You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எறும்புகளின் 'கூகுள் மேப்' சர்க்கரை இருக்கும் இடங்களை துல்லியமாகக் கண்டுபிடிப்பது எப்படி?
சமையலறையில் தேநீர் போடும்போது அடுப்புக்கு அடியில் சில சர்க்கரைத் துகள் விழுகின்றன. ஒரு மகிழ்ச்சியான நாளைக் கொண்டாட தயாரிக்கப்படும் பாயாசத்தின் சில துளிகள் ஒரு மூலையில் சிந்திவிடுகின்றன. நீங்கள் விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த லட்டு கொஞ்சம் நொறுங்கி சாப்பாட்டு மேசைக்கு அடியில் விழுந்துவிடுகிறது.
நம்மைப் பொறுத்தவரை, அது யாருக்கும் தெரியாத மிகச் சிறிய அளவிலான உணவுக் கழிவுகள். அதைத் தாண்டி, வீடு ஓர் அமைதியான இடமாகவே நமக்குத் தோன்றுகிறது.
ஆனால், வீடு அந்த அளவுக்கு அமைதியானது இல்லை. எங்கோ ஒரு டைல்ஸ் விரிசலுக்கு அடியில் இருந்து, கதவுச் சட்டகத்தின் அடியில் இருந்து, ஈரமான சுவர் மூலைகளில் இருந்து, சில எறும்புகள் நீங்கள் சிந்திய இந்த இனிப்புப் பண்டங்களின் மிச்சங்களை, சர்க்கரைத் துகள்களை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிடுகின்றன.
அவை தமது உணர்கொம்புகளால், உங்கள் வீட்டின் நிலப்பரப்பைத் தொட்டு, மனிதர்களால் உணர முடியாத வாசனைகள், ரசாயனத் தடங்களைப் புரிந்துகொண்டு, துல்லியமாக நீங்கள் சிந்திய மிச்சங்கள் இருக்குமிடத்தை வந்தடைகின்றன.
மறுநாள் காலையில், நம்மில் பலரும் இதுபோல சிந்தப்பட்ட இனிப்பு சுவைகொண்ட மிச்சங்களை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருப்பதையும், ஒரு நீண்ட மெல்லிய கோடு போல வரிசை கட்டிக்கொண்டு எறும்புகள் கூட்டமாக அதை நோக்கிப் படையெடுப்பதையும் பார்த்திருப்போம்.
அது எப்படி, எறும்புகளால் இனிப்புச் சுவை நிறைந்த உணவு மிச்சங்கள் இருக்கும் இடத்தை அவ்வளவு கச்சிதமாகக் கண்டறிந்து வந்தடைய முடிகிறது? அதுவரை வீட்டுக்குள் எங்கேயும் காணப்படாமல் இருக்கும் அவை எப்படி திடீரென சர்க்கரைத் துகள்கள், லட்டு சிதறல்கள் மீது கூட்டமாகக் குவிந்து விடுகின்றன?
சர்க்கரை இருக்குமிடத்தை எறும்புகள் கண்டறிவது எப்படி?
இதற்கான பதில், உங்கள் வீட்டில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் எறும்பு, சமையலறை முழுவதையும் மோப்பம் பிடித்துவிட்டது என்பதல்ல.
இதன் பின்னணி மிகவும் விசித்திரமானது, சுவாரஸ்யமானது, திறமையானது. எறும்புகள் இயற்கையின் மிகப் பழமையான தேடுபொறிகளில் ஒன்றைத் தமது உடலில் இயக்குகின்றன. அந்தத் தேடுபொறி, ரசாயன சமிக்ஞைகள், நினைவாற்றல், குழுவாக முடிவெடுத்தல் ஆகியவற்றைக் கொண்ட ஓர் உயிருள்ள வலையமைப்பாகச் செயல்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு, பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹிமேந்தர் பார்தி, சீனா மற்றும் ஜப்பானை சேர்ந்த மூன்று ஆய்வாளர்களுடன் இணைந்து இந்தியாவில் உள்ள எறும்பு இனங்கள் குறித்த பட்டியல் ஒன்றை உருவாக்கினார்.
அதன்படி, இந்தியாவில் மொத்தமாக 828 எறும்பு இனங்களும் அதன் துணை இனங்களும் இருப்பதாக அவர்கள் பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டிலும், கடந்த 2024ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குடியிருப்புப் பகுதிகள் உள்படப் பல்வேறு வாழ்விடங்களில் 34 வகை எறும்பு இனங்கள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டது.
எனவே, உங்கள் வீட்டு சமையலறைக்குள் வரக்கூடிய எறும்பு என்பது ஒரே குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது அல்ல. ஆனால், இவற்றில் கிட்டத்தட்ட அனைத்து எறும்பு இனங்களுக்கும் இடையே ஒரே மாதிரியான வாழ்வியல் அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எறும்புகளைப் பொறுத்தவரை, உணவு தேடுவதில் பல படிகளாக அவற்றின் பணிகள் நடக்கின்றன. அதில் முதல் படி, ஆராய்வது. எந்த நேரத்திலும் சிறிய எண்ணிக்கையிலான வேலைக்கார எறும்புகள் சுவர்கள், விரிசல்கள், ஜன்னல் சட்டகங்கள், குழாய் இடைவெளிகள், தரைப்பரப்பின் ஓரங்கள் வழியாக நகர்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றின் பணி, தானிருக்கும் பகுதியில் சுற்றியும் உள்ள அனைத்தையும் ஆராய்வதுதான்.
இந்தப் பணியில் அவற்றின் முக்கியக் கருவியாக இருப்பது உடலிலுள்ள உணர்கொம்பு. பொதுவாக, எறும்புகள் தனித்துவமான ஒரு வேதியியல் பிரபஞ்சத்தில் வாழ்கின்றன என்று சிற்றுயிர் ஆய்வுலகில் விவரிக்கப்படுகிறது.
ஷான் கே. மெக்கென்சி தலைமையிலான ஆய்வுக்குழு 2018 நவம்பரில் ஜெனோம் ரிசர்ச் என்ற ஆய்விதழில் வெளியிட்ட மரபணு ஆய்வின் முடிவுகள், "எறும்புகளின் மரபணுத் தொகுதிகளில் வாசனை ஏற்பி மரபணுக்களின் மிகப்பெரிய விரிவாக்கங்கள் காணப்படுவதாக" குறிப்பிடுகிறது.
பி.எல்.ஓ.எஸ் ஜெனிடிக்ஸ் என்ற ஆய்விதழில் 2012ஆம் ஆண்டு வான்டர்பில்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை, "பல்வேறு பிற பூச்சியினங்களைவிட எறும்புகள் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமான வாசனை ஏற்பிகளைக் கொண்டுள்ளதாக" கூறுகிறது.
அதாவது, எளிய நடையில் கூறுவதானால், ஒரு எறும்புக்கு சமையலறை என்பது வெறுமையான இடமல்ல, அதன் கண்களைப் பொறுத்தவரை, அங்கு நமது கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற வேதிம தடங்கள் நிரம்பியுள்ளது.
எறும்புகளின் பல சமையலறை கண்டுபிடிப்புகள், பிசுபிசுப்பான பாகு, வெல்லத் துகள்கள், பால் மிட்டாய்கள், தேநீர் சிதறல்கள், கரண்டியில் உள்ள நெய்த் தடயங்கள், பாத்திரம் கழுவும் சிங்க் உள்ள பகுதியைச் சுற்றியுள்ள ஈரப்பதம் போன்றவற்றை எதிர்கொள்ளும்போது தொடங்குகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில், நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் என்ற ஆய்விதழில், முனைவர் வஸீம் ஜலீல் தலைமையில் நெருப்பு எறும்புகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியானது.
எறும்புகளின் சர்க்கரை உண்ணும் நடத்தைக்கும், அவற்றின் உணர்கொம்புகள் மற்றும் முன்னங்கால் பாதங்களில் இருக்கும் சுவை உணரும் உறுப்புகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. மேலும், இந்த சுவையுணர் உறுப்புகள், எறும்புகளுக்கு தொடுதலின் மூலம் சர்க்கரையை மதிப்பிட உதவுவதாக இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை விவரிக்கிறது.
இதனால்தான், ஏதோவொரு மூலையில் கண்ணுக்குத் தெரியாமல் கிடக்கும் நுண்ணிய இனிப்பு எச்சங்கள், தேநீர் அல்லது இனிப்பான பானங்களின் கறைகள்கூட எறும்புகளின் உணவுத் தேடலில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த சுவையுணர் உறுப்புகளையே நிபுணர்கள் இயற்கையான தேடுபொறிகள் என விவரிக்கின்றனர். அதற்குக் காரணம், நாம் மேலே பார்த்தது போல, ஆங்காங்கே மிகச் சிறிய எண்ணிக்கையில் உணவு தேடிக் கொண்டிருக்கும் எறும்புகள், இப்படியான மிச்சங்களைத் தங்களது தேடுபொறிகளைப் பயன்படுத்திக் கண்டுபிடித்தவுடன் வெறுமனே அதைச் சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவதில்லை.
கூகுள் மேப் போலச் செயல்படும் வேதிமப் பாதைகள்
அமெரிக்க வேளாண்மைத் துறையின் வேளாண் ஆராய்ச்சி சேவை தொகுத்துள்ள தகவல்களின்படி, "எறும்புகளின் ஃபெரோமோன்களால் உணவுக்கான பாதைகளைக் குறிக்க முடியும்."
அதாவது, உணவைக் கண்டறியும் எறும்பு, தனது கூட்டை நோக்கித் திரும்பிச் செல்லும்போது வழிநெடுக வேதிமத் தடங்களை விட்டுச் செல்லும்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஃபிசியாலஜிகல் என்டமாலஜி என்ற ஆய்விதழில், ஈ. டேவிட் மோர்கன் எழுதிய ஆய்வுரை இதே செயல்முறையை விரிவாக விளக்குகிறது. அதன்படி, "உணவு தேடும் ஒரு எறும்பு, உணவைக் கண்டறிந்தவுடன், தனது கூட்டை நோக்கித் திரும்பிச் செல்லும்போது வழிநெடுக ஃபெரோமோன் என்ற வேதிமத்தின் தடயங்களை விட்டுச் செல்கிறது. பிறகு, தான் பயணித்த அதே பாதையில் விட்டுவந்த ஃபெரோமோன் தடயங்களை கூகுள் மேப் போன்ற வழிகாட்டியாகப் பயன்படுத்தி, தனது காலனியில் இருக்கும் எறும்புகளுக்குத் தகவல் தெரிவித்து உணவு இருக்குமிடம் நோக்கி அழைத்துச் செல்கிறது."
இப்படியாக, சில நிமிடங்களுக்குள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த ஒற்றை எறும்பு அல்லது மிகச் சிறிய அளவிலான எறும்புக் கூட்டம் கண்டுபிடிக்கும் உணவு இருப்பு, அவை உருவாக்கும் வேதிமப் பாதையின் வழியாக மற்ற எறும்புகளையும் அழைத்து வந்து, உணவைத் தனதாக்கிக் கொள்ள வித்திடுகிறது.
இதில் எறும்புகளின் உடலமைப்பில் இருக்கும் ஆன்டனா எனப்படும் உணர்கொம்புகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த உணர்கொம்புகளை இழக்கும் எறும்புகள் பிழைத்திருப்பதே அரிது என்கிறார், கோவாவில் இருக்கும் ஆரண்யா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர். ப்ரொனோய் பைத்யா.
"எறும்புகளின் தொடர்பு மொழி வேதிம அடிப்படையிலானது. அவை தம் உடலில் இருந்து ஃபெரோமோன்ஸ் எனப்படும் ஒரு வகை வேதிமத்தை வெளியிடுகின்றன. அந்த வேதிமத்தை உணர்வதன் மூலமே எறும்புகள், தங்கள் சுற்றுப்புற நிலைமைகளை அறிவது, உணவு தேடலில் ஈடுபடுவது, ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக் கொள்வது, தமது காலனியை சேர்ந்த சகாக்களை அடையாளம் காண்பது என அனைத்தையும் செய்கின்றன," என்று அவர் விளக்கினார்.
உதாரணமாக, உணவு தேடிச் செல்லும்போது ஓர் எறும்பு, தன்னால் தன்னந்தனியாக எடுத்து வர முடியாத அளவுக்குப் பெரியதோர் உணவுக் குவியலைக் கண்டுபிடிக்கிறது. பின்னர், அந்த இடத்தைத் தனது ஃபெரோமோன்களால் குறியிட்டுக் கொண்டே, அதாவது, அங்கிருந்து தனது புற்றுவரை ஃபெரொமோன்களை கசியவிட்டுக் கொண்டே வருகிறது.
பிறகு, புற்றில் இருக்கும் மற்ற எறும்புகளுக்குத் தகவல் கொடுத்து, தனது வேதிமப் பாதையை ஒரு ஜி.பி.எஸ் போலப் பயன்படுத்தி அவற்றை அந்த உணவுக் குவியலை நோக்கி அழைத்துச் செல்கிறது.
கடந்த 1993ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் இன்செக்ட் பிஹேவியர் என்ற ஆய்விதழில் பூச்சியியலாளர் ரால்ஃப் பெக்கர்ஸ் மற்றும் குழுவினர் வெளியிட்ட ஆய்வின் முடிவில், "எறும்புகள் உருவாக்கும் இந்த வேதிமத் தடங்கள் சுமார் 47 நிமிடங்கள் வரை நீடித்திருப்பதாக" மதிப்பிடப்பட்டது. "இந்தக் கால அளவு காலனியில் உள்ள மற்ற வேலைக்கார எறும்புகளை அழைத்து வந்து, உணவுக் குவியலைத் தம்வசமாக்கிக் கொள்வதற்கான நேரத்தை அவற்றுக்குக் கொடுப்பதாகவும்" அந்த ஆய்வு கூறுகிறது.
எறும்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்கும், தங்களது சுற்றத்தை, அதிலுள்ள ஆபத்துகளை உணரவும் அவற்றுக்கு உணர்கொம்புகள் மிகவும் அவசியம். அந்த உணர்கொம்புகளை வைத்தே எறும்புகள் வேதிமங்களையும் அவற்றின் மூலம் பகிரப்படும் செய்திகளையும் உணர்கின்றன.
முனைவர் ப்ரொனோயின் கூற்றுப்படி, உணர்கொம்புகளை இழந்துவிட்டால், எறும்புகள் திசை மற்றும் பாதைகளை அறிவது, தங்களது சகாக்களுடன் தொடர்புகொள்வது, ஆபத்துகளை உணர்வது என அனைத்துத் திறன்களையுமே இழந்துவிடும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு