அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக கூறும் சிஜேபி - போராட்டத்தை முடிக்க ஜே.பி. நட்டா கோரிக்கை

பட மூலாதாரம், @JPNadda
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்கான அழைப்புக்கு மத்தியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி), தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகக் கூறியுள்ளது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தாம் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்ததாகவும், தங்களது கோரிக்கைகள் குறித்து உரிய மட்டத்தில் பேசுவதாக அவர் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
23 நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்த சோனம் வாங்சுக்கை, ஜூலை 18 சனிக்கிழமை டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரில் இருந்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.

பட மூலாதாரம், @SauravDassss
ஜே.பி. நட்டாவுடன் என்ன பேசப்பட்டது?
''அஷுதோஷ் ரங்காவும் (சிஜேபியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர்) நானும் ஜே.பி. நட்டாவை சந்தித்தோம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக ராஜினாமா செய்யச் செய்வது அல்லது பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் அவரிடம் தெரிவிக்கப்பட்டன." என சௌரவ் தாஸ் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''இந்த விவகாரத்தை உரிய மட்டத்தில் எடுத்துச் சென்று விவாதிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். இருப்பினும், இதுவரை எந்த உறுதியான வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அமைதியான போராட்டம் தொடரும். "என்றும் தெரிவித்துள்ளார்.
"ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அமைச்சரும் எங்களுக்கு உறுதியளித்துள்ளார். இருப்பினும், காவல்துறையின் தலையீடு நிறுத்தப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை." என்று சௌரவ் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தங்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சௌரவ் தாஸ் ஜே.பி. நட்டாவிடம் வழங்கியதாகக் கூறப்படும் கடிதத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர் மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
நீட் 2026 வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் போன்றவற்றை இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், ANI
இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
"இன்று காலை, போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவு முதன்முறையாக வந்தது. அதன்பிறகு காலை 11.50 மணி முதல் எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது" என அந்த பதிவில் ஜே.பி. நட்டா குறிப்பிட்டுள்ளார்.
"இந்தச் சந்திப்பு சுமுகமான சூழலில் நடைபெற்றது. அவர்களின் பிரதிநிதிகள் குழுவுடன் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. பிற்பகல் 4 மணி அளவில் அவர்கள் எனக்கு எழுத்துப்பூர்வமான கோரிக்கை மனுவையும் வழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களது தர்ணா போராட்டத்தை முடித்துக்கொண்டு, இயல்பு நிலையை மீட்டெடுக்க நிர்வாகத்துக்கு ஒத்துழைக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்." என்றும் ஜே.பி. நட்டா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திங்கள்கிழமை காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவும், சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோவும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர்.
திப்கே மற்றும் கீதாஞ்சலி தலைமையிலான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறினர். எனினும், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களைத் தடுக்க முயன்றனர்.
போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்டி முன்னேற முயன்றபோது, காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட காணொளியில், ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் வீரர்கள் சிஜேபி ஆதரவாளர்களைக் கலைக்க தடியடி நடத்துவது காணப்படுகிறது.
இதற்கிடையில், ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































