You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பறிபோன 12 இந்திய உயிர்கள்; கத்தார் தொழிற்சாலை வெடிப்பு குறித்து தெரியவந்தது என்ன?
கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஸ் லஃப்பான் நகரத்தில் உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் "தொழில்நுட்ப விபத்து" ஒன்று ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 66 பேர் காயமடைந்தாகவும் கத்தாரின் உள்விவகார அமைச்சகம் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 12 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்து இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பு காரணமாக , ராஸ் லஃப்பானில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள மத்திய தோஹா முழுவதிலும் இந்த வெடிப்பு உணரப்பட்டதால் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இந்த வெடிப்பு குறித்து பேசியுள்ள கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி, இந்த சம்பவத்தின் காரணமாக நாட்டின் ஏற்றுமதி பாதிக்காது என்றும் "இது ஒரு விபத்து, இது நாசவேலையோ அல்லது விரோதப் போக்கோ கொண்டதல்ல" என்றும் குறிப்பிட்டார்.
2026 ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில், கத்தார் எனர்ஜி எல்என்ஜி நிறுவனம் இயக்கும் ராஸ் லஃபான் தொழிற்நகரில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு வழங்கும் நிலையத்தில் வெடிப்பும் தீ விபத்தும் ஏற்பட்டது. இது ஒரு விபத்து மட்டுமே; சேதப்படுத்தும் நோக்கத்துடன் நடந்ததோ அல்லது எதிர்மறையான தாக்குதலோ அல்ல என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
மேலும் பார்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் ஏற்பட்ட இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டதுடன் , இதன் காரணமாக சுற்றுச்சூழல் அபாயங்கள் எதுவும் இல்லை என ஷெரிடா அல்-காபி தெரிவித்தார் .
இருப்பினும், பணிகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பதைத் தீர்மானிப்பது கடினம் என குறிப்பிட்ட அவர், அவசரப் பராமரிப்புத் தேவைகள் காரணமாக ஆலையின் உற்பத்தி திட்டமிட்டு முற்றிலுமாக 2025 டிசம்பர் முதல் நிறுத்தப்பட்டு, இரண்டு நாட்களுக்கு முன்புதான் முதன்முறையாக மீண்டும் தொடங்கப்பட்டதாக ஷெரிடா அல்-காபி குறிப்பிட்டார்.
மேலும் இந்த வெடிப்பில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதையும் ஷெரிடா அல்-காபி உறுதிப்படுத்தியுள்ளார்.
"துரதிருஷ்டவசமாக, இன்று நான் எப்போதும் நடைபெறாதிருக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒரு விஷயத்தை அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதாவது, இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டினரைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ள துயரமான செய்தியை அறிவிப்பதாகும்.
மொத்தம் 66 பேர் காயமடைந்துள்ளதாகவும் , அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் , அவர்களில் எவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.
காயமடைந்தவர்கள் கத்தார், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கென்யா, கினியா, தான்சானியா, நைஜீரியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்."
தோஹாவில் உள்ள இந்திய தூதரகம், தாங்கள் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் நடந்த சோகமான சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ,
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், உயிரிழந்தவர்களின் உடல்கள் கூடிய விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்வதாக" இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து எக்ஸ் தள பதிவிட்டுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
"கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்நகரில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கத்தார் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில்,
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பபித் ,சஜித்குமார் , சுவின் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ள முதல்வர், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு