கப்பலில் அடிமையாக இருந்த ஆப்பிரிக்க முஸ்லிம் அமெரிக்காவின் பெரும் ஆய்வாளரான வரலாறு

    • எழுதியவர், எலியட் ஸ்டெய்ன்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மொராக்கோ நாட்டு மனிதர் புளோரிடாவிலிருந்து பசிபிக் கடற்கரை வரை ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, அமெரிக்காவின் மேற்குப் பகுதியைப் பார்த்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்றார்.

1528-இல், மொராக்கோவைச் சேர்ந்த ஒரு மனிதர் (தற்போதைய) டெக்சாஸ் கடற்கரையில் உயிருக்குப் போராடிய நிலையில் ஒதுங்கினார்.

மரத்தின் தண்டுகள், குதிரைத் தோல் மற்றும் கிழிந்த துணிகளின் எஞ்சிய பகுதிகளைக் கொண்டு தற்காலிகமாகக் கட்டப்பட்ட ஒரு பலவீனமான உயிர் காக்கும் படகில், ஸ்பானிஷ் மாலுமிகள் குழுவுடன் சேர்ந்து மெக்சிகோ வளைகுடாவில் அதற்கு முந்தைய மாதம் முழுவதும் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

ஒரு புயல் காரணமாக மெக்சிகோ வளைகுடாவின் கால்வெஸ்டன் அருகிலுள்ள ஒரு தீவில் அவர்கள் ஒதுங்கியபோது, அவர்களை அறியாமலேயே அமெரிக்க மேற்குப் பகுதிக்குள் நுழைந்த பழைய உலகத்தைச் சேர்ந்த முதல் மனிதர்களாயினர்.

அப்போது அவர்கள் ஒவ்வொருவரும் பசியோடும், சோர்வோடும், ஆடையின்றியும் இருந்தனர்.

அடுத்தடுத்த வாரங்களில், கப்பல் விபத்தில் தப்பியவர்கள் ஒவ்வொருவராக உயிரிழக்கத் தொடங்கினர்.

பலர் பசியாலும், சிலர் இயற்கைச் சீற்றங்களினாலும், இன்னும் சிலர் பழங்குடிகளின் தாக்குதல்களினாலும் உயிரிழந்தனர்.

தற்போதைய புளோரிடா மற்றும் வளைகுடா கடற்கரையை ஸ்பானிய பேரரசுக்காகக் கைப்பற்றும் நோக்கில், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ஸ்பெயினிலிருந்து புறப்பட்ட இந்த துரதிர்ஷ்டவசமான பயணத்தில் சுமார் 600 ஆண்கள் இருந்தனர். அவர்களுள் மூன்று ஸ்பானிஷ் கேப்டன்கள் மற்றும் எப்படியோ உயிர் பிழைத்த மொராக்கோவைச் சேர்ந்த அந்த அடிமை என நால்வர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

அடுத்த எட்டு ஆண்டுகளில், அந்த மனிதர் அந்த மக்கள் தொகையின் உண்மையான தலைவராக உருவெடுத்தார். ஆய்வு வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பயணத்தை மேற்கொண்டார். இருப்பினும், அவருடைய உண்மையான பெயர் என்னவென்று கூட நமக்குத் தெரியவில்லை.

எஸ்டெபான் டி டோரான்டெஸ், எஸ்டெபான் தி மூர் அல்லது மிகவும் பொதுவாக எஸ்டெவானிகோ எனப் பலவாறாக அறியப்பட்ட இந்த மர்ம நபர், தற்போதைய அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த முதல் ஆவணப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள், அரபு மொழி பேசுபவர்கள் மற்றும் இஸ்லாமியர்களில் ஒருவராக இருந்தார்.

முதல் ஐரோப்பிய குடியேற்றம் ஏற்படுவதற்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பே இவர் அங்கு சென்றடைந்தார்.

1528 மற்றும் 1536-க்கு இடையில், அவர் புளோரிடாவிலிருந்து மேற்கே மெக்சிகோவின் பசிபிக் கடற்கரை வரை சுமார் 2,250 மைல்கள் (3,620 கிமீ) நடந்தே கடந்தார். இது வட அமெரிக்காவை முதன்முதலில் கடந்து சென்றதாகப் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுப் பயணமாகக் கருதப்படுகிறது,

மேலும் இது லூயிஸ் மற்றும் கிளார்க் ஒரேகான் கடற்கரைக்கு மேற்கொண்ட தரைவழிப் பயணத்திற்கு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.

அந்தப் பயணத்தின் போது, எஸ்டெவானிகோ பூர்வகுடி அமெரிக்கர்களால் சிறைபிடிக்கப்பட்டார். அவர்களின் மொழிகளைக் கற்றுக்கொண்டு, ஒரு குணப்படுத்துபவராகவும் மாறினார்.

பின்னர், கப்பல் விபத்தில் உயிர் பிழைத்த மற்ற மூன்று பேருடன் கலிஃபோர்னியா வளைகுடாவிலிருந்து தெற்கே மெக்சிகோ நகரம் வரை மேலும் 1,300 மைல்கள் (2,090 கிமீ) பயணம் செய்தார்.

அதன் பிறகு, வடக்கே தனியாக 1,500 மைல் (2,415 கிமீ) பயணத்தைத் தொடங்கி, நவீனகால நியூ மெக்சிகோ மற்றும் அரிசோனாவிற்குள் நுழைந்த, பூர்வகுடி அமெரிக்கர் அல்லாத முதல் நபர் என்ற பெருமையை எஸ்டெவானிகோ பெற்றார்.

"அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியாக மாறவிருந்த தொடக்கக்கால வரலாற்றில், எஸ்டெவானிகோ மிகவும் அசாதாரணமான, அதே சமயம் பலராலும் கவனிக்கப்படாத ஆளுமைகளில் ஒருவர்," என்று அவரைப் பற்றி பல வருடங்களாக ஆய்வு செய்து வரும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரும் பேராசிரியருமான முனைவர் ஹ்சைன் இலாஹியானே தெரிவித்தார்.

"அவர் புதிய பாதைகள், தடங்கள் மற்றும் நிலவியல் அறிவை உருவாக்க உதவினார், இது பிற்காலத்தில் தற்போதைய அமெரிக்காவின் மேற்கிற்குள் ஸ்பானியர்கள் ஊடுருவ வழிவகுத்தது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அமெரிக்காவில் கூட பெரும்பாலான மக்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.

தற்போது, அமெரிக்கா தனது 250 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடி, அதன் தோற்றத்தைத் திரும்பிப் பார்க்கும் இந்த வேளையில், நாட்டின் பல அருங்காட்சியகங்கள், சுற்றுலாக்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அவரது அதிகம் அறியப்படாத அவரது வரலாற்றுச் சிறப்பை முன்னிலைப்படுத்தி வருகின்றன.

எஸ்டெவானிகோவின் நீண்ட பயணம்

எஸ்டெவானிகோ எந்தவொரு எழுத்துப்பூர்வமான ஆதாரங்களையும் விட்டுச் செல்லாததால், அவருடன் பயணம் செய்து உயிர் பிழைத்த ஸ்பானியர்களின் குறிப்புகளைக் கொண்டே வரலாற்றாசிரியர்கள் அவரது வாழ்க்கையை பெரும்பாலும் தொகுத்துள்ளனர்.

அவர் 1500 களின் தொடக்கத்தில் அசெம்மூர் நகரில் பிறந்தார்.

ஆண்ட்ரேஸ் டொரான்டெஸ் டி கரன்சா என்ற ஸ்பானிஷ் பிரபுவால் அடிமையாக்கப்பட்ட அவர், ஸ்பெயினின் நார்வேஸ் பயணக்குழுவின் மூலம் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டார்.

அதிகாரப்பூர்வ ஸ்பானிய பயணங்களில் இஸ்லாமியர்கள் புதிய உலகிற்குப் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், டொரான்டெஸ் அவருக்கு ஞானஸ்நானம் செய்து, 'எஸ்டெவானிகோ' என்று மறுபெயரிட்டார்.

600 பேர் மற்றும் ஐந்து கப்பல்களுடன் கூடிய அந்தப் பயணம் 1527 ஜூன் மாதத்தில் தொடங்கியது, ஆனால் அது ஆரம்பத்திலிருந்தே ஒரு பேரழிவாகவே அமைந்தது.

சாண்டோ டொமிங்கோவில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தபோது சுமார் 140 ஆண்கள் பயணக்குழுவிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கியூபாவில் அத்தியாவசியப் பொருட்களை மீண்டும் நிரப்பும்போது ஏற்பட்ட ஒரு சூறாவளி, இரண்டு கப்பல்களை மூழ்கடித்ததுடன் 50 க்கும் மேற்பட்ட மாலுமிகளையும் கொன்றது.

இறுதியாக அவர்கள் மெக்சிகோவை நோக்கிப் பயணிக்க முயன்றனர், ஆனால் புயல்களின் காரணமாக 1528 ஏப்ரலில் தற்போதைய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஒதுங்கினர்.

பின்னர், அந்தப் பயணக்குழுவின் தலைவரான பான்ஃபிலோ டி நார்வேஸ், எஸ்டெவானிகோவையும் மேலும் பல நூறு வீரர்களையும் புளோரிடாவின் உட்பகுதியை ஆராய்வதற்காக வடக்கு நோக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டார்.

கொசுக்கள் நிறைந்த சதுப்பு நிலங்கள் வழியாக தற்போதைய செயின்ட் மார்க்ஸ் வரை சுமார் 300 மைல்கள் (480 கிமீ) மிகக் கடினமாக நடந்து கடந்த பிறகு, அவர்கள் அபலாச்சி பூர்வகுடி அமெரிக்கர்களால் தாக்கப்பட்டனர்.

இதனால் எஸ்டெவானிகோவும் எஞ்சிய ஸ்பானியர்களும் மிகவும் சோர்வடைந்து, தங்களின் கடைசி குதிரைகளைக் கொன்று தின்றனர்; தற்காலிகமாக ஐந்து மிதவைகளை உருவாக்கி, தற்போதைய மெக்சிகோவை அடையும் நம்பிக்கையில் கடற்கரையோரமாகப் பயணித்தனர்.

அவர்கள் மேற்கு நோக்கி மிதந்து சென்றபோது, மிசிசிப்பி ஆற்றின் முகத்துவாரத்தைப் பார்த்த முதல் பூர்வகுடி அல்லாத பயணிகளாயினர்.

ஆனால், கால்வெஸ்டன் அருகே அவர்களின் மிதவைகளைக் கவிழ்த்த அதே புயல்கள், நார்வேஸ் உட்பட எஞ்சியிருந்த ஸ்பானியர்களில் மூன்றில் இரண்டு பங்கினரைக் கொன்றன.

கப்பல் விபத்தில் தத்தளித்த பலரைப் போலவே, எஸ்டெவானிகோவும் விரைவில் பூர்வகுடி அமெரிக்கர்களால் சிறைபிடிக்கப்பட்டார்.

எப்படியோ, பழைய உலகத்தில் மிகக் குறைந்த அந்தஸ்தில் இருந்த ஒரு மனிதரால் புதிய உலகத்தில் உயிர் பிழைக்க முடிந்தது.

"பழைய உலகின் படிநிலைகள் மறைந்தபோது, எஸ்டெவானிகோவிற்கு சில நன்மைகள் இருந்தன. ஸ்பானியர்களைப் போலல்லாமல், அவர் பிற மொழிகளைப் பேச வேண்டியிருந்தது," என்று எஸ்டெவானிகோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'தி மூர்ஸ் அக்கவுண்ட்' என்ற நாவலை எழுதி புலிட்சர் பரிசுக்கான இறுதிப் பட்டியல் வரை சென்ற லைலா லாலாமி கூறினார்.

"அசெம்மூர் என்பது போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு அமேசிக் நகரமாக இருந்ததால், அவர் தமாசிக் , அரபு மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளைப் பேசியிருக்க வாய்ப்புள்ளது என்று நாம் அறியலாம். அவர் ஒரு ஸ்பானியருக்கு அடிமையாக இருந்ததால், ஸ்பானிஷ் மொழியையும் பேசினார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

கரன்காவா பூர்வகுடிகளுக்காக சுமார் ஐந்து ஆண்டுகள் கடினமாக உழைத்தபோது, எஸ்டெவானிகோ அவர்களின் பேச்சு மொழியையும், அந்தப் பிராந்தியத்தின் பிற குழுக்களால் பயன்படுத்தப்பட்ட சைகை மொழியையும் கற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் கரன்காவாவுக்குப் போட்டியான ஒரு பழங்குடியினருடன் ரகசியமாக ஒருங்கிணைந்து டொரான்டெஸுடன் தப்பியோடினார், எஞ்சியிருந்த இரண்டு ஸ்பானியர்களை விடுவிக்கவும் உதவினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், உயிர் பிழைத்த அந்த நால்வரும் வளைகுடா கடற்கரையிலிருந்து கலிஃபோர்னியா வளைகுடா வரை நடந்தே சென்றனர். தங்களை ஒரு பூர்வகுடிச் சமூகத்திலிருந்து அடுத்த சமூகத்திற்கு வழிநடத்திச் செல்ல, எஸ்டெவானிகோவின் மொழித்திறன் மற்றும் கலாசாரத் தகவமைப்பு ஆகியவற்றையே அவர்கள் நம்பியிருந்தனர்.

"அவர் தான் அந்தக் குழுவின் தலைவராக இருந்தார். மொழிபெயர்ப்பாளராக, சமரசம் செய்பவராக, வழிகாட்டியாக இருந்தார்," என்று கூறும் இலாஹியானே, "அவர்கள் ஒரு புதிய உலகத்தில் நகர்ந்து கொண்டிருந்தனர், எங்கு செல்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அந்த நேரத்தில் எஸ்டெவானிகோவிடம் ஒரு சாதகமான விஷயம் இருந்தது. அதுதான் தகவல்." என்கிறார்.

அவர்களின் பயணத்தின் போது, ​​எஸ்டெவானிகோ ஒரு பழங்குடி வணிகரைச் சந்தித்து, அவரது சமூகத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

அங்கு தங்கியிருந்தபோது, நோய்வாய்ப்பட்ட ஒரு பெண் அவர்களை அணுகி தனக்குச் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஸ்பானியர்களின் கிறிஸ்தவ சடங்குகளையும், தான் கவனித்த பூர்வகுடிகளின் மருத்துவ முறைகளையும் இணைத்துச் செய்ததன் மூலம், அந்தப் பெண் குணமடைந்துவிட்டதாக நம்ப வைப்பதில் அவர்கள் எப்படியோ வெற்றியடைந்தனர்.

அந்த மனிதர்களின் குணப்படுத்தும் ஆற்றல் பற்றிய செய்தி பரவியதால், பூர்வகுடி சமூகங்கள் அவர்களைத் தேடி வரத் தொடங்கின. அவர்கள் மேற்கு நோக்கிப் பயணிக்கும்போது பின் தொடரவும் செய்தன.

எஸ்டெவானிகோ ஸ்பானியர்களுக்கு முன்னதாகவே சென்று அவர்களின் வருகையை அறிவிப்பார். பெரும்பாலும் தனது கைகளில் சிப்பி வளையல்களையும், கணுக்கால்களில் சலங்கைகளையும் அணிந்திருப்பார். காய்ந்த சுரைக்காயால் செய்யப்பட்ட ஒரு கலனையும் கையில் வைத்திருப்பார்.

"மருத்துவ அறிவு கொண்ட மொராக்கோவின் கிராமப்புற சூஃபி துறவி கிராமம் கிராமமாகப் பயணிப்பதைப் போல அவர் எனக்குத் தோன்றுகிறார்.

ஆனால் அவர் பூர்வகுடி அமெரிக்கர்களிடமிருந்தும் இந்தக் கலாசாரக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு, தான் பயணிக்கும் போது பிற பழங்குடியினருக்குள் நுழைவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்துகிறார்," என்று கூறும் இலாஹியானே, "இறுதியில், அதுவே அவருக்குச் சற்று சோகமாக அமைந்தது." என்கிறார்.

ஏழு தங்க நகரங்கள்

1521 இல் ஆஸ்டெக்குகளைக் கைப்பற்றிய பிறகு, ஸ்பெயின் தற்போதைய மத்திய மற்றும் தெற்கு மெக்சிகோ பகுதியில் ஒரு காலனியை நிறுவியிருந்தது.

இந்த நான்கு பயணிகளும் இப்போது சினாலோவா என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள குலியாகன் நகரை நெருங்கியபோது, அவர்கள் ஒரு ஸ்பானிஷ் குதிரைப்படை குழுவைச் சந்தித்தனர்.

அவர்கள் இந்த நால்வரையும் தெற்கே 1,300 மைல்கள் (2,090 கிமீ) தொலைவில் உள்ள நியூ ஸ்பெயினின் தலைநகருக்கு (இன்றைய மெக்சிகோ நகரம்) அழைத்துச் சென்றனர்.

அங்கு, கப்பல் விபத்தில் உயிர் பிழைத்த அந்த நால்வரும், வடக்குப் பாலைவனத்தில் எங்கோ தங்கம் பூசப்பட்ட நகரங்கள் இருப்பதாகப் பூர்வகுடி பழங்குடியினர் எஸ்டெவானிகோவிடம் கூறிய கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

பெரும்பாலும் அந்த அந்நியர்கள் தங்கள் கிராமங்களை விட்டுத் தொடர்ந்து தள்ளிச் செல்ல வேண்டும் என்பதற்காகப் பூர்வகுடிகள் அப்படிக் கூறியிருக்கலாம்.

"ஏழு தங்க நகரங்கள்" என்று அழைக்கப்பட்ட இவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருந்த நியூ ஸ்பெயினின் வைஸ்ராய், 1539 இல் ஸ்பானிஷ் மதகுருமார்கள் குழுவை வடக்கே தற்போதைய நியூ மெக்சிகோ மற்றும் அரிசோனாவிற்குள் வழிநடத்திச் செல்ல எஸ்டெவானிகோவை அனுப்பினார்.

கழுத்தில் நீல நிற ஆபரணங்களையும், தலையில் இறகுகளையும் அணிந்து கொண்டு, எஸ்டெவானிகோ அந்தக் குழுவிற்கு முன்பாக நடந்து சென்றார்.

பூர்வகுடி பழங்குடியினரிடமிருந்து இந்த புகழ்பெற்ற நகரங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான முதன்மை வழிகாட்டியாக அவர் செயல்பட்டார்.

அவர் தெரிந்துகொண்ட விஷயம் ஓரளவுக்கு முக்கியமானது என்றால், அவர் ஒரு தூதுவர் மூலம் ஸ்பானியர்களுக்கு ஒரு சிறிய சிலுவையைத் திருப்பி அனுப்புவார்.

அதே வேளையில், ஒரு செய்தி முக்கியமானது என்றால், ஒரு நடுத்தர அளவிலான சிலுவையை அனுப்புவார். அது மிகவும் முக்கியமானது என்றால், ஒரு பெரிய சிலுவையைத் திருப்பி அனுப்புவார்.

ஒரு நாள், ஜூனி பியூப்லோ மக்களின் நிலத்திற்குள் நுழைந்த பழைய உலகத்தைச் சேர்ந்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்ற சில காலத்திலேயே, எஸ்டெவானிகோ "ஒரு மனிதனின் உயரத்திற்கு" இணையான ஒரு சிலுவையைத் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஸ்பானியர்கள் அவரோடு இணைவதற்காக வேகமாக முன்னோக்கிச் சென்றனர்.

ஆனால், ஏழு தங்க நகரங்களில் தென்கோடியில் இருந்ததாகக் கருதப்படும் ஹவிகு நகரத்திற்குள் அவர் நுழைய முயன்றபோது, ஜூனி பூர்வகுடிகளால் அவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை மட்டுமே அவர்களால் அறிய முடிந்தது.

ஸ்பானியர்கள் தங்கம் பூசப்பட்ட நகரங்கள் எதையும் கண்டுபிடிக்காவிட்டாலும், எஸ்டெவானிகோவின் இந்த இறுதிப் பயணம் அவர்களை "தியரா நியூவா" (புதிய நிலம்) என்று அறியப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றது.

இது பிற்காலத்தில் அமெரிக்க தென்மேற்குப் பகுதியில் ஸ்பானியர்களின் விரிவாக்கத்திற்கு மிக முக்கிய மையமாக மாறியது.

"வட அமெரிக்காவில் ஸ்பானிய பேரரசின் நிலவியல் சார்ந்த பார்வையை வடிவமைக்க எஸ்டெவானிகோ உதவினார்" என்று கூறும் இலாஹியானே, "அவரது பயணங்கள் பிற்காலத்தில் டெக்சாஸ், நியூ மெக்சிகோ, அரிசோனா மற்றும் அதற்கும் அப்பாலுள்ள பகுதிகளாக மாறவிருந்த பிராந்தியங்களுக்குள் விரிவாக்கம் செய்வதற்கான பாதைகள், மக்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றிய அறிவைப் பரப்பின.

1539 இல் ஜூனி எல்லைக்குள் அவர் மேற்கொண்ட இந்த இறுதிப் பயணம், 1540 இன் கொரோனாடோ பயணத்தைத் தூண்டியது [இது அமெரிக்க தென்மேற்குப் பகுதி முழுவதும் ஸ்பானியர்களின் பயணங்களுக்கும் குடியேற்றங்களுக்கும் வழிவகுத்தது."என விவரித்தார்.

பேரழிவை ஏற்படுத்தும் நோய்களை அறிமுகப்படுத்தியது மற்றும் பூர்வகுடி மக்களை இடம்பெயரச் செய்தது முதல் கத்தோலிக்க மதம், கலாசாரம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை நிறுவியது வரை, இந்த ஸ்பானிஷ் விரிவாக்கம் வரவிருக்கும் தேசத்தின் எதிர்காலத்தை ஆழமாக வடிவமைத்தது.

இரண்டுக்கும் இடைப்பட்டவர்

பல நூற்றாண்டுகளாக, எஸ்டெவானிகோ ஸ்பானிஷ் வரலாற்றுப் பதிவுகளில் ஒரு சிறிய குறிப்பாகவும், அமெரிக்க மக்களால் மறக்கப்பட்ட ஒரு நபராகவுமே இருந்து வந்தார்.

"ஏனென்றால், அவரது இந்த ஆய்வுப் பயணம் அமெரிக்கா உருவான கதையோடு பிணைக்கப்படவில்லை," என்று கூறும் லாலாமி, "பள்ளிகளில் கற்பிக்கப்படும் 13 காலனிகள் மற்றும் பிரிட்டனில் தங்களுக்கு ஏற்பட்ட அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து வந்த மக்களைப் பற்றி அமெரிக்கா உருவாக்கிய வரலாற்றிற்குள் இது கச்சிதமாகப் பொருந்தவில்லை"என்கிறார்.

ஆனால் கடந்த பத்தாண்டுகளில், அமெரிக்கா முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் சுற்றுலாக்கள் இந்தக் கண்டத்தின் ஆரம்பக்கால வரலாற்றில் அவரது பங்களிப்பை அதிகளவில் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன.

"வரலாற்றிலேயே அறியப்படாத ஒரு பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட மிகவும் அற்புதமான பயணங்களில் ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். யாராவது உண்மையிலேயே அவரைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும்," என்று 'டிஸ்கவர் புளோரிடா டூர்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் டேவிட் ஆண்டர்சன் கூறுகிறார்.

இந்நிறுவனம் 2017-ஆம் ஆண்டு முதல், எஸ்டெவானிகோ கால் பதித்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் வரலாற்று வழிகாட்டி நடைகளை நடத்தி அவரது பயணத்தை விவரித்து வருகிறது.

2016 ஆம் ஆண்டில், டெக்சாஸில் கால் பதித்த முதல் ஆப்பிரிக்கர் என்ற அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் மாகாண சட்டமன்ற வளாகத்தில் எஸ்டெவானிகோவின் 7 அடி (2.15 மீட்டர்) உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.

2022 முதல், மேற்கு டெக்சாஸில் உள்ள எல் பாசோ வரலாற்று அருங்காட்சியகம் எஸ்டெவானிகோவின் சாகசப் பயணத்தை அதன் ஊடாடும் டிஜிட்டல் சுவரில் விவரித்து வருகிறது.

மேலும் சாண்டா ஃபேயில் உள்ள நியூ மெக்சிகோ வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் அரிசோனாவில் உள்ள கொரோனாடோ தேசிய நினைவகத்திலும் அவரைப் பற்றிய விவரங்கள் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.

"அவர் மிகவும் பிரமாண்டமான ஒரு காரியத்தைச் செய்துள்ளார்," என்று மிச்சிகனின் டியர்போர்னில் உள்ள அரபு அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் டயானா அபுவாலி தெரிவித்தார்.

"அரபு மொழி பேசுபவர்கள் இந்த நாட்டிற்குப் புதியவர்கள் அல்ல என்பதைக் காட்டுவதற்காக, எங்களது 'கமிங் டு அமெரிக்கா' கண்காட்சியின் தொடக்கத்திலேயே அவரைப் பற்றிய விவரங்களை நாங்கள் வழங்குகிறோம்.

தற்போதைய அமெரிக்காவாக இருக்கும் இந்தப் பகுதியில் அரபு மொழியும் கலாசாரமும் மிக மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றன"என்றும் அவர் குறிப்பிட்டார்.

லாலாமியைப் பொறுத்தவரை, எஸ்டெவானிகோவை இவ்வளவு முக்கியமானவராக மாற்றுவது அவர் செய்த காரியம் மட்டுமல்ல. அவர் எதைப் பிரதிபலிக்கிறார் என்பதும் தான்.

"வட அமெரிக்காவைக் கடந்த முதல் ஆப்பிரிக்கர் அவர்தான், ஆனால் அவரது நிலைப்பாடுதான் அவரை மிகவும் சுவாரஸ்யமானவராக மாற்றுகிறது" என்று விவரிக்கும் அவர், "அவர் ஒரு வெற்றியாளராக அமெரிக்காவிற்கு வரவில்லை, அதே சமயம் அவர் தோற்கடிக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியாகவும் இருக்கவில்லை. அவர் இரண்டுக்கும் இடைப்பட்டவராக இருந்தார்" என்கிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு