மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி - ஷாகி ஈத்கா மசூதி இடத்தை அளக்க நீதிமன்றம் உத்தரவு

மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி மற்றும் ஷாகி ஈத்கா மசூதி அமைந்துள்ள சர்ச்சைக்குரிய இடத்தை அளவீடு செய்ய வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றம் ஒன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்து சேனா என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது மதுராவில் உள்ள சீனியர் டிவிஷன் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்குடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ள அறிவிக்கையில் நீதிமன்ற உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நில அளவீடு முடிக்கப்பட்டு அளவீடு முடிக்கப்பட்டு ஜனவரி 20ஆம் தேதி இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் ஞானவாபி மசூதி ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.
ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக இந்து தரப்பைச் சேர்ந்த ஐந்து பெண்கள் வழக்கு தொடுத்ததுடன், ஆண்டு முழுவதும் ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடம் ஒரு காலத்தில் இந்து கோயிலாக இருந்தது என்றும் முகலாய பேரரசர் ஔரங்கசீப் அதை இடித்து விட்டு அந்த இடத்தில் மசூதியைக் கட்டினார் என்றும் அந்தப் பெண்கள் தங்களது மனுவில் கூறியிருந்தனர்.
ஞானவாபி மசூதிக்குள் நடத்தப்பட்ட ஆய்வில் சிவலிங்கம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
குளத்துக்குள் இருப்பது சிவலிங்கம் அல்ல என்றும் செயற்கை நீரூற்று அமைப்பு (ஃபவுண்டைன்) என்றும் ஞானவாபி மசூதி நிர்வாகம் கூறியுள்ளது. அக்குளம் மசூதிக்கு வருபவர்கள் தொழுகைக்கு முன் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான குளம் என்று மசூதி தரப்பு தெரிவிக்கிறது.
ஞானவாபி மசூதியில் 'சிவலிங்கம்' கண்டறியப்பட்ட இடத்தை பாதுகாக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதே சமயம் அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளது.

இந்து கோவில் இடிக்கப்பட்டதாக மனு
ஞானவாபி மசூதி போலவே ஷாஹி ஈத்கா மசூதி இருந்த இடத்தில் இந்து கோவில் இருந்தது என்று இந்து சேனாவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே 9ஆம் தேதி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா மற்றும் துணைத் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் ஆகிய இருவரும் இதே போல கூறி மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் இருவருமே டெல்லியை சேர்ந்தவர்கள். இந்து சேனா அமைப்பினர் தொடர்ந்து வழக்கில் கிருஷ்ண ஜென்ம பூமி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தில் இருந்த 'கட்ரா கேசவ் தேவ்' கோவிலை 1669-70 காலகட்டத்தில் இடித்து விட்டு முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப் ஷாஹி ஈத்கா மசூதியை கட்டியிருந்ததாக தங்கள் மனுவில் கூறியுள்ளனர். இத்துடன் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஸ்தன் சேவா சங்கம் மற்றும் ஷாஹி ஈத்கா மசூதி தரப்பினர் இடையே 1968 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். இதன் அடிப்படையில் நீதிபதி சோனிகா வர்மா எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























