இயக்குநர், நடிகர் டி.பி.கஜேந்திரன் காலமானார்; கல்லூரி தோழன் மறைவால் முதலமைச்சர் கலக்கம்

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 68.
அவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். திரையுலகில் பிசியான நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராக வலம் வந்த அவர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.
சில மாதங்களாகவே எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்து வந்த டி.பி.கஜேந்திரன் இன்று காலை காலமானார்.
நேற்று பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில், இன்று இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானது தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கல்லூரித் தோழர். டி.பி. கஜேந்திரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.
தனது கல்லூரித் தோழனான டி.பி.கஜேந்திரனின் மறைவு, தமக்கு அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். கலையுலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என டி.பி.கஜேந்திரன் பன்முகம் கொண்டவர். கே. பாலசந்தர், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கஜேந்திரன், 1988ஆம் ஆண்டு வீடு, மனைவி, மக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து, எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவன், பட்ஜெட் பத்மநாதன், சீனா தானா 007 உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர்.
இவர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'பந்தா பரமசிவம்' திரைப்படம் பாலிவுட்டில் `ஹவுஸ்ஃபுல் 2` என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
துவண்டு கிடந்த தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்டிக் கொடுத்த இயக்குநர்களின் பட்டியலில் கஜேந்திரனுக்கு முக்கிய இடம் உண்டு.

இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் டி.பி.கஜேந்திரன்.
விசுவிடம் உதவி இயக்குநராக இருந்தபோது 1985ஆம் ஆண்டு "சிதம்பர ரகசியம்" திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தின் மூலம் முதன்முதலாக அவர் திரையில் தோன்றினார். 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி ஏறக்குறைய அனைத்து முன்னணி நாயகர்களுடனும் அவர் நடித்துள்ளார். பம்மல் கே.சம்மந்தம், சீனா தானா 007, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
காலமான நடிகர் விவேக் நடிப்பில் வெளியான 'மகனே என் மருமகனே' படத்தை இயக்கியதுடன், தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் டி.பி.கஜேந்திரன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























