You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காதலியை கொன்றுவிட்டு விபத்து போல மாற்ற முயன்றதாக காதலன் கைது - இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய தினம் (04/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.
விக்னேஷ்வரி (24) புதன்கிழமை காலை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் சாலை விபத்தில் இறந்திருக்கலாம் என்று பெற்றோர்கள் நினைக்க, காவல்துறை விசாரணை அது ஒரு கொலை என்றும் அந்தக் கொலையைச் செய்தது அந்தப் பெண்ணின் காதலன் என்றும் உறுதிப்படுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி புதுக்கோட்டையைச் சேர்ந்த தீபன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தீபனின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபன் கடந்த மாதம் 28ஆம் தேதியன்று விக்னேஷ்வரியை, பெண் வீட்டார் முன்னிலையில் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தார்.
அதையொட்டி, நிச்சயத்திற்குத் தேவையான ஆடைகளை வாங்கச் சென்றுள்ளார். தீபன் தன்னை ஏமாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் விக்னேஷ்வரி அவரைப் பின்தொடர்ந்துள்ளார். மேலும் தனது பெற்றோர்களிடம் தீபனுடன் செல்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. விக்னேஷ்வரியின் பெற்றோர் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளனர்," என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் புதன்கிழமை காலையில் விக்னேஷ்வரியின் உடல் கொளத்தூர் புதைக்காட்டுக்கு அருகே, இருசக்கர வாகனத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தலையில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் அவர் கிடைத்ததாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது. மேலும், அருகே உள்ள மின்கம்பத்தில் அவர் மோதி இறந்திருப்பது போலத் தெரிந்ததால் பெற்றோரும் அது ஒரு விபத்து என்று நம்பியதாகவும் அச்செய்தி கூறுகிறது.
ஆனால் "ஶ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே விக்னேஷ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் தீபன் விசாரிக்கப்பட்டார்.
அப்போது, விக்னேஷ்வரி, தீபன் வீட்டிற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியதாகவும், ஆத்திரத்தில் தனது இரும்பால் ஆன தண்ணீர் பாட்டிலில் அவரை அடித்தாகவும், அதனால் விக்னேஷ்வரி உயிரிழந்தாகவும் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளது" என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக இன்று போராட்டம்
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பாஜக அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
வக்ஃபு வாரிய சட்டத்தைச் சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும் நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன? மத்திய அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது, இஸ்லாமிய சகோதரர்களைத் தொடர்ச்சியாகப் பாதுகாப்பற்ற நிலையிலும், அச்சத்திலும் உறைய வைத்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
"இஸ்லாமிய சிறுபான்மையினரின் நலன் காக்கவே இந்தச் சட்டத் திருத்தம். எதிர்க்கட்சியினர் அவர்களை தவறாகத் திசை திருப்புகிறார்கள் என்ற வெற்று வாதத்தை மத்திய ஆளும் கட்சியினர் முன்வைக்கின்றனர். இது இஸ்லாமியர்களின் நலன் காக்கும் சட்டம் என்பது உண்மையானால், அதைத் தாக்கல் செய்யக்கூட அவர்களிடம் ஏன் இஸ்லாமியப் பிரதிநிதி ஒருவர்கூட இல்லை?" என்றும் விஜய் தனது அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதோடு, "ஜனநாயக அவையில் அதுபற்றி விவாதிக்கப் போதுமான இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லையே ஏன்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியிருப்பதாக விஜயின் அறிக்கையை மேற்கோள் காட்டி தினத்தந்தி செய்தி குறிப்பிட்டுள்ளது.
மேலும் "இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரான அரசியலைக் கையில் எடுத்துள்ள மத்திய பா.ஜனதா அரசுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து கொள்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து விஜயின் அறிவுறுத்தலுக்கு இணங்க தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஏப்ரல் 4) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், சென்னை அம்பத்தூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொள்வார் எனவும் அந்தச் செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு மோதிக்கு அண்ணாமலை நன்றி
புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோதிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்காசி மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழக பாஜக சார்பாக நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' யாத்திரையின்போது, புளியங்குடி பகுதி விவசாயப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கையான புளியங்குடி எலுமிச்சைக்கு, புவிசார் குறியீடு பெறுவதை நிச்சயம் நிறைவேற்றித் தருவோம் என்று உறுதி அளித்திருந்தோம்."
"பிரதமர் மோதி ஆட்சிக்கு வந்த கடந்த 11 ஆண்டுகளில், தமிழகத்தில் பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார். புளியங்குடி எலுமிச்சைக்கும் புவிசார் குறியீடு பெறுவதன் மூலம், ஏற்றுமதி அதிகரித்து, அந்தப் பகுதி விவசாயிகளுக்குப் பெரும் பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது," என்று அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "கடந்த மாதம் தென்காசியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில், புளியங்குடி எலுமிச்சைக்கு, வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், புவிசார் குறியீடு அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கை அளித்திருந்தோம்.
அதன்படியே, மத்திய அரசு அதற்குப் புவிசார் குறியீடு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது. இதன் மூலம், புளியங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் பயனடையும் என்பது உறுதி.
தென்காசி மாவட்டம் புளியங்குடி கிராம மக்கள் சார்பாக, தமிழக பாஜக முன்வைத்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, நிறைவேற்றித் தந்த பிரதமர் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருக்கு நன்றி," என அண்ணாமலை குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகரியில் 110 மி.மீ மழை பதிவானது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 9 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவையிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது," என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
அதோடு, "இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. வெள்ளிக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு: பரிந்துரைக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஏப்ரல் 3 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்ததாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்த வரி விதிப்பின் பின்னணியில், சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகள் மீது பாரிய அளவில் வரி விதிப்பதால் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. ஒரு நாடு என்ற வகையில் எவ்வாறு செயற்படுவது மற்றும் நிலைமையை எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்," என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு