ஹோர்மூஸை திறப்பது குறித்த பேச்சு: ஓமன் நம்பிக்கை தெரிவித்தாலும் இரான் விடுத்த எச்சரிக்கை என்ன?

ஹோர்மூஸ் நீரிணை, இரான், ஓமன், பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜாக் பெர்ஜஸ்
    • எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மன் ஜூனியர்
    • பதவி, வெள்ளை மாளிகை செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையை உறுதி செய்யும் ஒப்பந்தம் தொடர்பாக இரானுடன் நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஓமன் தெரிவித்துள்ளது. அதேவேளையில், எந்த ஒப்பந்தமும் இந்த முக்கியமான நீர்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று இரான் எச்சரித்துள்ளது.

சனிக்கிழமை இரு தரப்பும் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காண்பதாகக் கூறின. எனினும், எந்த ஒப்பந்தம் எப்போது இறுதிப்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாக இல்லை. கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் தாக்குதல்களுக்கு எதிராக ஓமனின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது "மற்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என்றும் கூறினார்.

உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாகச் செல்லும் இந்த நீர்வழியை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரியில் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து இரான் முடக்கியுள்ளது.

சமீப நாட்களில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக புதிய பாதை ஒன்றை உருவாக்குவது குறித்து இரானும் ஓமனும் ஒப்பந்தம் செய்யும் சாத்தியம் பற்றிய பேச்சுகள் நடைபெற்றன. அந்தப் பாதைக்கான பொறுப்பை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் என்றும், அதன்மூலம் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

ஆனால், பொதுவாக மிகவும் பரபரப்பாக இயங்கும் இந்த கடல் வழி முழுமையாக மீண்டும் திறக்கப்படுவது பிற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதையே சார்ந்துள்ளது என்று அராக்சி தெரிவித்தார். அந்த நிபந்தனைகள் குறித்து அவர் சுருக்கமாக மட்டுமே விளக்கமளித்தார்.

போரை நிறுத்தவும், போரை முடிவுக்குக் கொண்டு செல்லும் பேச்சுவார்த்தைகளை முன்னேற்றவும் ஜூன் மாதத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக இரான் கூறும் நடவடிக்கைகளுக்காக, இரான் அமெரிக்காவிடமிருந்து இழப்பீடு பெறுவதும் அந்த நிபந்தனைகளில் ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் என அழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் விரைவில் முறிந்தது. அதேபோல்,பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன. ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே இருதரப்பினரின் பதிலடி தாக்குதல்கள் மீண்டும் தொடங்கின.

ஹோர்மூஸ் நீரிணை, இரான், ஓமன், பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்கிடையே இரானின் பாதுகாப்புத் தலைவர் முகம்மது பகேர் சொல்காதர், அமெரிக்கா தனது நடத்தையை "சரிசெய்யும்" வரை ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாது என்று பகுதி அரசு செய்தி நிறுவனமான் தஸ்னிம்மிடம் தெரிவித்தார்.

இரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்துவது, இரானிய துறைமுகங்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை நீக்குவது, மற்றும் இரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், செளதி அரேபியாவின் செங்கடல் துறைமுகங்களுக்கு எதிராக மற்றொரு முற்றுகையை, இரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூத்தி குழு ஜூலை 20 முதல் அமல்படுத்தி வருகிறது.

இரானுடன் ஓர் ஒப்பந்தம் "விரைவில் உருவாகலாம்" என்று இந்த வாரத்தின் தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

ஆனால் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சனிக்கிழமை அதிக எச்சரிக்கையுடன் பேசினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டியில், முன்னேற்றம் காணப்பட்டாலும் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன என்றார்.

"நாங்கள் இன்னும் விளையாட்டின் நடுப்பகுதியில் இருக்கிறோம்," என்றார் அவர். "இது இன்னும் முடிவுக்கு வரவில்லை."

மேலும், "அமெரிக்க மக்களுக்கு சிறந்த முடிவை உறுதி செய்ய நாங்கள் பேச்சுவார்த்தை, பொருளாதார மற்றும் ராணுவ கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி வருகிறோம்" என்றும் அவர் கூறினார்.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க ராணுவ நடவடிக்கை தொடங்கும் முன் வளைகுடா பகுதியில் இருந்து வெளியேறிய அதே அளவு எண்ணெய் தற்போது வெளியேறும் என்றும் அவர் கூறினார். ஆனால் அதற்கான விவரங்களை வழங்கவில்லை.

"கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லக்கூடிய போக்குவரத்து அமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதில்தான் தற்போது நாங்கள் உண்மையில் கவனம் செலுத்துகிறோம்," என்றும் அவர் கூறினார்.

இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கிய கருத்து வேறுபாடுகளில் ஒன்று, நீரிணையை கடந்து செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க இரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவலாகும்.

ஹோர்மூஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களிடம் அவர்கள் ஏற்றிச் செல்லும் சரக்குகளின் மதிப்பில் 5% முதல் 7% வரை கட்டணம் வசூலிக்க இரான் விரும்புவதாக ஒரு இரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முன்பு செய்தி வெளியிட்டது.

இந்த தகவல்களின் முக்கியத்துவத்தை குறைத்து பேசிய வான்ஸ்,"ஹோர்மூஸ் நீரிணையில் சுங்கம் அல்லது கட்டணம் விதிக்கும் திட்டம் இல்லை என்று இரானியர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்," என்றார்.


ஹோர்மூஸை திறப்பது குறித்து இரான் - ஒமன் இடையிலான பேச்சு எந்த கட்டத்தில் உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

நீரிணையில் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தவிர்க்குமாறு ஓமன் எச்சரித்த நிலையில், அரசின் எண்ணெய் நிறுவனமான அட்னோக்குடன் தொடர்புடைய ஒரு டேங்கர் கப்பல் அப்பகுதியைக் கடந்து சென்றபோது, அதை இரான் குறிவைத்து தாக்கியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சனிக்கிழமை தெரிவித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அட்னோக்குடன் தொடர்புடைய டேங்கர் கப்பல் மீது "இரானின் பகைமையான ஏவுகணை தாக்குதல்" நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்றைய தினத்தில் பின்னர், ஓமன் கடற்கரைக்கு அருகே பயணித்த ஒரு கப்பல் "அடையாளம் தெரியாத ஏவுகணை போன்ற பொருளால்" தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக தீப்பற்றியிருந்தாலும் அது அணைக்கப்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (யுகேஎம்டிஓ) தெரிவித்தது.

யுகேஎம்டிஓ குறிப்பிட்ட கப்பல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறிப்பிட்ட கப்பல்கள் ஒரே கப்பலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு