You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல ஆயிரம் கோடி ரூபாய் குவிந்தும் சில லட்சம் மட்டுமே செலவு: 'பிஎம் கேர்ஸ் நிதி' பற்றி எழும் கேள்விகள்
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
2020 ஆம் ஆண்டில் வெறும் 2.25 லட்சம் ரூபாயுடன் தொடங்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில், 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 8,452 கோடி ரூபாய் குவிந்திருந்தது.
பிஎம் கேர்ஸ் நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆனால் 8,452 கோடி ரூபாய் கையிருப்பில் இருந்தபோதிலும், 2024-25 ஆம் ஆண்டில் இந்த நிதியிலிருந்து வெறும் 87.85 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை, அரசு பிஎம் கேர்ஸ் நிதியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. ஆனால் அந்த எண்ணிக்கைகள் பல பழைய மற்றும் புதிய கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
பேரிடர்கள் மற்றும் அவசரநிலைகளின் போது, மக்களுக்கு உதவுவதற்காக இந்த நிதி 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஆனால் விமர்சகர்களின் கருத்துப்படி, கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் மற்றும் பிற பெரிய இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டபோதிலும், ஒப்பீட்டளவில் இந்த நிதியிலிருந்து மிகக் குறைந்த தொகையே செலவிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, நிதியின் வருவாயும் மொத்த சேமிப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் செலவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால், பேரிடர் நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த நிதி, அவசியமான நேரங்களில் ஏன் விரிவாக பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்திய தணிக்கை அறிக்கை என்ன சொல்கிறது?
பிஎம் கேர்ஸ் நிதியின் தணிக்கை அறிக்கைப்படி, 2024-25 ஆம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த நன்கொடைகளில் 479.04 கோடி ரூபாய் இந்தியாவிற்குள் இருந்து கிடைத்த நன்கொடைகளாகவும், சுமார் 92 லட்சம் ரூபாய் வெளிநாடுகளில் இருந்து வந்த நன்கொடைகளாகவும் இருந்தன.
நன்கொடைகளைத் தவிர, இந்த நிதிக்கு 475.14 கோடி ரூபாய் வட்டித் தொகையாகவும் கிடைத்துள்ளது. அதில் 469.37 கோடி ரூபாய் நிலையான வைப்புத் தொகைகளிலிருந்தும், 5.76 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளிலிருந்தும் கிடைத்தன.
முன்னர் சிலத் திட்டங்களுக்காக நிதி வழங்கப்பட்ட முகமைகளிடமிருந்து 324.65 கோடி ரூபாய் திரும்பப்பெறப்பட்ட தொகையாக இந்த நிதிக்குத் திரும்பியுள்ளது.
அவை எந்த முகமைகள்? ஏன் இந்தத் தொகை திருப்பி வழங்கப்பட்டது? என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
இதற்கு மேலாக, மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகை திரும்பப் பெறப்பட்டதன் முலம் 13.49 லட்சம் ரூபாய் இந்த நிதிக்கு வந்துள்ளது.
சமீபத்திய தணிக்கை அறிக்கையின்படி, நிதியின் மொத்தத் தொகையில் 93 சதவீதம், அதாவது 7,846 கோடி ரூபாய், நிலையான வைப்பு கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் செலவினங்களைப் பொறுத்தவரை, 2024-25 ஆம் ஆண்டில் வெறும் 87.85 லட்சம் ரூபாயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 87.84 லட்சம் ரூபாய் "பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்" திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளன. அந்தக் குழந்தைகள் திட்டத்தின் கீழ் எந்தப் பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டது என்பது தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு சில நாட்களுக்குப் பிறகு, 27 மார்ச் 2020 அன்று, பிஎம் கேர்ஸ் நிதி ஒரு பொது தொண்டு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது.
இந்த நிதியின் தலைவராக பிரதமர் உள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் அதன் அறங்காவலர்களாக உள்ளனர்.
ஆனால் இதுவரை இந்த நிதிக்கு யார் யாரெல்லாம் நன்கொடை வழங்கினர், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது பொதுவில் வெளியிடப்படவில்லை.
தணிக்கை அறிக்கையால் எழும் கவலைகள் என்ன?
டெல்லி ஐஐடியில்(இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) பணியாற்றும் பொருளாதார நிபுணர் ரிதிகா கேரா கூறுகையில், "பிஎம் கேர்ஸ் ஃபண்ட் என்பது 'திரைக்குப் பின்னாலுள்ள வெளிப்படைத்தன்மை' போன்றது. அரசு இதனுடைய தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுகிறது, இதில் தாமதம் ஏற்பட்டாலும், அந்த வெளிப்படுத்தல் வெற்றுத்தனமானது மற்றும் அதில் உண்மையான தகவல்கள் எதுவும் இல்லை" என்கிறார்.
தகவல் அறியும் உரிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு தொடர்பான விஷயங்களில் பணியாற்றும் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜும் இதேபோன்ற கவலையை வெளியிடுகிறார்.
அவரைப் பொறுத்தவரை பி எம் கேர்ஸ் நிதியில் கவலைக்குரிய மிகப்பெரிய விஷயம் வெளிப்படைத்தன்மை இல்லாததுதான்.
அவர் கூறுகையில், 'இந்த நிதி பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த நிதிக்கு எங்கிருந்து பணம் வருகிறது மற்றும் இந்த நிதி எங்கு பணத்தை செலவிடுகிறது என்பது பற்றிய எந்தவொரு தகவலும் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. நம் நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளது, இதன் கீழ் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் பெற முடியும், குறிப்பாக பொதுமக்களின் பணத்திலிருந்து பெருமளவில் நிதி உதவி பெறும் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களைப் பெறலாம். ஆனால் பிஎம் கேர்ஸ் நிதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து வெளியே வைக்கப்பட்டுள்ளது' என்கிறார்.
அஞ்சலி பரத்வாஜின் கருத்துப்படி, இந்த நிதி உருவாக்கப்பட்டபோது, இது மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிதி என்று கூறப்பட்டது. அதனால் நிறுவனங்களின் நிறுவன சமூக பொறுப்பு நிதிகளும் இதில் செலுத்தப்பட்டன.
"தொடக்க நாட்களிலேயே, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து சிஎஸ்ஆர் நிதியாக 3000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை பெறப்பட்டது. சட்டத்தின்படியும், நிறுவனங்கள் சட்டத்தின் விதிகளின்படியும் இந்த நிதி மத்திய அரசால் உருவாக்கப்பட்டது என்று கூறியே அந்தத் தொகை வாங்கப்பட்டது." என்கிறார் அவர்.
'ஆனால், பணம் எங்கே செலவிடப்படுகிறது, எங்கிருந்து எவ்வளவு பணம் வருகிறது என்று மக்கள் தகவல் கேட்கத் தொடங்கிய போது, அரசாங்கம் நிறுவனங்கள் சட்டத்தின் விதிகளை முன்தேதியிட்டு மாற்றியமைத்தது. அத்துடன், இந்த நிதி மத்திய அரசால் உருவாக்கப்படவில்லை என்றும், இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் ஒரு அதிகாரம் கொண்ட பொது அமைப்பு அல்ல என்றும் கூறியது; எனவே, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் எந்தவொரு தகவலும் வழங்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டது' என்கிறார் அவர்.
தணிக்கை அறிக்கையால் எழும் கேள்விகள் என்ன?
2024-25 ஆம் ஆண்டில் பிஎம் கேர்ஸ் நிதியில் 8,452 கோடி ரூபாய் இருந்தது. ஆனால் செலவிடப்பட்டது வெறும் 87.85 லட்சம் ரூபாய் மட்டுமே.
2024-25 நிதியாண்டில் செய்யப்பட்ட செலவினத்தை அதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 2023-24இல் 15.59 கோடி ரூபாயும், 2022-23இல் 437.87 கோடி ரூபாயும், 2021-22இல் 3,716.29 கோடி ரூபாயும், 2020-21இல் 3,976.17 கோடி ரூபாயும் செலவிடப்பட்டிருந்தன.
இந்தத் தரவுகளைப் பார்க்கும்போது, செலவிடப்படும் பணம் தொடர்ந்து குறைந்து வருவது தெளிவாகிறது, இப்போது இந்த விஷயம் குறித்துக் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
"நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அமைப்பு அல்லது குழு ஏதாவது உள்ளதா, அதில் யார் உள்ளனர், எந்த அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். அதோடு, யார் நன்கொடை அளிக்கிறார்கள், யார் அல்லது எந்த அமைப்புகளுக்கு நிதி வழங்கப்படுகிறது என்பதும் தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும்" என்கிறார் ரிதிகா கேரா.
"இவ்வளவு அதிகமான நிதியை சேகரித்து பயன்படுத்தாமல் வைத்திருப்பதற்கான காரணம் புரியவில்லை. நாட்டில் பேரிடர்கள் ஏற்படுவதில்லை என்பதல்ல. பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்ந்து நிகழ்கின்றன. அப்படியிருக்க, செலவிடப்படவில்லையெனில் இந்த அளவுக்கு நிதியை ஏன் சேகரிக்க வேண்டும் என்பது பெரிய கேள்வி" என கேள்வி எழுப்புகிறார் அஞ்சலி பரத்வாஜ்.
2024-25ஆம் ஆண்டில் நிதிக்கு திருப்பி அளிக்கப்பட்ட 325 கோடி ரூபாய் குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
"இந்தத் தொகை ஏன் திரும்பக் கிடைத்தது? எந்தத் திட்டத்திற்கு பணம் வழங்கப்பட்டது? பின்னர் அது எதற்காகத் திரும்பப் பெறப்பட்டது?"
கோவிட் காலத்தில் பிஎம் கேர்ஸ் நிதியின் மூலம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட சில வென்டிலேட்டர்களில் கோளாறுகள் இருந்ததாகவும், இதனால் பலர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதுகுறித்து, பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வு தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார். பின்னர், அந்தக் கோளாறுள்ள வென்டிலேட்டர்களுக்கான பணம் திரும்பப் பெறப்பட்டதாகவும், அவை பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை அல்ல என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
"இப்போது 325 கோடி ரூபாய் திருப்பி பெறப்பட்டுள்ளது. அப்படியானால், எந்த இடத்திற்கு நிதி வழங்கப்பட்டது? ஏன் அதனைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது" என்று அவர் மேலும் தொடர்கிறார்.
2024-25 ஆம் ஆண்டில் "பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்" திட்டத்துக்காக செலவிடப்பட்ட 87.84 லட்சம் ரூபாய் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பதும் தணிக்கை அறிக்கையில் விளக்கப்படவில்லை.
"மக்களின் நலனுக்காக உண்மையில் ஏதாவது செய்யப்படுகிறதா, குழந்தைகளுக்காக வேலை நடைபெறுகிறதா என்பதை யாராவது சரிபார்க்க விரும்பினால், அந்தத் தகவலை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தத் தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். மக்கள் அதைச் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் கவலைக்குரிய விஷயம் இருந்தால் அதையும் ஆய்வு செய்ய முடியும். அதற்காக இந்தத் தகவல்களை வெளிப்படுத்துவது மிக அவசியம். ஆனால் அவை பகிரப்படவில்லை" என்கிறார் அஞ்சலி பரத்வாஜ்.
தேர்தல் பத்திரங்களைப் போன்ற வெளிப்படைத்தன்மையின்மையா?
பிஎம் கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை, தேர்தல் பத்திரங்கள் விவகாரத்துடனும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக மிகப் பெரிய கவலையாக இருந்ததும் தகவல் வெளிப்படைத்தன்மை இல்லாததே. இந்தத் திட்டத்தில் எந்த நபர் அல்லது நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தது என்ற தகவல் பொதுமக்களுக்குக் கிடைக்காது. இதனால் மக்களுக்கு அரசியல் நன்கொடைகளின் ஆதாரத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது.
அஞ்சலி பரத்வாஜ் கூறுகையில், "முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசு இத்தகைய அமைப்புகளைக் கொண்டுவருகிறது - சில நேரங்களில் முற்றிலும் பெயரற்ற தேர்தல் பத்திரங்களைக் கொண்டுவருகிறது, சில நேரங்களில் ஒரு இரகசிய நிதியான பிஎம் கேர்ஸ் நிதியைக் கொண்டுவருகிறது. பிஎம் கேர்ஸ் நிதியில் ஆளும்கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள். பிரதமரும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களும் அலுவல் சார்ந்த பதவியில் இதில் அமர்ந்துள்ள நிலையில், இது ஒரு தனியார் நிதி என்றும், இது பொது அதிகார அமைப்பு அல்ல என்றும் கூறப்படுகிறது, இதனால் பிரதிபலன் எதிர்பார்ப்பு நடவடிக்கைக்கான ஒரு பெரிய சாத்தியக்கூறு உருவாகிறது" என்கிறார்.
"நலன் முரண்பாடு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, யார் நன்கொடை அளித்தார்கள் என்பதைக் காண வேண்டும். அப்போதுதான் சுயாதீன ஆய்வு சாத்தியம். அரசு தொடர்புடைய நிதிக்கு பணம் செல்கிறது என்றால் அதிலிருந்து வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அதற்கான குறைபாடு தென்படுகிறது." என ரிதிகா கேரா கூறுகிறார்.
"எல்லாமும் விதிமுறைகளின்படி நடைபெறுகிறது, எந்தக் குறையும் இல்லை என்றால், யார் நன்கொடை அளித்தார்கள், யாருக்கு நிதி வழங்கப்பட்டது, எந்த அடிப்படையில் செலவு செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதைக் கூறுவதில் அரசுக்கு தயக்கம் இருக்கக் கூடாது." என்கிறார் ரிதிகா.
"வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பிஎம் கேர்ஸ் நிதியை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்" என்பது அஞ்சலி பரத்வாஜின் கருத்து.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு