போலி ஆடம்பரப் பொருட்களின் உலக மையமான வியட்நாம் - தற்போது அதிரடி நடவடிக்கை ஏன்?

    • எழுதியவர், கேவின் பட்லர்
    • பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூர்
    • எழுதியவர், துவாங் லே மற்றும் டக் ஹா
    • பதவி, பிபிசி உலக சேவை , பாங்காக்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹோ சி மின் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த இரண்டு சாதாரணக் கிடங்குகளில் வியட்நாம் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது, நைக், அடிடாஸ், கிராக்ஸ் மற்றும் குஸ்ஸி ஆகிய நிறுவனங்களின் லோகோக்கள் பொறிக்கப்பட்ட 23,000-க்கும் மேற்பட்ட காலணிகளைக் கண்டறிந்தனர்.

ஆனால், அந்தப் பொருட்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த காலணிகள் அனைத்தும் போலியானவை.

சுமார் 2 பில்லியன் வியட்நாம் டாங் (சுமார் 76,053 டாலர்) மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்ட இந்த சோதனை, பல தசாப்தங்களாக இயங்கி வந்த கள்ளச் சந்தை தொழிலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

அந்த இடத்திலிருந்து வெறும் 30 கிலோமீட்டர் தொலைவில், ஹோ சி மின் நகரின் சுற்றுலாப் பகுதியிலுள்ள ஒரு சந்தையில், வெளிநாடுகளில் 900 அமெரிக்க டாலர் வரை விற்கப்படும் அதே மாதிரியான போலி செருப்புகள் வெறும் 30 டாலருக்கு விற்கப்படுகின்றன.

அவற்றுடன், "சேனல்" கைப்பைகள், "பிராடா" டி-ஷர்ட்டுகள் மற்றும் "ரோலக்ஸ்" கடிகாரங்கள் எனப் பலவிதமான போலிப் பொருட்களும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆடம்பரப் பொருட்களின் போலி தயாரிப்புகளுக்கான உலகளாவிய மையமாக அறியப்படும் வியட்நாம், உலகின் மிகப்பெரிய போலி டிசைனர் சந்தைகளில் சிலவற்றைக் கொண்டுள்ளது.

தற்போது, சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அவப்பெயரிலிருந்து நாட்டை விடுவிக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மே 7ஆம் தேதி, அறிவுசார் சொத்துரிமை மீறல்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. இதில் போலிப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் பைரசி, வர்த்தக முத்திரை மீறல்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இது ஒன்றும் புதியதல்ல. நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவியுள்ள இந்த நிழல் பொருளாதாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாகக் காட்ட, வியட்நாமிய அதிகாரிகள் அவ்வப்போது போலிப் பொருட்கள் விற்பனையாளர்களைப் பொதுவெளியில் கைது செய்வது வழக்கம். ஆனால், சமீபத்திய வாரங்களில் இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டு

"இப்போது சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மிகவும் கடுமையாகிவிட்டன," என்று ஹோ சி மின் நகரின் சைகான் சதுக்கத்தில் உள்ள பிரபல தெருச் சந்தையில் ஆடைகள் விற்பனை செய்யும் ஒரு வியாபாரி கூறுகிறார். தனது உண்மையான பெயரை வெளியிட விரும்பாததால், அவர் "தான் ட்ருக்" என்ற புனைபெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவர் தற்போது, வழக்கமாக 500 அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் லோவ் பிராண்டின் டி-ஷர்ட்டின் போலி வடிவத்தை வெறும் 17 டாலருக்கு விற்றுள்ளார்.

"அவ்வப்போது அதிகாரிகள் போலிப் பொருட்களுக்கு எதிரான சோதனைகளை நடத்துவார்கள், ஆனால் அவர்கள் பொதுவாக சொகுசு கைப்பைகள் அல்லது சூட்கேஸ்கள் போன்ற அதிக மதிப்புள்ள பொருட்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்," என்று அவர் விளக்குகிறார். "சந்தை ஆய்வாளர்கள் கேமரா குழுக்களுடன் வந்து சில கடைகளில் உள்ள பொருட்களைப் பறிமுதல் செய்வார்கள், பின்னர் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்".

ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை.

அமெரிக்காவின் நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்தி வரும் வர்த்தகப் போர் போன்ற சர்வதேச சக்திகளால் இந்த நடவடிக்கை தூண்டப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அறிக்கை ஒன்று, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பான நீண்டகால பிரச்னைகளைத் தீர்ப்பதில் தொடர்ந்து தோல்வியடைந்ததாகக் கூறி, வியட்நாமை "முன்னுரிமை வெளிநாட்டு நாடு" என்று வகைப்படுத்தியது.

கடந்த 13 ஆண்டுகளில் ஒரு நாடு இத்தகைய தகுதியைப் பெறுவது இதுவே முதல்முறை.

மேலும், அறிவுசார் சொத்துரிமை மீறல்களில் உலகிலேயே மிக மோசமான நாடு என்றும் அந்த அறிக்கை வியட்நாமை விமர்சித்தது.

புதிய வரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட வியட்நாமிய அதிகாரிகள், மே மாதத்தில் அறிவுசார் சொத்துரிமை மீறல்களுக்கு எதிரான சோதனைகளை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது குறைந்தது 20% அதிகரிக்க உறுதியளித்தனர்.

தான் ட்ரூக் பணிபுரியும் சைக்கோன் ஸ்கொயர் மற்றும் அருகிலுள்ள பென் தான் சந்தை ஆகியவை இந்த நடவடிக்கையின் முக்கிய களமாக இருந்தன. இவை போலிப் பொருட்களுக்கான வியட்நாமின் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக அறியப்படும் பரந்த சந்தைகளாகும்.

மே மாதத்தின் நடுப்பகுதியில், தொடர் அதிரடி சோதனைகளுக்குப் பிறகு, அதிகாரிகள் சந்தைகளில் இருந்து போலிப் பொருட்களைப் பறிமுதல் செய்து, மொத்தம் 19,000 டாலருக்கும் அதிகமான அபராதங்களை விதித்தனர்.

விற்பனையாளர்கள் அசரவில்லை

இருப்பினும், காவல்துறையின் இத்தகைய சோதனைகளுக்கு நீண்டகாலமாகப் பழகிப்போன உள்ளூர் விற்பனையாளர்கள் அசரவில்லை.

"பொதுவாக, ஆய்வாளர்கள் வருவதற்கு முன்பே, இங்கே யாரோ ஒருவர் விசில் ஊதி அனைவரையும் எச்சரிப்பார்கள்," என்று தான் ட்ரூக் விளக்குகிறார். சமீபத்திய அதிரடி சோதனைகளுக்குப் பிறகும், "வியாபாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

"சில கடைகளில் லோகோ பொறிக்கப்பட்ட பொருட்கள் குறைவாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை கடைகளின் பின்புறத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன".

வியட்நாமில் விற்கப்படும் பெரும்பாலான போலிப் பொருட்களின் விநியோகச் சங்கிலி, அதன் வடக்கு எல்லைக்கு அப்பால் உள்ள சீனாவிலிருந்து தொடங்குகிறது. இந்தப் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன.

வியட்நாமிய மொத்த வியாபாரிகள், உள்ளூர் சந்தையில் எளிதாக விற்கக்கூடிய பொருட்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை பெரிய அளவில் வாங்கி இறக்குமதி செய்கின்றனர். பின்னர் அவற்றை சிறிய வியாபாரிகளுக்கு விநியோகிக்கின்றனர்.

சீனாவுக்கு அருகில் இருப்பது, வியட்நாமின் போலிப் பொருட்கள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும், பல புகழ்பெற்ற ஐரோப்பிய பிராண்டுகள்கூட தங்களது உற்பத்திக்காக ஆசிய நாடுகளைச் சார்ந்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

உதாரணமாக, தோல் பொருட்கள் சீனாவில் வெட்டப்பட்டிருக்கலாம்; தையல் பணிகள் வியட்நாமில் செய்யப்பட்டிருக்கலாம். இவ்வாறு, சட்டபூர்வமான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் திறன்களும், ஒரு கட்டத்தில் கருப்புச் சந்தை உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதை முழுமையாகத் தடுப்பது கடினமாக இருந்தாலும், சமீபத்திய அதிரடி நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளதாக வியட்நாம் அரசாங்கம் அறிவித்துள்ளது. மே மாதத்தின் கடைசி மூன்று வாரங்களில், அதிகாரிகள் 1,400-க்கும் மேற்பட்ட அறிவுசார் சொத்துரிமை மீறல் வழக்குகளைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவோ தனது அழுத்தத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மே மாத இறுதியில், அறிவுசார் சொத்துரிமை (IP) மீறல்களைத் தடுக்க வியட்நாம் போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதா, அது அமெரிக்க வர்த்தக நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யும் விசாரணையை அமெரிக்கா தொடங்கியது.

இதையடுத்து, வியட்நாம் அதிகாரிகளும் தங்களது நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தினர்.

ஜூன் 10-ஆம் தேதி, தான் ஹோவா மாகாணத்தில் 10,000-க்கும் மேற்பட்ட போலி நகைகளைத் தயாரித்து விற்ற கும்பலை போலீசார் கண்டறிந்து கலைத்தனர். இந்த போலிகள் பல்காரி, கார்டியர், லூயிஸ் வுட்டன் மற்றும் டிஃப்பனி அண்ட் கோ போன்ற பிராண்டுகளைப் போல இருந்தன, மேலும் இது போலி வணிகக் கும்பலுக்கு சுமார் 1.14 மில்லியன் டாலர் சட்டவிரோத லாபத்தைப் பெற்றுத் தந்தது.

ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோயில் உள்ள பல சந்தைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கிடங்குகள், ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் காலணி கடைகளிலும் காவல்துறையினர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும், இந்த நடவடிக்கையால் உள்ளூர் மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இது சில வியாபாரிகளைத் தொழிலை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துவது போலத் தோன்றினாலும், மற்றவர்கள் இதைப் பெரிய நன்மையாகக் கருதி நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஹோ சி மின் நகரம் மற்றும் டா லாட் நகரங்களில் தனது சொந்த ஆடைகளை வடிவமைத்து தயாரித்து விற்பனை செய்து வரும் தி நுயென், இந்த நடவடிக்கையை வரவேற்கிறார்.

அவரது பார்வையில், போலிப் பொருட்கள் தொழில் என்பது வடிவமைப்பாளர்களின் அறிவுசார் சொத்துரிமையை மீறுவதோடு மட்டுமல்லாமல், "வியட்நாமின் சில்லறை விற்பனை சந்தையை குழப்பமானதாக மாற்றி, கேலிக்குரிய ஒன்றாகவும் ஆக்குகிறது" என்கிறார்.

"அசல் பொருள் போலத் தோன்றும் போலி வடிவமைப்பாளர் ஆடைக்காக வாடிக்கையாளர்கள் 75 டாலர் செலவிடத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தரமான துணி மற்றும் சிறந்த தையலுடன் தயாரிக்கப்படும் தனிப்பயன் ஆடைக்கு அதில் பாதி விலை கேட்டால்கூட குறை கூறுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

"வியட்நாமில் திறமையான தையல்காரர்கள் மற்றும் கை எம்பிராய்டரி கலைஞர்களுக்குக் குறைவில்லை. ஆனால் அவர்களில் பலர் கவனிக்கப்படுவதில்லை; தகுந்த வருமானமும் கிடைப்பதில்லை. இதனால் பலர் இறுதியில் போலிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்," என்றும் அவர் கூறுகிறார்.

இப்போது, போலிப் பொருட்கள் விற்பனையாளர்கள் தொழிலை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், தனது வணிகத்தில் மேலும் முதலீடு செய்யவும், விலைகளை உயர்த்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்

"வெளிப்படையான மற்றும் நியாயமான வணிகச் சூழலில் செயல்படுவதில் நான் அதிக நம்பிக்கையுடன் உணர்கிறேன்," என்று அவர் கூறுகிறார். "இது வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களைப் பற்றியது அல்ல. இது நியாயத்தை மீட்டெடுப்பது மற்றும் சரி, தவறு, உண்மையானது, போலியானது ஆகியவற்றை அவற்றின் சரியான இடத்தில் வைப்பது பற்றியது".

மற்றவர்கள் இதில் மகிழ்ச்சியடையவில்லை. டா நாங் நகரில் அலுவலகப் பணியாளராக இருக்கும் ஹுய், போலி ஆடைகள் மற்றும் காலணிகளை அடிக்கடி வாங்குபவர்களில் ஒருவர். குறிப்பாக, கால்பந்து அணிகளின் ஜெர்சிகள் மற்றும் காலணிகளை வாங்குவதை அவர் விரும்புகிறார்.

"விற்பனையாளர்களைக் கைது செய்வது இந்தப் பிரச்னையைத் தீர்க்காது," என்று அவர் கூறுகிறார். "போலிப் பொருட்களை முழுமையாக ஒழிக்க முடியாவிட்டால், என்னால் இன்னும் அவற்றை எளிதாக வாங்க முடியும் என்றால், நான் எனது பழைய பழக்கத்தைத் தொடருவேன்."

போலிப் பொருட்கள் "மலிவானவை, வசதியானவை மற்றும் வாங்குவதற்கு எளிதானவை" என்பதால் அவற்றை விரும்புவதாக ஹுய் பிபிசியிடம் கூறுகிறார்.

அவரைப் போன்ற வாடிக்கையாளர்கள் வியட்நாமில் ஒரு பெரிய சந்தையை உருவாக்குகின்றனர். அங்கு 60% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் மற்றும் சராசரி வருமானம் மாதம் வெறும் 225 டாலர் மட்டுமே. இந்த நிலையில், மலிவு விலை போலிப் பொருட்களுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, பல உள்ளூர் வாடிக்கையாளர்களைச் சந்தையிலிருந்து வெளியேற்றிவிடும் என்று அஞ்சப்படுகிறது.

வியட்நாமில் வளர்ந்து, நெறிமுறை சார்ந்த நுகர்வு குறித்து ஆய்வு செய்யும் ஸ்கேமா பிசினஸ் ஸ்கூலின் இணைப் பேராசிரியர் தி தாங் ஹுவாங் டிரான், ''நாட்டின் போலிச் சந்தையின் வலிமை பொருளாதார யதார்த்தங்களால் ஆதரிக்கப்படுகிறது. வியட்நாமிய மக்களுக்கு அது போலி என்று தெரிந்தாலும் கூட... உண்மையான பொருளை வாங்குவதற்குப் பணம் இல்லாத சூழலில், அவர்களுக்கு அதுவே மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கிறது," என்று கூறுகிறார்.

"மேலும், இது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது, அதனால் 'இதை வாங்குவதில் என்ன தவறு?' என்று அவர்கள் நினைக்கிறார்கள்."

ஆடம்பர பொருட்களை வாங்குபவர்களுக்கும் போலிப் பொருட்களை வாங்குபவர்களுக்கும் இடையே "எந்தவிதத் தொடர்பும் இல்லை" என்பதால், சர்வதேச ஆடம்பர பிராண்டுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு மிகக்குறைவுதான் என்று ஹுவாங் டிரான் கூறுகிறார்.

"போலிப் பொருட்கள் இல்லாவிட்டாலும், குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்கள் எப்படியும் உண்மையான பிராண்ட் தயாரிப்புகளை வாங்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களால் அதை வாங்க முடியாது," என்று அவர் கூறுகிறார்.

"மேலும், வெறும் ஒரு பையை வாங்குவதற்கு ஏன் அவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை."

நிச்சயமாக, உள்ளூர்வாசிகள் மட்டுமே வாடிக்கையாளர்கள் அல்ல.

"என்னுடைய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள்," என்று தான் ட்ருக் கூறுகிறார். மேலும், போலிப் பொருட்கள் அதிகமாக விற்கப்படும் பல முக்கிய மையங்கள் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதிகளிலேயே உள்ளன.

இருப்பினும், வியட்நாமின் போலிப் பொருட்கள் சந்தையை ஒழிப்பதற்கு அதிகாரிகளுக்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக ஹுவாங் டிரான் மற்றும் பிறர் கருதுகின்றனர்.

உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் ஏற்கனவே அறிவுசார் சொத்துரிமை சட்டங்களைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர். உதாரணமாக, நைக் என்பதை மைக் என்று மாற்றுவது போன்ற பிராண்ட் பெயர்களை மாற்றுவது இதில் அடங்கும்.

சட்டரீதியான பொறுப்பிலிருந்து தப்பிக்க வடிவமைப்பை ஓரளவுக்கு மாற்றுவது, அதே சமயம் நுகர்வோரைக் கவரும் வகையில் அசல் பொருளின் அழகு, தரம் மற்றும் பிராண்டின் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்வது என அவர்கள் செயல்படுகிறார்கள்.

இத்தகைய புதுமையான மாற்றங்கள், விற்பனையாளர்களை அதிகாரிகளிடமிருந்து நீண்டகாலமாகப் பாதுகாத்து வந்துள்ளன. அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் சிரமங்கள் ஏற்பட்டாலும், இந்தத் தொழிலை நம்பி வாழ்பவர்கள் அது தொடர்ந்து நீடிக்க புதிய வழிகளைக் கண்டறிவார்கள்.

"இதை நீங்கள் ஒழிக்க முடியாது," என்று ஹுவாங் டிரான் கூறுகிறார்.

"அரசாங்கம் என்னதான் விதிமுறைகளைக் கொண்டு வந்தாலும் அல்லது என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும், அவர்கள் அதைச் சுற்றி வந்து தொழிலைத் தொடர ஒரு வழியைக் கண்டறிந்து விடுவார்கள். ஏனெனில் வாடிக்கையாளர்களின் தேவை எப்போதும் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவை இருக்கும் வரை, நிச்சயமாக விற்பனையாளர்களும் இருப்பார்கள்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு