தமிழகத்தில் பருவ மழை பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது

பட மூலாதாரம், Getty Images
வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் அதிகமான பாதிப்பை சந்தித்தது. பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது, விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறையில் இதுவரை இல்லாத கனமழை
மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இதனை அடுத்து தற்போது பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் கிட்டத்தட்ட இருபது ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையையும் சேர்த்து ஒரு லட்சம் ஏக்கர் அளவில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்படுகிறது.
குறிப்பாக மயிலாடுதுறை மாப்படுகை, அருண்மொழித்தேவன், நீடூர், மணலூர் ,வில்லியநல்லூர் , பாண்டூர் , மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ந்து வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் வழிந்தோடி விளைநிலத்தில் கலந்து வருவதால் நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி அழுகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வாய்க்கால்கள் முறையாக தூர்வாராமல் விட்டதால் பல்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு தற்போது தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதாகவும் , உடனடியாக வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் இரு தினங்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கக் கூடிய நிலையில் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகப்படியாக சீர்காழியில் 436 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 250.15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

வரலாறு காணாத அதீத கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி நகர் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதுபோல பல்வேறு கிராமப் பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
அதனை எடுத்து மயிலாடுதுறை ஒன்றியம் அருள்மொழித்தேவன், அருவாபடி, கீழ மருதநல்லூர், ஆனதாண்டாபுரம். சேத்தூர், பொன்வாசநல்லூர், பட்டவர்த்தி. புலவனூர், உள்ளிட்ட சுமார் 2500 ஏக்கர் சம்பா சாகுபடி விலை நிலங்கள் கடந்த 2 தினங்களாக பெய்த கன மழையால் மூழ்கி சேதமடைந்துள்ளது. 15000 குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.
257 கிராமங்கள் மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 15000 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது இதனால் 58 முகாம்கள் அமைக்கப்பட்டு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மழையில் 189 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மாவட்டத்தில் பயிரிடப்பட்ட ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 850 ஏக்கரில் 87 ஆயிரத்து 500 ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. பத்து துணை மின் நிலையங்கள் சேதமடைந்தும், 2260 மின்மாற்றிகள் 200 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.
இதனால் திருச்சி தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 354 மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்தப் பகுதிகளில் விட்டாரு, உப்பனாறு, அய்யாவினாறு, மற்றும் வடிகால் வாய்க்கால் கன்னி வாய்க்கால் போன்றவற்றை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சரிவரத் தூர் வரப்படாததால் பயிர்கள் அனைத்தும் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் வடிகாலில் சென்றால்தான் மீதமுள்ள பயிர்கள் அழுகி விணாகமல் தப்பிக்கும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனாலும் வருகிற 16 முதல் மழை திரும்ப தொடரும் என அரசு அறிவித்ததால் விவசாயிகள் பெறும் கவலை கொண்டுள்ளனர். சில பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்தது.

வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு
இந்த நிலையில் சீர்காழியின் எருக்கூரை அருகே ராமு-சங்கீதா தம்பதியரின் மகள் அச்சுதா, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, வாய்க்காலில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கதவணை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை அடுத்து மீட்கப்பட்ட குழந்தையை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு வந்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சிதம்பரம் சுற்றியுள்ள கிராமங்களில் பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதிலும் சிதம்பரம் சுற்றுவட்டார கிராமங்கள் பெரிதாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை, கடவாச்சேரி, பெராம்பட்டு, தெற்கு பிச்சாவரம் உள்ளிட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் அதிக சேதத்தை ஏற்படுத்தியது
பருவ மழையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், திருநாரையூர், எடையார். விநத்தம். சம்பரானபுத்தூர், வல்லம்படுகை உள்ளிட்ட 10 கிராமங்களில் நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணியில் முழ்கியுள்ளது.
இதனிடையே கனமழையால் சீர்காழியில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மெய்ய நாதன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, விவசாய இயக்குனர் சுப்பையா, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டடு ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் பெற்று தருவதாக சட்டமன்ற பேரவை உறுப்பினர் ராஜகுமார் வாக்குறுதி அளித்தார் .

மின் விநியோகம் சீர் செய்யப்படுகிறது - மின்துறை அமைச்சர்
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்,
"பருவமழையினால் மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் மின்விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் 36 மணி நேரத்தில் சரி செய்து சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நீர்சூழ்ந்த பகுதியில் உள்ள மின்மாற்றிகள் நீர் வடிந்த பிறகு தான் சரி செய்ய முடியும்," என செந்தில் பாலாஜி தெரிவித்தார்
தமிழகத்தில் மயிலாடுதுறை பகுதிகளில் பாதிப்பு அதிகம் - முதல்வர்
இந்நிலையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்ட முதல்வர், பல்வேறு பகுதிகளில் முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், “மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ற வகையில் விளை நிலங்கள் பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்," என தெரிவித்தார்.
"பேரிடர் பாதித்த ஒன்றியங்களாக அறிவிக்க கோரிக்கை"
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை பாதிப்பு ஏற்படுள்ளதாக தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் இளங்கீரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"பருவ மழையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், திருநாரையூர், எடையார். விநத்தம். சம்பரானபுத்தூர், வல்லம்படுகை உள்ளிட்ட 10 கிராமங்களில் நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணியில் முழ்கியுள்ளது.
அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீரில் பயர்கள் மூழ்கியது மற்றும் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளும் மூழ்கியது. இறந்துபோன கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மீதி இருக்கும் ஆடு. மாடுகளுக்கு உரிய மருத்துவ வசதி செய்ய வேண்டும்," என்றார் அவர்.
"அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் இந்த மாத மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு ஒன்றியங்களை பேரிடர் பாதித்த ஒன்றியங்களாக அறிவிக்க வேண்டும். மழை பாதிப்பு தொடர்பாக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாலும், அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்," என்று இளக்கீரன் தெரிவித்துள்ளார்.




















