திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது - லட்சக்கணக்கான பக்தர்களை எப்படி சமாளிக்கிறது நிர்வாகம்?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

திருவண்ணாமலையில் இன்று மாலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி இன்றைய நிகழ்வில் பங்கேற்று வழிபட லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறையும் உள்ளூராட்சி அமைப்புகளும் எப்படி மேற்கொள்கின்றன?

 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நடைபெற்றுவரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்வு இன்று மாலை  ஆறு மணியளவில் நடைபெற்றது.  கோவிலின் பின்புறமுள்ள மலையின் 2,668 அடி உச்சியில்  இந்தத் தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக, இதற்கான கொப்பரை நேற்றே பக்தர்களால் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர்.

பக்தர்களுக்கு உதவும் வகையில் 2,700 சிறப்புப் பேருந்துகள் அரசுப் பேருந்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படுகின்றன.  அதேபோல, 15 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

கார்த்திகை தீபம் ஏற்றும் தினமான இன்றுதான் பாபர் மசூதி இடிப்பு தினமும் வருவதால், திருவண்ணாமலை முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. திருவண்ணாமலை நகரை வந்தடையும் ஒன்பது சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனியார் வாகனங்களில் வருபவர்கள் உரிய சோதனைக்குப் பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறர்கள். கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளும் திருவண்ணாமலை நகரமும் வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 27 கண்காணிப்பாளர்கள், 12 ஆயிரம் காவலர்களை உள்ளடக்கிய காவல்துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன.

லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்

கிரிவலப் பாதையிலும் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையைப் பொருத்தவரை இந்தத் தீபத் திருவிழாவிற்கு, இரண்டு நாட்களில் இருபது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிவார்கள்.

இம்மாதிரியான ஒரு கூட்டத்தைச் சமாளிப்பதென்பது எந்த ஒரு உள்ளூராட்சி அமைப்புக்கும் மிகப் பெரிய சவால்தான். ஆகவே, இந்த திருவண்ணாமலை தீபத்திற்கான ஏற்பாடுகள் இரு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடுகின்றன.

தவிர, இந்த இருபது லட்சம் பக்தர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குவிவதில்லை என்பதால், அதற்கேற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

திருவண்ணாமலை நகரம், மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றி ஐம்பது இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 465 தற்காலிகக் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தீயணைப்பு வாகனங்கள், அவசரகால மருத்துவ வாகனங்கள் ஆகியவையும் பெரும் எண்ணிக்கையில் அங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலைக்கு வந்துசெல்ல 2,700 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாகப் பேருந்துகளை இயக்கினால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், வேலூருக்கும் விழுப்புரத்திற்கும் சில நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தப் பேருந்துகள் வந்து செல்ல 13 இடங்களில் புதிதாக பேருந்து நிலையங்களும் 58 இடங்களில் கார் நிறுத்தும் இடங்களும் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கின்றன.

கிரிவலப் பாதையில், ஒவ்வொரு கிலோமீட்டரும் ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டு, அதற்கென தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன. மலை மீது ஏற பாஸ் பெற்றவர்கள், அதன்படி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எங்கே உணவு சாப்பிடுவார்கள்?"

இவர்களில் பெரும்பாலானவர்கள் யாரும் இங்கே தங்குவதில்லை. 80 சதவீதத்திற்கு மேல் தீபத்தை வெளிலிருந்தபடி பார்த்துவிட்டு, கிரிவலம் செய்ய விரும்பினால் கிரிவலம் செய்துவிட்டு வெளியேறி விடுவார்கள்.

இந்த நாளில் 20 சதவீத்திற்கும் குறைவானவர்களே கோவிலுக்குள் சென்று கடவுளை தரிசிப்பார்கள். உணவைப் பொருத்தவரை, திருவண்ணாமலை முழுவதும் சுமார் 220 இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட அன்னதான மையங்கள் இந்த இரண்டு நாட்களிலும் செயல்படும். ஆகவே உணவு ஒரு பிரச்னையாகவே இருக்காது" என்கிறார் உள்ளூர்வாசியான பாலமுருகன்.

இரண்டு நாட்களில் 20 லட்சம் பேர் வருவதென்பது மிகப் பெரிய எண்ணிக்கை என்றாலும் திருவண்ணாமலைக்கு இவ்வளவு பெரிய பக்தர் கூட்டம் என்பது புதிதல்ல.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிட்டத்தட்ட நான்கு லட்சம் பேர்வரை கிரிவலத்திற்காக வருகின்றனர். சாதாரண நாட்களிலும் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இங்கே வந்து செல்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: