பாகிஸ்தானில் தமிழர்கள் கொண்டாடிய பங்குனி உத்திரத் திருவிழா

பாகிஸ்தானில் தமிழர்கள் கொண்டாடிய பங்குனி உத்திரத் திருவிழா
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானின் கராச்சியில் வாழும் இந்துக்கள் ஒன்றுகூடி பங்குனி உத்திரத் திருவிழாவைக் கொண்டாடியுள்ளனர். விழாவை கொண்டாடுவது மட்டுமல்லாமல், தங்களால் இயன்றதை காணிக்கையாக செலுத்துவதன் மூலம், விழாவில் குறையில்லாமலும் பார்த்துக்கொள்கிறார்கள்.

தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்குள் நிதி சேகரித்து, இந்த பண்டிகைக்காக பாரம்பரிய உணவுகளை தயார் செய்கின்றனர்.

இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களில் பெரும்பாலானோர் இந்த நாளுக்காக, சில வாரங்கள் விரதம் இருப்பதும் வழக்கம்.

பாகிஸ்தானில் பங்குனி உத்திரம் நடைபெறுவது புதிதாகத் தொடங்கிய சடங்கல்ல. சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடரும் பாரம்பரியம் என்கிறார்கள்.

விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பலர் காவடி எடுத்தும், அலகு குத்திக்கொண்டும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

மதராசி பாராவில் உள்ள இந்த மாரியம்மன் கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு, பக்தர்கள் கடும் வெப்பத்தில் வெறுங்காலுடன் நடந்து செல்கின்றனர்.

கராச்சியில், குறுகிய தாழ்வாரங்கள் நிறைந்த இந்த பகுதியே பாகிஸ்தானிய தமிழ் குடும்பங்கள் அதிகம் வாழும் மதராசி பாரா.

அதே குறுகிய தெருவில் 1964-ல் கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் உள்ளது.

கராச்சியில் சுமார் 100 தமிழ் இந்துக் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் பிரிவினைக்குப் பிறகு சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடி இடம்பெயர்ந்தனர்.

பல தமிழ் இந்துக்கள், இந்தியாவில் உள்ள தங்கள் மதத்தலங்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் உள்ள விரிசல், அவர்களின் திட்டங்களை பாதிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: