You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: யானைகளால் அதிகரிக்கும் மரணங்கள்.. பாதிக்கப்படும் கூடலூர் மக்கள்; என்ன நடக்கிறது?
நீலகிரி பல்லுயிர்ப் பெருக்கம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களிலுள்ள காடுகளை உள்ளடக்கிய சூழல் முக்கியத்துவமுள்ள வனப்பகுதியாகும். இதனால் இங்குள்ள காட்டுயிர்கள், 3 மாநில காடுகளிலும் பரவியும் இடம் பெயர்ந்தும் வாழ்கின்றன.
வனத்துறையினர் பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, கடந்த ஆண்டில் நடந்த 3 மாநில ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் 484 சதுர கி.மீ. பரப்பிலுள்ள கூடலூர் வனக்கோட்டத்தில் 120-க்கும் அதிகமான யானைகள் இருக்கின்றன.
வனத்துறையினர் வழங்கும் தரவுகளின்படி, இந்தக் கோட்டத்திலுள்ள 6 வனச்சரகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் யானைகள் தாக்கி சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு 8லிருந்து 10 பேர் இதில் மரணமடைகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இங்குள்ள காடுகள், தேயிலை மற்றும் காபி தோட்டங்களாலும், குடியிருப்புகளாலும், வணிக கட்டடங்களாலும் துண்டாடப்பட்டுள்ளன.
இதனால் ஒரு மாநில வனப்பகுதியிலிருந்து மறுபகுதிக்கு காலம் காலமாக இடம் பெயர்ந்து வந்த யானைகள், தடம் மாறி குடியிருப்புகளுக்குள் ஊடுருவுகின்றன. அத்தகைய சூழ்நிலையில்தான் யானைகள் தாக்கி மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த மே மாதத்தில் பாக்கணா என்ற பகுதியைச் சேர்ந்த மிஷாப் என்ற 14 வயது பள்ளி மாணவர், அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பும்போது யானை தாக்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் அச்சமயத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமீபகாலமாக இதுபோன்ற மறியல் அடிக்கடி நடந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, பாதிப்புகளை அறிவதற்காக பிபிசி அங்கு களஆய்வு மேற்கொண்டது.
கூடலூர் வனக்கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு குடியிருப்புகளிலும், காட்டுக்குள் உள்ள பழங்குடியின கிராமங்களிலும் பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசிய பிபிசி, வனத்துறையின் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, இரவில் யானைகளை காட்டுக்குள் அனுப்பும் பணியிலுள்ள குழுக்களுடனும் இணைந்து பயணித்தது. பிதர்காடு பகுதியில், அகழி வெட்டுவதையும் நேரில் கண்டது.
பிபிசியிடம் பேசிய பெரும்பாலான மக்கள், கடந்த 10 ஆண்டுகளில்தான், யானை–மனித மோதல் மிகவும் அதிகமாகியிருப்பதாகத் தெரிவித்தனர்.
கோரஞ்சால் கிராமத்தைச் சேர்ந்த 73 வயதான சதானந்தனின் வீடு, தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி செல்லும் பிரதான சாலையோரமே உள்ளது.
ஆனால் அங்கேயே யானைகள் அடிக்கடி வந்துவிடுவதாக பிபிசியிடம் தெரிவித்த அவர், ''நான் 60 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேன். பத்தாண்டுகளாகவே யானைகள் இப்பகுதிக்குள் வருவது அதிகமாகியுள்ளது. சமீபமாக தினமும் இரவு எட்டரை மணிக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, இங்கே அருகில் ரோட்டில் வைத்தே இரண்டு பேரை அடித்துக்கொன்று விட்டது.'' என்றார்.
கூடலூர் வனக்கோட்டத்தில் காடுகளுக்கு அருகிலேயே பழங்குடியின கிராமங்களும், பிற குடியிருப்புகளும் கலந்துள்ளன. தனியார் தேயிலைத் தோட்டங்களும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான தோட்டங்களும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரவியுள்ளன.
இந்த தேயிலைத் தோட்டங்களுக்கு அருகில் லைன் குடியிருப்பு எனப்படும் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இந்த லைன் குடியிருப்புகளிலும் யானைகள் நடமாட்டம் அன்றாடம் இருப்பதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் தகவல் பகிர்ந்தனர்.
சேரம்பாடியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் விஜயலட்சுமி, ''(சில நாட்களுக்கு முன்பு) காலையில் 3 மணிக்கே பக்கத்திலுள்ள ரோட்டுக்கு யானை வந்துவிட்டது. எஸ்டேட் வேலைக்கு ஆட்களைக் கூப்பிட காலையில் வண்டி வந்தபோது, 3 யானைகள் ரோட்டில் நின்றுள்ளன. வீட்டுக்கு அருகிலுள்ள பலா மரங்களில் பழம் பறிக்க யானைகள் வரும். மாலை 7 மணிக்கு மேல் கடைக்குக்கூட போக முடியாது.'' என்றார்.
அதே பகுதியிலுள்ள குடியிருப்பில் வசிக்கும் செல்லம்மாள், "சமீபத்தில் குட்டியுடன் 9 யானைகள் வந்தன. வனத்துறையினர் வந்து வெடி போட்டு துரத்திவிட்டனர். ஆனால் தூரமாகப் போகாது. மீண்டும் இங்கேயே வரும். இரவு 9 மணியாகிவிட்டால் வனத்துறையினர் ''யானை இருப்பதால், வெளியே வராதீர்கள்'' என்று மைக்கில் அறிவிப்பார்கள். நாங்கள் வெளியே வரவே மாட்டோம்.'' என்றார்.
யானைகளை குடியிருப்பு மற்றும் சாலைகளிலிருந்து துரத்தும் பணியை மேற்கொள்ளும் வனத்துறைக் குழுவினர், மாலை ஐந்து மணிக்கே வன அலுவலகங்களில் ஒன்று கூடி, வனச்சரக அலுவலர் அல்லது வனவர் தரும் அறிவுறுத்தலின்படி வெவ்வேறு வாகனங்களில் பல பகுதிகளுக்குப் பிரிந்து செல்கின்றனர்.
இத்தகைய வனத்துறைக் குழுவினருடன் இணைந்து 2 நாட்கள் பிபிசி பயணம் செய்தபோது, மாலை ஆறரை மணிக்கே குடியிருப்பையொட்டிய பகுதிகளில் யானைகள் ஒன்றாக நிற்பதை வனத்துறை ட்ரோன் மூலமாகப் பார்க்க முடிந்தது.
குழுவினர் அங்கு சென்று அவற்றை காட்டுக்குள் துரத்திய சில நிமிடங்களில் வேறு பகுதியிலிருந்து அந்தக் குழுவுக்கு அழைப்பு வந்து அங்கு செல்ல வேண்டியிருந்தது. ஓவேலி, நாடுகாணி, பந்தலூர், பிதர்காடு, சேரம்பாடி, கூடலூர் ஆகிய 6 வனச்சரகங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
நாடுகாணியிலுள்ள வனத்துறையின் மரபியல் பூங்கா (Genepool Eco Park) வளாகத்தில், யானை நடமாட்டத்தைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
வனக்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் யானை–மனித மோதல் அதிகமாக நடக்கும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 45 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு,
யானைகளின் நடமாட்டம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.
யானை நடமாட்டம் குறித்துத் தகவல் தெரிவிப்பதற்காக பொதுமக்களை உள்ளடக்கிய வாட்ஸ்ஆப் குழுக்களை வனத்துறை அமைத்துள்ளது. அதைத் தவிர்த்து ஒவ்வொரு வனச்சரகத்திலும் அந்தந்த வனச்சரக அலுவலரின் எண்களும் மக்களிடம் பகிரப்பட்டுள்ளன. பொதுவான இலவச தொலைபேசி எண்ணும் ( 1800 425 4353) அவசர அழைப்புக்கான அலைபேசி எண்ணும் (90803 20002) தரப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை செயல்படும் விதத்தையும், பொதுமக்களிடமிருந்து வரும் அழைப்புக்குப் பின் வனத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் நாடுகாணி வனச்சரக அலுவலர் ரவி பிபிசியிடம் விளக்கினார்.
யானை நடமாட்டம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு, வயர்லெஸ், அலைபேசி மற்றும் அலாரம் மூலமாக தொடர்ந்து தகவல்கள் வருவதையும் அதன்படி குழுக்கள் அனுப்பப்பட்டு யானைகள் காட்டுக்குள் திருப்பி அனுப்பப்படுவதையும் பிபிசி குழு நேரில் கண்டறிந்தது.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு