'தினமும் 14 மணி நேரம் போன்' - அடிமைத்தனத்தை முறியடிக்க சிகிச்சை பெறும் நபரின் அனுபவம்

    • எழுதியவர், ரூத் கிளெக்
    • பதவி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மாரியோஸின் மொபைல் போன் 'பிங்' என்ற சத்தத்துடன் ஒளிர்கிறது. இந்தச் செய்திக் கட்டுரை தொடர்பாக முதற்கட்டமாகப் பேசுவதற்காக நான் அவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் அது.

உடனடியாகப் பதிலளிக்க அவர் விரும்புகிறார். அந்தத் தூண்டுதல், சொல்ல முடியாத அளவுக்குத் தீவிரமாக இருந்ததாக அவர் என்னிடம் பின்னர் கூறுகிறார்.

இருப்பினும், அவர் தற்போது தனது மொபைல் போன் அடிமைத்தனம் குறித்து ஒரு சிகிச்சை அமர்வில் இருக்கிறார். இப்போது அவரால் பதிலளிக்க முடியாது.

அவர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார். ஆனால், அந்த அமர்வு முடிந்த உடனேயே அவர் மீண்டும் தனது போனைப் பார்க்கிறார். ஒரு மணிநேரம் கழித்து, நாங்கள் வீடியோ காலில் பேசுகிறோம்.

"மன்னிக்கவும்," என்று நான் கூறுகிறேன். "உங்கள் அமர்வுக்கு இடையூறாக இருக்க நான் விரும்பவில்லை."

"பரவாயில்லை," என்று பெருமூச்சு விடுகிறார் மாரியோஸ். "பல ஆண்டுகளாக நான் அனுபவித்து வரும் உணர்வு இதுதான்: என்னுடைய தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத தூண்டுதல்''

"இது உங்கள் சொந்த போதைப்பொருள் வியாபாரியை எப்போதும் சுமந்து செல்வது போன்றது."

"எனது போதைப்பொருள் எப்போதும் என் பாக்கெட்டிலேயே இருக்கிறது. மின்னிக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும், அதை எடுத்துப் பயன்படுத்த எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது."

வடக்கு லண்டனைச் சேர்ந்த தனிநபர் பயிற்சியாளரான மாரியோஸ், மோசமான நாட்களில் 14 மணிநேரத்திற்கு மேலாகத் தனது போன் திரையைப் பார்த்துக்கொண்டே இருப்பார் (இன்ஸ்டாகிராம் தான் தனக்குக் கூடுதல் பாதிப்பைத் தருவதாக அவர் கூறுகிறார்).

ஆனால் தற்போது, இந்தக் கட்டுப்படுத்த முடியாத பழக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக, 12 அமர்வுகளைக் கொண்ட சிகிச்சையை அவர் பெற்று வருகிறார். இந்தப் பழக்கத்திற்குப் பின்னால் தனிமை உணர்வே முக்கிய காரணம் என அவர் நம்புகிறார்.

என்னுடைய திரை பயன்பாட்டு புள்ளிவிவரங்களைப் பார்த்தபோது, நேற்று மட்டும் நான் எனது தொலைபேசியை 116 முறை பார்த்திருந்தது தெரியவந்தது. அதோடு, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன்.

மாரியோஸ் அடிமையாகிவிட்டாரா? நானும் அடிமையாகிவிட்டேனா?

அதை அறிந்துகொள்வது கடினம்.

மொபைல் போன் அடிமைத்தனம் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமான ஒரு மருத்துவ நிலையாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், டெலாய்ட் நிறுவனம் 1,000 பெரியவர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வில், 70 சதவீதத்தினர் தாங்கள் மொபைல் போன்களில் அதிக நேரம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் நமது மூளையின் வேதியியலை மாற்றியமைப்பதாகப் பல கல்வியாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், சாதனங்களுக்கு முழுமையாக அடிமையாகிவிட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அடிமைத்தனப் பழக்கங்களுக்கான சிகிச்சை நிபுணர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

ஆண்டுக்கு 3,500 பேருக்கு சிகிச்சை அளிக்கும் 'யு.கே அடிக்சன் ட்ரீட்மென்ட் சென்டர்ஸ்' (யு.கே.ஏ.டி) அமைப்பில், போதைப்பொருள் அடிமைத்தனத்திற்காக சிகிச்சை பெற்றவர்களில் மூன்றில் ஒருவருக்கு, கடந்த ஆண்டு மொபைல் போன் அடிமைத்தனமும் இருந்தது. இது 2019-ல் பத்தில் ஒருவராக இருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது.

சிகிச்சை மையத்திற்குள் நுழையும்போது தங்கள் மொபைல் போன்களை ஒப்படைக்க மறுப்பதன் காரணமாக, சிலர் தங்களது முதன்மை அடிமைத்தனத்திற்கான சிகிச்சையிலிருந்தே பாதியிலேயே விலகிவிடுகிறார்கள் என்று யு.கே.ஏ.டி கூறுகிறது.

ஆனால், அதிகமாக குறுஞ்செய்தி அனுப்பும் ஒருவருக்கும், தொழில்முறை உதவி தேவைப்படும் அளவுக்கு டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையான ஒருவருக்கும் இடையிலான எல்லை எப்போது கடக்கப்படுகிறது?

மரங்கள் நிறைந்த நீண்ட நுழைவுப் பாதை வழியாக ரெய்ன்ஃபோர்ட் ஹால் நோக்கி நான் சென்றபோது, ஜேக்கோபியன் காலத்தைச் சேர்ந்த பிரமாண்டமான வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் அழகாக பராமரிக்கப்பட்ட தோட்டங்கள் என்னை வரவேற்றன.

டிஜிட்டல் அடிமைத்தனத்திற்கு சிகிச்சை அளிக்கும் மையமாக இது இருக்கும் என்று முதலில் நினைத்துப் பார்க்க முடியாத இடமாகத் தோன்றியது.

'பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு'

இந்த 'ஸ்டெப்ஸ் டு கெதர்' மறுவாழ்வு மையம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு அடிமைத்தனப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறது. ஆனால், சமீபகாலமாக தங்களது டிஜிட்டல் சாதனங்களை விட்டு விலக முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இது எந்தப் பின்னணியைக் கொண்டவரையும் பாதிக்கலாம்," என்று முதன்மை சிகிச்சையாளர் கெல்லி வாட்சன் விளக்குகிறார்.

"நம் அனைவரிடமும் மொபைல் போன்கள் உள்ளன. நம் மூளையின் செயல்பாட்டு அமைப்பும் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதனால் நம்மில் பலர் இதற்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது," என்கிறார் அவர்.

நம் மூளையின் ஒரு பகுதி வெகுமதி முறையின் அடிப்படையில் செயல்படுகிறது என்று அவர் கூறுகிறார். நமக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்போது, சமூக ஊடகங்களில் ஒரு 'லைக்' கிடைக்கும்போது, அல்லது இணையதளத்தில் புதிய தகவல்களைப் படிக்கும்போது மூளையில் டோபமைன் சுரக்கிறது. இந்த வேதிப்பொருள்தான் மகிழ்ச்சி மற்றும் உந்துதலைக் கட்டுப்படுத்தும் முக்கியமான ரசாயனத் தூதுவராக செயல்படுகிறது.

இறுதியில், நம்மில் சிலருக்கு இந்த உணர்வைப் பெறுவதற்கான தேவை மிக அதிகமாகிவிடுகிறது. இது நம் வாழ்க்கையின் பல மணிநேரங்களை, ஏன் நாட்களையே கூட ஆன்லைன் உலகில் தொலைந்து போகச் செய்து, கட்டுப்பாட்டை மீறிவிடக்கூடும் என்று அவர் விளக்குகிறார்.

மற்றொரு 'ஸ்டெப்ஸ் டு கெதர்' மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஜேம்ஸுக்கு அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று தெரியும்.

48 வயதான ஜேம்ஸ், ஆரம்பத்தில் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவி நாடினார். ஆனால், அவரது டிஜிட்டல் சார்ந்திருத்தலும் கட்டுப்பாட்டை மீறிச் சென்றது விரைவில் தெளிவாகத் தெரிந்தது.

ஜேம்ஸ் தனது வேலையை இழந்த பிறகு, சமூக ஊடகங்களில் ஸ்க்ரோலிங் செய்வது, செய்திகளைச் பார்ப்பது மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பது என அவரது நாட்கள் கழிந்தன.

அவர் சமூக ஊடகங்களில் எதாவது பதிவிட்டால், நள்ளிரவிலும் விழித்துக்கொண்டு 'லைக்குகள்' மற்றும் கமெண்டுகளைச் சரிபார்ப்பார். டிஜிட்டல் உலகம் தன்னைச் சிறைபிடித்து வைத்திருப்பதைப் போல உணர்ந்ததாக அவர் என்னிடம் கூறுகிறார்.

ஆனால், தனது மொபைலைப் பயன்படுத்துவதில் இருந்த மகிழ்ச்சி அவருக்கு மறைந்துவிட்டது. "நான் அதைப் பார்த்து அஞ்சத் தொடங்கினேன்," என்று நினைவுகூருகிறார் ஜேம்ஸ். "என் ஆன்மாவின் ஒரு பகுதி என்னிடமிருந்து உறிஞ்சப்பட்டது போல இருந்தது, ஆனால் என்னால் அதை நிறுத்த முடியவில்லை."

'நிஜ உலகத்திலிருந்து தங்களைப் பிரித்துக்கொள்கிறார்கள்'

முதன்முறையாக சிகிச்சைக்காக வரும் பலரும் கவலையுடனும் குழப்பத்துடனும் இருப்பார்கள். மேலும், தங்கள் மொபைல் போன்களை விட்டு விலக விரும்ப மாட்டார்கள் என்று வாட்சன் கூறுகிறார்.

"அவர்கள், 'எனக்கு வேலைக்கு இது தேவை, குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க இது தேவை' என்று கூறுகிறார்கள்."

"அவர்களின் குரலில் இருக்கும் பயத்தை என்னால் உணர முடியும். அந்த மொபைல்தான் அவர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாறிவிட்டது," என்று அவர் விளக்குகிறார்.

பலர் குறைந்தது 28 நாட்கள் இந்தத் தங்கும் மையத்தில் இருந்து, தங்கள் அடிமைத்தனத்தைத் தூண்டும் சிக்கல்களுக்காகக் குழு மற்றும் தனிநபர் சிகிச்சையைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், அவர்களின் அடிமைத்தனத்திற்குக் காரணமான பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, மொபைல் சார்புநிலையிலிருந்து மெதுவாக வெளியே வரவும் உதவப்படுகின்றனர்.

வாட்சன் அவர்களுடன் இணைந்து, அவர்களின் ஸ்க்ரீன் நேரத்தை படிப்படியாகக் குறைக்கவும், அவர்கள் சாதனத்தைப் பயன்படுத்தாதபோது என்னென்ன எண்ணங்களும் உணர்வுகளும் தோன்றுகின்றன என்பதைக் கண்டறியவும் உதவுகிறார்.

''சிலருக்கு வாழ்க்கையின் அழுத்தங்களை சமாளிப்பது கடினமாக இருக்கலாம். அதிலிருந்து தப்பிக்க அவர்கள் மொபைலில் தொடர்ந்து ஸ்க்ரோல் செய்கிறார்கள். அதன் மூலம் நிஜ உலகத்திலிருந்து தங்களைப் பிரித்துக்கொள்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

சிலருக்கு வாழ்க்கையின் அழுத்தங்களை சமாளிப்பது கடினமாக இருக்கலாம். அதிலிருந்து தப்பிக்க அவர்கள் மொபைலில் தொடர்ந்து ஸ்க்ரோல் செய்கிறார்கள். அதன் மூலம் நிஜ உலகத்திலிருந்து தங்களைப் பிரித்துக்கொள்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

2017-ஆம் ஆண்டில், தங்கள் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பயன்பாடு குறித்து அக்கறை கொண்ட சிலர் ஒன்றிணைந்து, இணையம் மற்றும் தொழில்நுட்ப அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவுக் குழு (ஐடிஏஏ) என்ற உலகளாவிய அமைப்பை உருவாக்கினர். இது, மதுபான அடிமைத்தனத்திலிருந்து மீள உதவும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர்தான் ஜென்னி. மொபைல் போன் அடிமைத்தனம் உச்சத்தில் இருந்தபோது, அவர் பல நாட்கள் தூங்காமலும், சரியாக சாப்பிடாமலும், தண்ணீர் கூட குடிக்காமலும் இருந்ததாக கூறுகிறார்.

"என் வாழ்க்கையின் பல பகுதிகளை நான் இழந்துவிட்டேன்," என்று விளக்குகிறார் 30 வயதான அந்தப் பெண். பிபிசி தனது உண்மையான பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது திரையில் என்ன தோன்றுகிறது என்பது முக்கியமில்லை. திரைப்படமோ, தொடர்களோ, குறும்படங்களோ எதுவாக இருந்தாலும், ஏதாவது ஒன்றைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவரது நிலை.

"நான் எவ்வளவு அடிமையாக இருந்தேன் என்பதை, அதிலிருந்து விலக முயன்றபோதுதான் உணர்ந்தேன். என் சாதனங்களை பூட்டி வைக்கும்படி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது," என்று ஜென்னி நினைவு கூர்கிறார்.

"நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்றால், நான் எதையாவது பார்க்கவில்லை என்றால் இறந்துவிடுவேன் என்று கூட நினைத்தேன்."

மீண்டும் போன் அடிமைத்தனம் அதிகரித்தால், குடும்பத்தினரின் மொபைல் அல்லது லேப்டாப்பை அனுமதி இல்லாமல் எடுத்துப் பயன்படுத்துவார். ஆனால், அதன் பின்னர் குற்றவுணர்வும் வெட்கமும் அவரை ஆட்கொள்ளும். அந்த உணர்வுகளிலிருந்து தப்பிக்க மீண்டும் அதிகமாக வீடியோக்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்குவார்.

ஆண்டுகள் நீடித்த "உதவிக்கான தேடலுக்குப் பிறகு", அவர் ஐடிஏஏ அமைப்பைக் கண்டறிந்து, அதன் 12 வழிமுறைகளைப் பின்பற்றினார். தற்போது அவர் மீண்டு வந்துவிட்டார், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எதையும் ஸ்ட்ரீம் செய்யவோ அல்லது பார்க்கவோ இல்லை.

"இப்போது ஒரு சாதாரண போன் வைத்திருப்பதிலும், வேலைக்காக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துவதிலும் எனக்கு எந்த சிரமமும் இல்லை. இப்போது கட்டுப்பாடு என்னிடம்தான் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

ஐடிஏஏ அமைப்பின் மற்றொரு உறுப்பினரான டாம், தனது அடிமைத்தனம் தன்னை இருண்ட நிலைக்குக் கொண்டு சென்றதாகக் கூறுகிறார். அவர் தனது வாழ்க்கையின் பல மாதங்களை மொபைல் மற்றும் பிற திரைகளுக்காக இழந்திருக்கிறார்.

"தொடர்ச்சியாக 10 மணிநேரம் நான் எதையாவது பார்த்துக்கொண்டே இருப்பேன். ஒரே நேரத்தில் இசை கேட்பது, யூடியூப்பில் எதையாவது பார்ப்பது, சமூக ஊடகங்களில் ஸ்க்ரோலிங் செய்வது மற்றும் வீடியோ கேம் விளையாடுவது என அனைத்தையும் செய்வேன்."

"பிறகு இரண்டு மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வேன், மீண்டும் அந்தச் செயலில் ஈடுபடுவேன். இது மாதக்கணக்கில் நீடிக்கும்."

டாமின் அடிமைத்தனம் எவ்வளவு தீவிரமானது என்றால், அது அவர் தனது தொழிலை இழப்பதற்கும், வாழ்க்கையின் நோக்கம் குறித்த உணர்வை இழப்பதற்கும் காரணமாக அமைந்தது.

"வாழ்க்கையில் மீண்டும் உண்மையான மகிழ்ச்சியை நான் பெறத் தொடங்கியிருக்கிறேன். நான் நிறைய பிக்கிள் பால் விளையாடுகிறேன், வெளியே செல்கிறேன், உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்கிறேன்."

மீளும் வழி என்ன?

ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சைக்கான பிரிட்டிஷ் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர் ஹில்டா பர்க், டிஜிட்டல் சாதன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சமீபத்தில், 'தி போன் அடிக்சன் வொர்க்புக்' என்ற வழிகாட்டி புத்தகத்தை சமீபத்தில் எழுதினார்.

நீங்கள் போன் திரையில் அதிக நேரம் செலவிடுவதாகக் கவலைப்பட்டால், உங்கள் சொந்த நடத்தையை ஆராய்ந்து, அதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கலாம் என்று சிந்தித்துப் பார்க்குமாறு அவர் பரிந்துரைக்கிறார்.

"'அந்த நாளில் என்ன நடந்தது? யாராவது மெசேஜ் செய்வார்களா என்று காத்திருந்தேனா?' போன்ற கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்."

பெரும்பாலும், ஒரு மெசேஜிற்குப் பதில் வருவதற்கு நாம் காத்திருப்பதுதான் ஆரம்பத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்று பர்க் விளக்குகிறார். இதுவே, கவனத்தைத் திசைதிருப்ப நமது போனைப் பயன்படுத்த நம்மைத் தூண்டுகிறது.

"ஆன்லைனுக்குச் செல்வதற்குப் பதிலாக, கவனத்தைத் திசைதிருப்ப வேறு ஏதாவது செய்யுங்கள். ஒரு நண்பருக்கு போன் செய்யுங்கள், ஓட்டப்பயிற்சிக்குச் செல்லுங்கள், புத்தகம் படியுங்கள்."

"எந்தக் குற்ற உணர்ச்சியோ அல்லது அவமானமோ கொள்ளாதீர்கள் - அதற்குப் பதிலாக, அடுத்த முறை இதை எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசியுங்கள்."

நம்மில் பலர் சிக்கிக்கொள்ளும் இந்த அடிமைத்தனமான சுழற்சியைத் தடுக்க, பயனர்கள் தங்கள் திரையில் செலவிடும் நேரத்தைக் கண்காணிக்கவும், சில செயலிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும் உதவும் அம்சங்களை மொபைல் போன் நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியுள்ளன.

தனது சிகிச்சை முறை, தனது மொபைல் போன் சார்ந்திருத்தலை முறியடிக்க உதவும் என்று மாரியோஸ் நம்பிக்கையுடன் இருக்கிறார். தனது போனில் உள்ள பல்வேறு செயலிகளின் உதவியுடன், அவர் ஸ்பானிஷ் மொழியில் சரளமாகப் பேசும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

"எல்லாம் மோசமானதாக இல்லை," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், அடுத்த நொடியே அவர் தூண்டுதலால் தனது போனை எடுக்கிறார். அதைத் தொட்டவுடன், தனது உறுதியை அவர் நினைவுகூர்கிறார் போலத் தெரிகிறது. அவர் தனது போனை உறுதியுடன் ஓரமாக வைக்கிறார்.

"ஒவ்வொரு நாளும், போனில் அதிக நேரம் இருக்கக்கூடாது என்று நான் எனக்குள்ளே ஓர் இலக்கை நிர்ணயிக்கிறேன், அது மாற்றத்தை ஏற்படுத்துகிறது," என்று மாரியோஸ் கூறுகிறார்.

"ஒவ்வொரு நாளும், நான் மீண்டும் மெதுவாக விஷயங்களை ரசிக்கத் தொடங்குகிறேன். இதைச் செய்ய முடியும், நான் உறுதியாக நம்புகிறேன்."

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு