You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்: யார் பொறுப்பு? கேரளாவில் 6 ஆண்டுகளாக விடை தெரியாத மர்மம்
கேரளாவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்தது யார் என்ற கேள்வி கடந்த 6 ஆண்டுகளாக விடை தெரியாமல் நீடிக்கிறது. இதற்குக் காரணமான மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பெண் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
கே.கே.ஹர்ஷினா என்ற 31 வயதான அந்த பெண், தாங்க முடியாத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஸ்கேன் பரிசோதனை செய்த போதுதான், அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது.
பிபிசியிடம் பேசிய அவர், "5 ஆண்டுகளாக நான் எவ்வளவு வலியை அனுபவித்தேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார்.
3 குழந்தைகளின் தாயான ஹர்ஷினா, மூன்று முறையும் சிசேரியன் மூலமே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
கோழிக்கோடு அருகே தாமரசேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் தலா ஒரு குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார். 2017-ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாவது பிரசவத்திற்கான அறுவை சிகிச்சை அவருக்கு நடந்துள்ளது.
அதற்குப் பிறகே, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக ஹர்ஷினா கூறுகிறார்.
"இதுகுறித்து முறையிட்ட போது, மூன்றாவது முறையாக சிசேரியன் செய்து கொண்டதே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இதேபோன்ற பிரச்னைகளை மேலும் பல பெண்களுக்கு இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்" என்று ஹர்ஷினா தெரிவித்தார்.
அடுத்து வந்த ஆண்டுகளில், வயிற்று வலிக்கு தீர்வு தேடி பல மருத்துவர்களை அவர் நாடியுள்ளார். வயிற்று வலிக்கான காரணத்தை தேடும் முயற்சியில் அவரது மனம் மற்றும் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒருவழியாக, 2022-ம் ஆண்டு செப்டம்பரில், சிறுநீரக தொற்றாக இருக்கலாம் என்று கருதி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்ட போதுதான் அவரது வயிற்றுக்குள் உலோகம் ஒன்று இருப்பது தெரியவந்தது.
6.1 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் கொண்ட அந்த உலோகம், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தரிக்கோல் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. அதனை அப்புறப்படுத்த ஹர்ஷினா மேலும் ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டியதாயிற்று.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் ஹர்ஷினா புகார் அளிக்க, இதுதொடர்பாக, விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் தனியாக விசாரணை நடத்தியது.
இந்த 2 விசாரணைகளிலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
எங்களது மருத்துவ உபகரணங்கள் ஏதும் காணாமல் போகவில்லை என்று கூறிய கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஹர்ஷினா முதலிரு குழந்தைகளையுமே சிசேரியன் மூலம் பெற்றெடுத்திருப்பதை சுட்டிக்காட்டியது. கேரள சுகாதாரத்துறையின் விசாரணையும், நடந்த தவறுக்கு யார் பொறுப்பு என்பதை முடிவு செய்வதில் தோல்வியடைந்ததுவிட்டது.
கேரள அரசு தனியாக நடத்திய விசாரணையிலும், ஹர்ஷினா வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட கத்தரிக்கோல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு சிசேரியன் செய்த இரு மருத்துவமனைகளிலுமே மருத்துவ உபகரணங்கள் தொடர்பான ஆவணப் பதிவுகளும் இல்லை.
இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் பதிலைப் பெற பிபிசி முயன்றது. ஆனால், அவர் தரப்பில் இன்னும் பதில் தரப்படவில்லை.
தவறிழைத்தவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இவ்வார தொடக்கத்தில், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஹர்ஷினா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால், அது அவரது உடல்நிலையை பாதித்துவிடக் கூடும் என்று எடுத்துரைத்த உள்ளூர் எதிர்க்கட்சி பிரமுகர்கள், கடந்த வியாழக்கிழமையன்று உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிடுமாறு செய்தனர்.
ஹர்ஷினா தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டாலும் மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடர்கிறார்.
"எனக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்" என்கிறார் ஹர்ஷினா உறுதிபட.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்