You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'புகழ் அனைத்தும் இறைவனுக்கே' - பிக்பாஸ் வெற்றியாளரானார் அசீம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் வெற்றி பெற்றுள்ளார்.
பிரமாண்டமாக நடைபெற்ற இறுதிப்போடியில் பிக்பாஸ் கோப்பையை பெற்றுக்கொண்ட அவர், "புகழ் அனைத்தும் இறைவனுக்கே" என்று கூறினார்.
இரண்டாவது இடம் விக்ரமனுக்கு கிடைத்தது. மூன்றாவது இடம் ஷிவினுக்கு கிடைத்தது.
"காலம் முழுவதும் போராடக்கூடிய குணம் கொண்டவன் நான். எனது போராட்டம் தொடரும். மக்களுக்கான பயணம் தொடரும். அறம் வெல்லும்" என்று இரண்டாவது இடம் பிடித்த விக்ரமன் கூறினார்.
கடைசி நாளில் என்ன நடந்தது?
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சக போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகள் பல இந்த நிகழ்வில் நடைபெற்றன. மேலும், இறுதிப்போட்டியாளர்கள் விக்ரமன், ஷிவின், அசீம் ஆகியோருக்காக பிக் பாஸ் இல்லத்திற்குள்ளேயும் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிக் பாஸ் கோப்பையை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன் பார்வையாளர்களுக்குக் காண்பித்தார்.
நிகழ்ச்சியின் இறுதிவாரத்தில் பணப்பெட்டியுடன் வெளியேறிய கதிரவன், அமுதவாணன் மற்றும் நிகழ்ச்சியில் நான்காவது இடம் பிடித்த ‘மைனா’ நந்தினி ஆகியோர் கமல்ஹாசன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர். மேலும், சக போட்டியாளர்கள் பிக் பாஸ் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். சக போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் பல்வேறு பட்டங்களையும் வழங்கினார்.
பின்னர் பிக் பாஸ் இல்லத்திற்குள்ளே சென்ற கமல்ஹாசன், இறுதிபோட்டியாளர்கள் மூவரிடமும் உரையாடினார்.
பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்குப் பின் மூன்று போட்டியாளர்களும் பலத்த வரவேற்புக்கு மத்தியில் மேடைக்கு வந்தனர்.
மூன்று போட்டியாளர்களும் மேடையில் ஏற, ஷிவின் இரண்டாவது ‘ரன்னர் அப்’ ஆக வந்துள்ளதை கமல்ஹாசன் கூறினார். இதையடுத்து, மூன்றாவது இடம்பிடித்த ஷிவின், இறுதிப்போட்டியிலிருந்து வெளியேறினார்.
வெற்றியாளர் அசீம்
பின்னர், கமல்ஹாசன் பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பதை அறிவித்தார். விக்ரமன் - அசீம் இருவருடைய கைகளையும் பிடித்திருந்த கமல் ஹாசன், அசீமின் கைகளை உயர்த்தி அவர் வெற்றியாளர் என்பதை உணர்த்தினார். வெற்றியாளரான அசீமுக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் சுமார் 15 லட்சம் மதிப்பிலான காரும் பரிசாக வழங்கப்பட்டது. பிக் பாஸ் கோப்பையும் அவருக்கு வழங்கப்பட்டது.
இறுதியாக வந்த 3 போட்டியாளர்கள்
ஷிவின்:
சிங்கப்பூரை சேர்ந்த திருநங்கை மாடலான ஷிவின், சக போட்டியாளர்களின் பாராட்டுகளை தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளார். தான் சொல்ல வரும் கருத்துக்களை நேர்த்தியாக ஷிவின் கூறுகிறார் என்பது மற்ற போட்டியாளர்களின் கருத்தாக இருந்திருக்கிறது.
விக்ரமன்:
தொகுப்பாளராக இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாநிலப் பொறுப்பில் உள்ள விக்ரமன், நிகழ்ச்சியில் பலவித முற்போக்கான கருத்துக்களை எடுத்துக்கூறி பலரின் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளார். பிக் பாஸ் இல்லத்திலிருந்து அம்பேத்கருக்கு அவர் எழுதிய கடிதம் கமல்ஹாசன்னிடமிருந்து வரவேற்பைப் பெற்றது.
அசீம்:
மற்ற போட்டியாளர்களை வரம்புமீறி கோபத்தில் பேசுவதற்காகவே பொதுவாக அறியப்படும் அசீம், வாரவாரம் கமல்ஹாசனிடமிருந்து பல அறிவுரைகளை பெற்று வந்துள்ளார். எனினும் இறுதிவாரம் வரை மற்ற போட்டியாளர்களிடம் தன் கோபத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளார் அசீம்.
இந்நிலையில் அசீம் இறுதிப் போட்டியை வென்றால் அது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்றும் சமூக ஊடகங்களில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்