தமிழ்நாட்டில் இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு? எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை?

பட மூலாதாரம், IMD
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் பக்கத்தில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 4) ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர் மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுவிழந்த திட்வா புயலில் எஞ்சியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிவிட்டதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
''அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலு குறையக்கூடும்'' எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை கூறியிருந்தது.
வானிலை முன்னெச்சரிக்கை
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கையையும் நேற்று வெளியிட்டது. அதன்படி,
டிசம்பர் 05: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 06 முதல் டிசம்பர் 09 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?
தமிழக கடலோரப் பகுதிகள்:
டிசம்பர் 04 முதல் டிசம்பர் 07 வரை : எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
டிசம்பர் 04 முதல் டிசம்பர் 07 வரை : எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்:
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு















