'வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்' - நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்ட பிறகு டிரம்ப் அறிவிப்பு

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், அமெரிக்காவின் டெல்டா ஃபோர்ஸ் படைகளால் அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறை பிடிக்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுகிறார்.

டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் நிக்கோலஸ் மதுரோ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க போர்க்கப்பலான USS Iwo Jima-வில் மதுரோ இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் கூறியது என்ன?

இந்நிலையில், புளோரிடாவில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், "வெனிசுவேலாவில் பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான அதிகார மாற்றத்தை நாம் செய்யக்கூடிய ஒரு காலம் வரும் வரை அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும்" என்று கூறினார்.

"அமெரிக்க ராணுவத்தினரின் அசர வைக்கும் வேகம், சக்தி, துல்லியம் மற்றும் திறமைக்கு நன்றி" என டிரம்ப் கூறினார்.

"இந்த சிறப்பான பயிற்சி பெற்ற வீரர்கள்" அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செயல்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

வெனிசுவேலா படைகள் "எங்களுக்காகக் காத்திருந்தன", "பல கப்பல்கள் வெளியே வந்தன" என்று அவர் தெரிவித்தார்.

வெனிசுவேலா படைகள் "தயார் நிலையில்" இருந்தபோதிலும், அவர்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டு, அவை "மிக விரைவாக செயலிழக்கச் செய்யப்பட்டன" என்றும் டிரம்ப் கூறுகிறார்.

ஒரு அமெரிக்க வீரர் கூட கொல்லப்படவில்லை, எந்த உபகரணங்களும் இழக்கப்படவில்லை என்ற அவர், "கடல் வழியாக வரும் போதைப்பொருட்களில் 97%-ஐ அமெரிக்கா முறியடித்துவிட்டது" என்று கூறினார்.

மேலும் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு படகும் சராசரியாக 25,000 மக்களைக் கொல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பெரும்பாலான போதைப்பொருட்கள் வெனிசுவேலாவிலிருந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிபிசி சுயாதீனமாக இந்த புள்ளிவிவரங்களை சரிபார்க்கவில்லை.

வெனிசுவேலாவின் எண்ணெய் வணிகம் குறித்து டிரம்ப் கூறியது என்ன?

இந்த செய்தியாளர் சந்திப்பில், வெனிசுவேலாவின் எண்ணெய் வணிகம் குறித்தும் பேசினார்.

வெனிசுவேலாவில் எண்ணெய் வணிகம் 'தோல்வி' அடைந்துள்ளதாகவும், பெரிய அமெரிக்க நிறுவனங்கள் அந்த உள்கட்டமைப்பை சரிசெய்து 'நாட்டிற்காக வருமானத்தை அளிக்கும் செயல்முறையைத் தொடங்க' உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் "இரண்டாவது தாக்குதலை" நடத்த அமெரிக்கா தயாராக இருந்ததாகவும், அது அவசியமாக இருக்கும் என்று முன்னர் கருதியதாகவும் டிரம்ப் கூறினார். ஆனால் முதல் தாக்குதல் வெற்றி பெற்றதால், இப்போது அது நடக்காது என்றும் டிரம்ப் கூறினார்.

இரான் மீதான தாக்குதலுடன் ஒப்பிட்டுப் பேசிய டிரம்ப்

மதுரோவை 'நீதியின் முன் நிறுத்த' அமெரிக்கப் படை, வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸின் மையப்பகுதியில் உள்ள 'மிகப்பெரிய அளவில் பாதுகாக்கப்பட்ட ராணுவக் கோட்டையை' நோக்கிச் சென்றதாக டிரம்ப் கூறினார்.

அணு ஆயுத இலக்குகள் உட்பட இரானுக்கு எதிரான முந்தைய ராணுவ நடவடிக்கைகளுடன் அவர் இதை ஒப்பிட்டுப் பேசினார்.

"உலகில் எந்த நாடும் அமெரிக்கா அடைந்ததை அடைய முடியாது" என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் தாக்குதலில் வெனிசுவேலாவின் அனைத்து ராணுவத் திறன்களும் "பலவீனமாக்கப்பட்டன" என்று அவர் கூறினார்.

அமெரிக்காவிடம் உள்ள "ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் காரணமாக" நடவடிக்கையின் போது கராகஸின் விளக்குகள் அணைக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

மதுரோவும் அவரது மனைவியும் "இப்போது அமெரிக்க நீதியை எதிர்கொள்கிறார்கள்" என்று கூறிய டிரம்ப், "அமெரிக்காவிற்கும் அதன் குடிமக்களுக்கும் எதிரான "கொடிய போதைப்பொருள் பயங்கரவாத பிரசாரத்திற்காக" அவர்கள் மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதுவரை தெரிய வந்தது என்ன?

வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளன.

வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா ஒரு "பெரிய அளவிலான தாக்குதலை" நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறை பிடிக்கப்பட்டு, "நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றும் அவரது சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரோவை சிறை பிடிக்கும் இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படை மேற்கொண்டதாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர்.

வெனிசுவேலா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளதுடன், "இராணுவ ஆக்கிரமிப்பை" நிராகரித்து கண்டிப்பதாகவும் கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு