கோவை சூலூர் விவசாயிகள் போராட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த வாக்குறுதி என்ன?

செந்தில் பாலாஜி
பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி ஊராட்சியில் பாதுகாப்பு தொழிற்கூடம் அமைக்க டிட்கோ நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சூலூர் விவசாயிகளை தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பாதுகாப்பு தொழிற்கூடத்துக்காக விவசாயிகள் நிலங்கள் எடுக்கப்படாது என்று வெள்ளிக்கிழமை வாக்குறுதி அளித்தார். (அவர் அளித்த வாக்குறுதியின் முழு விவரம் இந்த செய்தியில் கீழே தரப்பட்டுள்ளது).

 

அன்னூரில் டிட்டோ தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் சூலூர் விவசாயிகள் போராட்டமும் விவாதப் பொருளாகியுள்ளது.

 

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி நாளிதழ்களில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. கோவை மாவட்டம், சூலூர் வட்டம் வாரப்பட்டி கிராமத்தில் டிட்கோ மூலம் பாதுகாப்பு தொழிற்கூடம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்போவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 127  பட்டா நிலங்களை எடுக்க இருப்பதாகவும், ஆட்சேபனை ஏதும் இருந்தால் நிலத்தின் உரிமையாளர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

 

இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே வாரப்பட்டி கிராம விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வாரப்பட்டி கிராமத்தில் கூடாரம் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதை அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தொடங்கி வைத்து ஆதரவு தெரிவித்துவிட்டு சென்றார்.

கோவை சூலூர் விவசாயிகள் போராட்டம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"நாளிதழ்களைப் பார்த்து தான் தெரிந்து கொண்டோம்"

 

"வாரப்பட்டியில் பாதுகாப்பு தொழிற்கூடம் வருகிறது என்கிற தகவலை நாளிதழ்களில் வந்த அறிவிப்பு மூலமாகத்தான் தெரிந்து கொண்டோம்" என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜன்.

 

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு சிப்காட் தொழிற்பேட்டை வருவதாக செய்திகள் வெளிவந்தன. அப்போதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது டிட்கோ மூலம் பாதுகாப்பு தொழிற்கூடம் வருகிறது என இரண்டு நாளிதழ்களில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதைப் பார்த்துதான் இந்த தகவல் எங்களுக்கு தெரியவந்தது. அரசுத் தரப்பிலிருந்தோ, அதிகாரிகள் தரப்பிலிருந்தோ யாரும் முதலில் எங்களிடம் பேசவில்லை. அதன் பின்னர்தான் நிலம் கையப்படுத்துவதற்கான நோட்டீஸ் மீது பதில் அளிக்க வேண்டும் என தபால் வந்தது. 

 

430 ஏக்கரில் இந்த தொழிற்கூடம் வர இருப்பதாக சொல்கிறார்கள். இதில் பெரும்பான்மையான நிலம் (சுமார் 350 ஏக்கர்) ஒரு தனியார் காற்றாலை நிறுவனத்திடம் உள்ளது. மீதமுள்ளவை விவசாய நிலங்கள். நாங்கள் எங்கள் நிலத்தை தரப்போவதில்லை, எங்களுக்கு மாசுபடுத்தும் எந்த தொழிற்சாலையும் வேண்டாம்," என்றார். 

 

தென்னை

காத்திருப்பு போராட்டத்தில் பங்கு கொண்டிருந்த விவசாயி உஷா பிபிசி தமிழிடம் பேசுகையில், "தொழிற்கூடம் வர இருப்பதாக கூறப்படும் பகுதியைச் சுற்றி சுமார் 8 வருவாய் கிராமங்கள் இருக்கின்றன. இங்கு தென்னை, வாழை ஆகியவை முக்கியப் பயிர்கள். அவை போக காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மேலும் இந்த ஊர்களில் கோழி வளர்ப்பும் அதிகம். அதிக அளவிலான கோழிப் பண்ணைகள் இங்கு உள்ளன. ஓர் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் கோழிகள் இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் செல்கின்றன. இங்கு மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வந்தால் விவசாயமும் செய்ய முடியாது. கோழி வளர்ப்பும் கடுமையாக பாதிக்கும்.

 

இங்கு வேலைவாய்ப்பின்மை எதுவுமில்லை. அதனால் தொழிற்சாலைகளுக்கான தேவையில்லை. வேலைவாய்ப்பு தேவைப்படும் தென் மாவட்டங்களில் இந்த தொழிற்கூடத்தை அமைக்கலாமே. எங்களுக்கு மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளோம்" என்றார்.

கோவை சூலூர் விவசாயிகள் போராட்டம்: “தென்னை, வாழை, கோழிப் பண்ணைகள் செழிக்கும் நிலத்தை தரமாட்டோம்”

பாதுகாப்பு தொழிற்கூடம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் பெரும்பகுதி, டைனமேட்டிக் டெக்னாலஜிஸ் என்கிற பெங்களூருவை சேர்ந்த நிறுவனத்திடம் உள்ளது. 

 

இந்த நிறுவனத்திடம் 368 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 48 காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு 2,500 கிலோ வாட் மின்சாரம் காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்குப் பிறகு அதிக அளவிலான காற்றாலைகள் இப்பகுதியில்தான் இயங்கி வருகின்றன. 

 

காற்றாலை

"1990களில் இங்கு விவசாயிகளிடமிருந்து குத்தகைக்கு எடுத்தும் வாங்கியும் காற்றாலைகள் நிறுவப்பட்டன. டி.பி.எல் என்கிற நிறுவனம் நடத்தி வந்த காற்றாலைகளை பின்னர் பெங்களூருவைச் சேர்ந்த டைனமேட்டிக் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. தற்போது பெரும்பாலான காற்றாலைகள் 20 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கியதால் காலாவதியாகிவிட்டன. ஒரு சில காற்றாலைகள் மட்டும்தான் செயல்பாட்டில் இருக்கின்றன" என்கிறார் நடராஜன். 

 

""நாங்கள் தொழிற்சாலைகளுக்கு எதிரானவர்கள் இல்லை. காற்றாலைகள் வந்தபோது விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்கினர். காற்றாலைகள் மாசுபடுத்தாது என்பதால் விவசாயத்திற்கு பாதிப்பில்லை. பசுமை மற்றும் வேளாண் சார்ந்து எந்த தொழிற்சாலை வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதைத்தான் நாங்கள் கோரி வருகிறோம். வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் தொழிற்சாலைகள் கொண்டு வாருங்கள் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றும் கூறினார் அவர்.

ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தை:

 

இந்த நிலையில் வாரப்பட்டியில் போராடி வரும் விவசாயிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இடையே டிசம்பர் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

 

பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாயிகள் வழக்கறிஞர்களுடன் வந்த நிலையில் முதலில் வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் பேச்சுவார்த்தை அரங்கை விட்டு வெளியேறிய விவசாயிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

போராடும் விவசாயி

விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஈசன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எந்த விதமான ஆவணங்களும் தகவல்களும் கொடுக்காமல், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் நிலத்தை கையகப்படுத்தப் போகிறோம் உங்களுடைய பதிலை தெரிவியுங்கள் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் எந்த மாதிரியான தொழிற்சாலைகள் வரப்போகின்றன என்ற விவரம், அதற்கான திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை போன்ற 22 தகவல்களைக் கேட்டுள்ளோம்.

 

அந்த ஆவணங்கள் கிடைத்த பிறகு ஒரு மாதம் கழித்துதான் பதிலளிக்க முடியும் என அவகாசம் கேட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் ஆவணங்கள் அளித்த பிறகுதான் பதிலளிக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான  பணிகளும் நடைபெற்று வருகின்றன" என்றார்.

இந்த எதிர்ப்புகள் தொடர்பாக, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நிலம் கையக்கப்படுத்தும் பணி எதுவும் தற்போது தொடங்கவில்லை. அதற்கு முந்தைய விசாரணைதான் தற்போது நடைபெற்று வருகிறது. சட்டப்படி பல கட்ட நடவடிக்கைகள் உள்ளன.

 ஒவ்வொரு நடவடிக்கையும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் சில கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். அவற்றுக்கான பதில்கள் அளிக்கப்படும்," என்றார்.

விவசாய நிலங்கள் - செந்தில் பாலாஜி வாக்குறுதி

இந்த நிலையில் டிசம்பர் 23ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

"திருப்பூர் கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் விவசாயிகள் மத்தியில் தங்கள் நிலம் பறிபோய் விடுமோ, காற்று மற்றும் நீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வந்து விடுமோ என அச்சம் எழுந்தது.

தனியார் கம்பெனி நிலங்கள் மட்டுமே தொழில் பூங்காவுக்காக எடுக்கப்படும்.

விவசாயிகளின் விருப்பத்தை மீறி எந்த திட்டமும் கொண்டு வரப்படாது என்கிற உத்திரவாதத்தை நான் அளிக்கிறேன்," என்றார் செந்தில் பாலாஜி. விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் கேட்கின்ற விலைக்கு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும். தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கும் விவசாயிகள் ஒத்துக் கொள்ளும் விலைக்கு மட்டுமே நிலம் எடுக்கப்படும் என்றும், அதுவரை எந்த கட்டாயமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

"அங்கு நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தும் எந்த தொழிற்சாலைக்கும் அனுமதி வழங்கப்படாது. ஆழியாறு குடிநீர் திட்டத்திற்கு விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்த போது அந்தத் திட்டத்தை ரத்து செய்து மாற்று திட்டத்தை அறிவித்தார் முதல்வர்.

விவசாயிகளின் நலனுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது. இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இதை விவசாயிகளிடம் விளக்கியபோது அவர்களும் வரவேற்றார்கள். போராடுகின்ற விவசாயிகள் இதை புரிந்து கொண்டு போராட்டங்களை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார் செந்தில் பாலாஜி.

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சூலூர் போராட்டக் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் சனிக்கிழமை (டிசம்பர் 24) ஊர் மக்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இதர விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: