை உள்ள பிரிவுகள் பதியப்பட்டால், சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும், நேரடியாக கைது செய்யக் கூடாது என பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் வழிமுறைகளை பிறப்பித்துள்ளது" என்றார்.
உதயநிதியின் பேச்சில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய இரண்டும்தான் பொருந்தும் என்றும், மற்ற பிரிவுகள் உட்படாது என்றும் வழக்கறிஞர் விஜேந்திரன் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
காவிரி விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து தஞ்சையில் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கவலை இல்லை என்றும், அவரது ஒரே கவலை திமுக மீது வழக்குப் போடுவதுதான் என்றும் குறிப்பிட்டார். பேச்சுக்கு நடுவே கூட்டத்தில் இருந்து எழுந்த முழக்கங்களைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்ட சில விஷயங்களே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. அது முதலமைச்சரை அவமதிக்கும் விதமாக உள்ளதாக தவெக மட்டுமல்லாது பிற அரசியல்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































