You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நீரை விட்டு வெளியேறினால் உடல் தகிக்கிறது' - இரவு, பகலாக ஒரு நாளின் பெரும்பகுதியை நீருக்குள்ளேயே கழிக்கும் சிறுவன்
'நீரிலிருந்து வெளியே வந்தவுடன் உடல் முழுவதும் எரிச்சலால் துடித்துப் போகும் 16 வயது சிறுவனுக்கு சிகிச்சையளிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுவனுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் பெல்டங்கா பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற பதின்ம வயது சிறுவன் குளத்து நீரிலேயே வாழ்ந்து வருவதைக் காட்டும் காணொளிகள் சமீபத்தில் வைரலானது.
"நீரிலிருந்து வெளியே வந்த அடுத்த கணமே உடல் முழுவதும் எரிவது போல் உணர்கிறேன். ஏதோ ஓர் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி என்னை ஆட்கொண்டு, நீரிலேயே இருக்கும்படி கூறுவது போலத் தோன்றுகிறது," என்று அந்தச் சிறுவன் கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது.
பல மணிநேரம் நீரிலேயே கழிக்கும் அந்தச் சிறுவன், அங்கேயே உணவு உண்ணும் காட்சிகளும் இடம்பெற்ற ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் ஆனந்த் அம்பானியின் கவனத்துக்கு வந்ததையடுத்து, அவர் மருத்துவக் குழுவை அனுப்பி அந்தச் சிறுவனுக்கு ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் செய்ய வைத்தார். பின்னர், சிறப்பு சிகிச்சைக்காக விமானத்தில் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த சிறுவன், சர் ஹெச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி குறிப்பிட்டுள்ளது.
இரவும் பகலும் குளத்திலேயே கழித்த சிறுவன்
இக்பாலின் நிலையைப் பார்த்து தாங்கள் மிகவும் வேதனை அடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அவர் எப்போதும் ஏதாவது ஒரு குளத்தில் காலைப் பொழுதிலிருந்து நள்ளிரவு வரை மிதந்து கொண்டிருப்பார் என்றும், சில நேரங்களில் ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்துக்குச் செல்வார் என்றும் அவர்கள் கூறினர்.
"அந்தச் சிறுவனுக்கு உள்ளூர் மக்கள் உணவு அளிப்பார்கள். நீரிலேயே இருந்தபடி அவர் உணவு உண்பார். அவரது சகோதரர்களுடன் ஒப்பிடும் போது, அவருக்கு திடீரென உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. அவருக்கு ஏதோ உடல்நலப் பிரச்னை இருக்கலாம் என்று தோன்றியது," என்று சிறுவனை சிறு வயதிலிருந்தே அறிந்த ஒருவர் கூறியதாக என்டிடிவி செய்தி தெரிவித்துள்ளது.
நீண்ட நேரம் நீரிலேயே இருப்பதால், அந்தச் சிறுவன் அடிக்கடி சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிறுவன் ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவரது பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். நீண்டகால சிகிச்சைக்குத் தேவையான பொருளாதார வசதி தங்களிடம் இல்லையென்றும், உதவி வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'தொடர்ந்து நீரில் இருந்தாலும் பிரச்னைதான்'
இவ்வாறு நீண்ட காலம் நீரிலேயே இருப்பதும் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால் ஸ்கின் மேக்ரேசன்(Skin Maceration) எனப்படும் தோல் மென்மையுறும் நிலை ஏற்படலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். அதாவது, தோல் அதிகமாக நனைந்து மென்மையாகி, பலவீனமடைந்து சிதைவடைய ஆரம்பிக்கும். பின்னர் தோலில் வெடிப்புகள் ஏற்பட்டு, எரிச்சல் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாகும் அபாயம் உண்டு என அவர்கள் கூறினர்.
தோல் தொடர்ந்து ஈரமாக இருந்தால், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று மற்றொரு தோல் நோய் நிபுணர் என்டிடிவியிடம் தெரிவித்தார்.
சிறுவனுக்கு ஏதேனும் ஆழமான நம்பிக்கைகள் அல்லது அச்சங்கள் இருந்தால், உளவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு