ஒரே நொடியில் முடிய வேண்டிய வழக்கு 4 ஆண்டுகள் நீண்டது ஏன்? இந்த அப்பாவி பெண் எப்படி மீண்டார்?

என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANOOPKUMAR

படக்குறிப்பு, பாரதியம்மாள் கடந்த, 45 ஆண்டுகளாக குநிச்சேரியில் வசித்து வருகிறார்
    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

செய்யாத குற்றத்துக்காக நான்கு ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி நீதியை பெற்று, கேரளா போலீஸாருக்கும் நீதித்துறைக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறார், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மூதாட்டி பாரதியம்மாள்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பாரதி என்ற பெண், 1998–ம் ஆண்டு ராஜகோபாலின் தாய் மற்றும் தந்தையிடம் வாக்குவாதம் செய்து, அவர்கள் வீட்டிலிருந்த பொருட்களை உடைத்தெறிந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜகோபால் பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாரதியை போலீஸார் கைது செய்திருந்தனர். அதன்பின், ஜாமீனில் வெளிவந்த பாரதி பல ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார்.

பல ஆண்டுகளாக குற்றவாளி ஆஜராகாததால் வழக்கு நீண்ட நிலுவை வழக்காக மாறியது. கைதான போது பாரதி கொடுத்த முகவரியான, பாலக்காடு மாவட்டம் குநிச்சேரிக்கு, 2019–ல் சென்ற போலீஸார், அங்கு வசித்த பாரதி என்ற பாரதியம்மாளை (84) கைது செய்யச் சென்றனர்.

கைதாகும் முன்னே ஜாமீன் பெற்ற மூதாட்டி பாரதியம்மாள், 4 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி, வேறு பெண்ணுக்கு பதிலாக தன்னை போலீஸார் தவறாக வழக்கில் சேர்த்துள்ளதை நிரூபித்து, தனக்கான நீதியைப்பெற்று, கேரளா போலீஸார் மற்றும் நீதித்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் பாரதியம்மாள்.

“ஆளை மாற்றி வழக்கில் சேர்த்ததுடன், தங்கள் தரப்பு நியாயத்தை கூற நீதித்துறை, காவல்துறை வாய்ப்பளிக்காததால் தான் 4 ஆண்டுகளானது”, என குற்றம்சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட பாரதியம்மாள் தரப்பினர்.

மூதாட்டி பாரதியம்மாள், 4 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தினார்

பட மூலாதாரம், ANOOPKUMAR

படக்குறிப்பு, கைதாகும் முன்னே ஜாமீன் பெற்ற மூதாட்டி பாரதியம்மாள், 4 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தினார்

என்ன நடந்தது?

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாரதியம்மாளின் வழக்குரைஞர் கிரிஸ் நோச்சுள்ளி, ‘‘பாரதியம்மாள் கடந்த, 45 ஆண்டுகளாக குநிச்சேரியில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே ராஜகோபால் வீட்டில் பொருட்களை உடைத்த பாரதி என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார். 1994–ல் ‘பாரதியம்மாளின் சொத்துகள் என்னுடையது’ எனக்கூறி அப்பெண் தகராறு செய்துள்ளார்.” என்றார்.

“இதையடுத்து, பாரதியம்மாள் கொடுத்த வழக்கில் கைதான உண்மை குற்றவாளி பாரதி விடுதலையாகியுள்ளார். இந்த வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு, ராஜகோபால் வீட்டில் குற்றம் செய்து விட்டு அதிலிருந்து தப்பிக்க, வேண்டுமென்றே மூதாட்டி பாரதியம்மாளின் முகவரியை கொடுத்துள்ளார்.”

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

“2019இல் பாரதியம்மாள் ஜாமீன் பெற்ற போது, அவர் குற்றவாளி அல்ல என நிரூபிக்க அவரின் ஓய்வூதிய ஆவணம், பாரதியம்மாள் கூறியதை எழுத்து வடிவில் கடிதமாகவும், அவரின் பழைய புகைப்படங்கள் என பல ஆவணங்களை சமர்பித்தோம். இத்தனை ஆவணங்கள் நாங்கள் சமர்பித்ததால், தனிச்சட்டங்களின் கீழ் நாங்கள் எந்த சிறப்பு மனுவும் (Special Petition) கொடுக்கவில்லை.

போலீஸார், நீதிமன்றம் மற்றும் அரசு வழக்குரைஞர் என எவருமே, ஜாமீன் பெறும் போது நாங்கள் கொடுத்த ஆவணங்களை முறையாக சரிபார்க்கவில்லை.

மேலும், வழக்கு பதிவு செய்த ராஜகோபாலுடன் நேரில் சந்திக்கவும் வாய்ப்பு வழங்காததால், இவ்வழக்கு நான்கு ஆண்டுகள் நடந்துள்ளது. 2019–ல் பாரதியம்மாளுடன், ராஜகோபாலை நேரில் சந்திக்க விட்டிருந்தாலோ அல்லது எங்கள் ஆவணங்களை முறையாக சரிபார்த்திருந்தாலோ, அன்றைய தினம் அந்த விநாடியே இவ்வழக்கு முடிந்திருக்கும். ஒருவேளை, பாரதியம்மாள் மூதாட்டி என்பதால் அவர் விரைவில் இறந்து விடுவார், வழக்கை விரைந்து முடித்து விடலாம் என்ற நோக்கில் போலீஸார் செயல்பட்டுள்ளார்களா? என சந்தேகம் எழுகிறது.”என நம்மிடம் விரிவாக பேசினார்.

‘நீண்ட போராட்டம் நடத்தி நீதியை பெற்றுள்ளோம்’

‘நீண்ட போராட்டம் நடத்தி நீதியை பெற்றுள்ளோம்’

பட மூலாதாரம், ANOOPKUMAR

படக்குறிப்பு, 2019 செப்டம்பர் 28–ம் தேதி காலை, 10:00 மணிக்கு திடீரென வீட்டுக்கு வந்த பாலக்காடு தெற்கு போலீஸார், வழக்கு தகவல்களை தெரிவித்து சித்தியை கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர்

பாரதியம்மாள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால், அவர் சார்பில் பிபிசி தமிழிடம் அவரின் சகோதரியின் மகள் கீதா அனூப்குமார் பேசினார்.

‘‘தமிழக பொதுப்பணித்துறையில் இருந்த என் சித்தப்பா ஜனார்த்தனன் மற்றும் சித்தி பாரதியம்மாள் தமிழகத்தில் வசித்து வந்தனர்; அவர்களுக்கு வாரிசுகள் இல்லை. சித்தப்பா இறந்த பின், எங்கள் வீட்டுக்கு அருகே, 45 ஆண்டுகளாக பாரதியம்மாள் வசித்து வருகிறார். நான் தான் அவரை கவனித்து வருகிறேன்.”

“2019 செப்டம்பர் 28–ம் தேதி காலை, 10:00 மணிக்கு திடீரென வீட்டுக்கு வந்த பாலக்காடு தெற்கு போலீஸார், வழக்கு தகவல்களை தெரிவித்து சித்தியை கைது செய்ய வேண்டுமென தெரிவித்தனர். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, எனது சித்தி ‘நான் குற்றவாளி அல்ல, எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என பலமுறை தெரிவித்தும், போலீஸார் அதை ஏற்கவில்லை.”

“நாங்கள் அன்று மாலை வரை போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தோம். அடுத்த நாள் காலை வருவதாக அவர்களிடம் தெரிவித்து விட்டு, அன்று மாலையே நேரடியாக நீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்றோம். வயது மூப்பால் என் சித்தி நடப்பதற்கே கடும் சிரமத்தை சந்திப்பவர். இருந்தும், இந்த 4 ஆண்டுகளில் கடும் இன்னல்களுக்கு மத்தியில் ஆறு முறைக்கு மேல் நீதிமன்றம் வந்து வழக்கை எதிர்கொண்டுள்ளார்.”

“இதற்கு மேல் எங்களால் சித்தியை சிரமப்படுத்தி பார்க்க முடியாது எனக்கருதி, வழக்கு தொடுத்த ராஜகோபாலனை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தோம். பின், எனது சித்தியின் பழைய புகைப்படங்கள், கடந்த கால வாழ்க்கை குறித்து அவரிடம் தெரிவித்தோம்.

புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜகோபாலன் ‘எனது வீட்டில் வேலை செய்த பாரதியம்மாளுக்கு அதிகபட்சமாக தற்போது, 55 வயது தான் இருக்கும். உங்கள் பாரதியம்மாளுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. இத்தனை நாட்கள் நான் உங்களை நேரில் பார்க்காமல் போனதை நினைத்து வருந்துகிறேன்,’ எனக்கூறியதுடன், அவர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இப்படி, நீண்ட போராட்டம் நடத்தி தான் நீதியை பெற்றுள்ளோம். 2019–ல் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால், அப்போதே வழக்கை முடித்திருப்போம்,’’ என்றார் கீதா அனூப்குமார்.

‘போலீஸாரின் கவனக்குறைவு’

‘போலீஸாரின் கவனக்குறைவு’

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, 2019இல் பாரதியம்மாள் ஜாமீன் பெற்ற போது, அவர் குற்றவாளி அல்ல என நிரூபிக்க அவரின் ஓய்வூதிய ஆவணம், பாரதியம்மாள் கூறியதை எழுத்து வடிவில் கடிதமாகவும், அவரின் பழைய புகைப்படங்கள் என பல ஆவணங்களை சமர்பித்தோம் என்கிறார் வழக்குரைஞர் கிரிஸ் நோச்சுள்ளி

பிபிசி தமிழிடம் பேசிய, வழக்கை விசாரித்த அரசு வழக்குரைஞர் முஹமது ரஃபீக் மலயில், ‘‘வழக்கமாக யார் கைதானாலும் நான் குற்றவாளி இல்லை என்பதைத்தான் சொல்லுவார்கள். ஆனால், வழக்கில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது தான் குற்றவாளி அல்ல என நிரூபிக்க நினைத்தாலோ குற்றம்சாட்டப்பட்டவர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973ல் உள்ள 239, 258 அல்லது 482 ஆகியவற்றின் கீழ் நீதிமன்றத்தில் சிறப்பு மனு (Special Petition) கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மனு கொடுக்கவில்லை. மேலும், கொரோனா பேரிடர், போலீஸாரின் கவனக்குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் தான், பாரதியம்மாள் குற்றவாளி இல்லை என நிரூபிக்க தாமதமாகியுள்ளது,’’ என்றார் நம்மிடம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: