You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் : இரண்டாண்டு போரில் முன்கள மருத்துவப் பணியாளர்கள் இழந்தவை என்னென்ன?
- எழுதியவர், ஆண்ட்ரூ ஹார்டிங்
- பதவி, பிபிசி நியூஸ் , கிழக்கு யுக்ரேன்
- பிரசுரிக்கப்பட்டது
மேஜர் ஓலே க்ராவ்சென்கோ அடக்கமுடியாத ஒரு விதமான ஆழமான புன்னகையை உதிர்த்தவாறே பேசினார்.
தனது சக்கர நாற்காலியில் ஒருபக்கம் தலையை சாய்த்தவாறு அமர்ந்துகொண்டு, வியப்பில் உள்ள மனிதரை போன்ற தோரணையில் “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று சொன்னார் அவர்.
யுக்ரேனில் நடந்து வரும் போர் இரண்டாமாண்டை எட்டியிருக்கும் நிலையில், இந்த நீண்ட போராட்டத்தில் தியாகமும், பொறுமையும் அவசியம் என்பதை, மக்கள் மற்றும் போர்வீரர்கள் புரிந்துக்கொண்டு இந்த பாதையில் பயணிப்பது ஏன் என்பதை க்ராவ்சென்கோவின் அதிர்ச்சியூட்டும் கதை மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
க்ராவ்சென்கோவுக்கு இப்போது 50 வயதாகிறது. ரஷ்யா யுக்ரேன் மீதான தாக்குதலை தொடங்கியதில் இருந்து அவரை நாங்கள் மூன்றாவது முறையாக சந்திக்கிறோம். 2022இல் டான்பாஸ் நகரத்தில் அவரை முதன் முதலில் சந்திக்கும்போது, அவரது தாடி ட்ரிம் செய்யப்பட்டும், பழுப்பு நிறத்திலும் இருந்தது. ஆனால், இப்போதோ மோசமாக சாம்பல் நிறத்தில் உள்ளது.
ஏப்ரல் 2022 இல் ஒரு வெப்பம் நிறைந்த நாளில் ராணுவ தளம் ஒன்றில் கதவை திறந்துக் கொண்டு வெளிய வந்த அவரை முதன் முதலில் சந்தித்தோம். வறட்டு புன்னகையோடு எங்களை எதிர்கொண்ட அவர், அந்த வட்டாரத்தில் இறுதியாக யுக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு எங்களை அழைத்து செல்ல முன்வந்தார்.
வேகமாக சீறிப்பாயும் அவரது கார், அதற்குள் இருந்த அவரின் தானியங்கி துப்பாக்கி மற்றும் திறந்துகிடந்த கார் ஜன்னல்களுக்கு நடுவில் ஊடுருவும் பீரங்கி குண்டுகளின் சத்தத்திற்கு மத்தியில் முன்களம் நோக்கி சென்றோம்.
“இதோ பாருங்கள், இது ரஷ்ய வெடிகுண்டால் ஏற்பட்ட பள்ளம்” என்று ஏதோ சுற்றுலா வழிகாட்டியை போல் அவர் விவரித்துக் கொண்டு வந்தார்.
57ஆவது படைப்பிரிவின் மருத்துவக் குழுக்களுக்குப் பொறுப்பாளரான க்ராவ்சென்கோ, ஒரு பழைய தொழிற்சாலையின் குண்டுவீச்சு இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்த பாதுகாப்பாக வெளியேற்றும் இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்,
பின்னர் மிகவும் எச்சரிக்கையாக இருந்த அதிகாரிகளைத் தாண்டி, முக்கிய ராணுவ மருத்துவமனைக்குள் அனுமதியின்றி நுழைய எங்களுக்கு உதவினார். அங்கு காயம்பட்ட டஜன் கணக்கான யுக்ரேனிய வீரர்கள் தங்கள் படுக்கைகளில் அமைதியாகக் படுத்துக் கிடந்தார்கள்.
"நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படும் நபர் - ஆனால் வழக்கத்திற்கு மாறானவர்," என்று க்ராவ்சென்கோ பாணி குறித்து, அவரது சக ஊழியர்களில் ஒருவர் எங்களிடம் சிரித்துக் கொண்டே கூறினார்.
க்ராவ்சென்கோ இதற்கு முன்னரே பல போர்களை பார்த்தவர். யுக்ரேனில் உள்ள ஒரு மருத்துவமனையை நிர்வகிப்பவராக பணியாற்றி அங்கிருந்து வெளியேறிய பிறகு, அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றினார் அவர். பின் ஆப்கானிஸ்தானில் சில ஆண்டுகள், சோமாலியா, காங்கோ, சூடான் என பல நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.
ஆனால், இது எதுவும் அவரை தற்போது நடந்து வரும் சண்டையின் தொடக்க காலத்தில் தயாராக வைத்திருக்கவில்லை.
“எங்கு பார்த்தாலும் ரத்தம், ரத்தம், ரத்தம்” என்றார் அவர். ரத்தக்கறை படிந்த ஸ்ட்ரெச்சர் படுக்கைக்கு அருகில் நாங்கள் நின்றுக் கொண்டிருந்தோம்.
ஆனால் போரின் ஆரம்ப நாட்களில் அவர் இன்னும் நம்பிக்கையுடன் காணப்பட்டார். யுக்ரேன் விரைவில் போரை வெல்ல முடியும் என்று அவர் நம்பினார்.
"யுக்ரேனிய வீரர்கள் வலிமையானவர்கள், ஏனென்றால் இது எங்கள் நிலம். இது என் நாடு. எங்களது மகள்களும், மகன்களும் இங்குதான் இருக்கிறார்கள். என் இதயம் இங்கு தான் உள்ளது," என்று முதுகை நிமிர்த்தியவாறே கூறினார் அவர்.
“ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் அனைத்து ரஷ்யர்களையும் நாங்கள் சுட்டு வீழ்த்திவிடுவோம் என்று நான் நம்புகிறேன். எதிரிகளோடு சிறந்த முறையில் சண்டையிடுவோம்” என்றார்.
நாங்கள் அவரிடம் இருந்து விடைபெற்றுவிட்டு. அன்று பிற்பகலில் லைசிசான்ஸ்கில் இருந்து வெளியேறினோம்.
அதற்கு பின்பு சில வாரங்களில் அந்த நகரம் படைகளால் கைப்பற்றப்பட்டது.
நாங்கள் மீண்டும் கிராவ்செங்கோவை பார்க்க செல்வதற்கு ஒரு வருடம் ஆனது. அந்த சமயத்தில் தென்மேற்கில் 50 கிமீ (31 மைல்) தொலைவில் உள்ள மற்றொரு முன்னணி நகரமான பாக்முட்டின் புறநகரில் இருந்தோம்.
“இன்னும் உயிரோடு இருக்கிறேன்” என்று அவர் கூறியது ஏதோ வாழ்த்து செய்தி போல இருந்தது. இப்படி மற்ற வீரர்களும் சொல்வதை நான் கேட்க தொடங்கியிருந்தேன்.
ஆனால் அவரது சிரிப்பு வலுக்கட்டாயமாக வந்தது போல் இருந்தது. மேலும் க்ராவ்சென்கோவின் கண்களுக்குக் கீழே சோர்வால் ஏற்பட்ட கறைகள் காணப்பட்டன.
"இது கடினமாக இருந்தது. நான் நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை," என்று கூறிய அவர், அவரது குழு தற்காலிக கள மருத்துவமனையாக மாற்றியிருந்த சிறிய கிடங்கை எனக்கு சுற்றிக் காட்டினார்.
‘என்னுடைய விதி என்னவென்று தெரியவில்லை’
ஜூலை 2023 இல் அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், தனது குறுகிய கால கிளர்ச்சியை தொடங்குவதற்கு முந்தைய நாள் அது.
அதற்கு சில வாரங்களுக்கு முன்பே பக்முட் ஏற்கனவே ரஷ்யர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. ஆனால் ஆரம்பகட்டத்தில் யுக்ரேனின் மிகவும் துல்லியமான எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அது வெற்றி பெரும் என்ற வலுவான நம்பிக்கைகளும் இருந்தன.
ஆனாலும், கண்ணிவெடிகளால் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகள் மற்றும் இதர காரணங்களால் பக்முட்டில் நிலவிய சூழல் ஏற்கனவே அச்சுறுத்துவதாக இருந்தது.
தலைக்கு மேல் சுற்றிவரும் ரஷ்ய ட்ரோன்களில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு மரத்திற்கடியில் நாங்கள் ஒளிந்துக் கொண்டோம். உள்ளே வந்த இரண்டு குண்டுகள் எங்களை பாதுகாப்பு தேடி ஓட செய்தது. குண்டுகளில் ஒன்று வெடிக்கவில்லை. கிராவ்செங்கோ அதை சிறிய புன்னகையுடன் கடந்து விட்டார்.
ஆனாலும், அவர் குழப்பமாக இருந்ததை பார்க்க முடிந்தது.
“மக்கள் மிகவும் சோர்ந்து விட்டனர். இது மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது” என்று கூறினார் அவர்.
பின்னர், எதிர்பாராத விதமாக, க்ராவ்சென்கோ தனது சொந்த எதிர்காலத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். இது பல மாதங்களாக அபாயத்தில் வாழ்க்கையை கடத்தி வரும் நிலையில், பலரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்.
“நான் கடவுள் மற்றும் எனது விதியை பற்றி சிந்திக்கிறேன். எனது விதி என்னவென்று எனக்கு தெரியாது” என்றார் அவர். போருக்கு பின் தான் என்னவாக இருப்பேன் என்பதை சிலநேரம் நினைத்து பார்ப்பேன் என்பதை விவரித்துக் கொண்டிருந்தார்.
“அதுவரை வாழ்வேனா என்பது தெரியவில்லை. நான் என்னுடைய பணிகளை செய்கிறேன், வாழ்கிறேன் அவ்வளவுதான். அதை சரியாக செய்ய வேண்டும். விதி குறித்தெல்லாம் எனக்கு தெரியாது” என்றார்.
57-ஆவது படைப்பிரிவில் உள்ள தனது குழு போர் மருத்துவத்தில் எவ்வளவு அனுபவத்தைப் பெற்றுள்ளது என்பதில் கிராவ்சென்கோ பெருமைப்பட்டார். மேலும் அந்த அறிவை மற்ற ராணுவங்களுடன் பகிர்ந்து கொள்வது பற்றி அவர் பேசினார். பலவித ஏவுகணைகளால் துண்டாக்கப்பட்ட சதையுடன் வரும் படையினருக்கு அவர் வழங்கிய சிகிச்சை குறித்த வீடியோக்கள் அவரது போன் முழுவதும் இருந்தன.
ஆனால், பின்னர் எல்லாமே மாறி விட்டது.
அக்டோபர் 2024இல் ஒரு மாலைப்பொழுதில், மேற்கே இஸியம் அருகே ஒரு கட்டடத்தில் க்ராவ்சென்கோவும் அவரது குழுவும் மருத்துவப்பணியில் ஈடுபட்டிருந்தனர். பலத்த காயம்பட்ட ஒரு வீரருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர், ஒரு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயாராக ஒரு வாகனத்தில் அவரை ஏற்றினர். க்ராவ்சென்கோ உள்ளிட்ட மூன்று பேர் சில உபகரணங்களை சேகரிப்பதற்காக மீண்டும் அந்த கட்டிடத்தின் உள்ளே சென்றனர்.
சரியாக இரவு 11.40 மணியளவில் ரஷ்ய ஏவுகணை ஒன்று அந்த கட்டடத்தை தாக்கியது.
"ஸ்விட்லானாவுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன, யூலியாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. விளாடிஸ்லாவ் திருமணம் ஆகாதவர். அவருக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. அவருக்கு வயது 32," என்று இந்த வாரம் நாங்கள் மூன்றாவது முறையாக சந்தித்தபோது க்ராவ்சென்கோ எங்களிடம் கூறினார். இந்த மூவரும் அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்.
அந்த சம்பவம் குறித்தும், அவரது மூன்று சகாக்களின் இறப்பு குறித்தும் அவரிடம் கேட்ட நொடியில் அவரின் முகம் கடுமையானதாக மாறிப்போனது.
தனது கரகரப்பான குரலில், “அது மிகவும் பாரமானது. என்னை கஷ்டப்படுத்தும் ஒன்று” என்றார் அவர்.
அதே விபத்தில் தான் இவரது கால் முட்டியும் உடைந்தது. உடனே க்ராவ்சென்கோ டினிப்ரோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், பின்னர் கீயவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதற்கு பிறகு அவரை டினிப்ரோ நதியில் உள்ள அவரது சொந்த ஊரான கிரெமென்சுக்கிற்கு அழைத்து வந்துவிட்டனர்.
சில பதக்கங்களையும், ஒரு துப்பாக்கியையும் காட்டி “அதிபர் ஜெலென்ஸ்கி இவற்றை தனக்கு வழங்கியதாக” தெரிவித்தார் அவர். க்ராவ்சென்கோ தற்போது சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். ஆனாலும், ஊன்றுகோல்களைப் பயன்படுத்தி ஒன்று அல்லது இரண்டு அடிகள் எழுந்து நடந்து, வழக்கமான பிசியோதெரபியை செய்து வருகிறார்.
அவருக்கு காயம்பட்டதை தொடர்ந்து, ராணுவத்தில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் அவரது வழித்தோன்றலான பல் மருத்துவர் ஒருவருடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறார்.
"லியோனிடோவிச் ஒரு நல்ல மனிதர் மற்றும் நல்ல துணை" என்று கூறினார் க்ராவ்சென்கோ.
‘எப்போதும் அகலாத பயம்’
இந்த குழு சமீபத்தில் குப்யான்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள ஒரு புதிய தளத்தை அடைந்துள்ளது. ஆனால், ரஷ்ய படைகளால் கடுமையாக குறிவைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கோடைகால எதிர்த்தாக்குதல் சிறிய வெற்றியை பெற்றுள்ளது மற்றும் அவதிவ்காவில் இருந்து யுக்ரேனிய படை வெளியேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களும் தீர்ந்துக்கொண்டே வருகிறது. மேலும் மேற்குலகின் கூடுதல் உதவி இல்லாமல் ரஷ்யா வென்று விடும் என்று அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
"எங்கு பார்த்தாலும் ட்ரோன்களும், குண்டுகளும் காணப்படுகின்றன.இது மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. ஆனாலும் நாங்கள் இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். தற்போது இதற்கு பழகிவிட்டோம். இருப்பினும் அந்த பயம் ஒருபோதும் போகாது, ஆனால் எப்படியாவது நீங்கள் அதற்கு பழகிக்கொள்ள வேண்டும்" என்று க்ராவ்சென்கோ கூறினார்.
டினிப்ரோ ஆற்றின் அருகே உள்ள அவரது வீட்டில், ராணுவம் இல்லாத தனது புதிய வாழ்க்கையோடு கிராவ்சென்கோ போராடிக் கொண்டிருக்கிறார்.
“நான் மீண்டும் எனது முன்னணி களப்பணிக்கு செல்ல விரும்புகிறேன். ஆனால், என்னால் முடியாது. நான் எனது பணியை நன்றாகவே செய்தேன். காயமடைந்த பிறகு எனது நாட்டிற்காக புதிய திட்டம் ஒன்றை தொடங்க நான் ஆசைப்பட்டேன். எனது கனவான ராணுவ மருத்துவமனை. அதை எப்படி செய்வது என்று எனக்கு தெரியும்,” என்றார் அவர்.
பல உக்ரேனியர்களைப் போலவே, ரஷ்யாவிற்கு எதிரான போரை ஆதரிப்பதில் மேற்குலக நாடுகள் ஆர்வத்தை இழந்து வருகிறதோ என்று கிராவ்சென்கோவும் கவலைப்படுகிறார். "இது ஒரு நீண்ட போராக இருக்கும். உக்ரைன் ஐரோப்பாவின் முன்னணியில் உள்ளது. நாம் தோற்றால், அடுத்தது போலந்து மற்றும் ஜெர்மனி மற்றும் பிற நாடுகளாக இருக்கலாம்," என்று அவர் சோகமாக கூறினார்.
க்ராவ்சென்கோவை ராணுவத்தில் அழைக்க பயன்படுத்தும் பெயர் "ஆப்கான்", இது வெளிநாட்டில் அவர் பணிபுரிந்ததைக் குறிப்பிடுகிறது. ஆனால் அவரது முழங்கால் குணமடைந்தால், இது விரைவில் மாறும் என்று அவர் நம்புகிறார்.
“இன்னும் ஒரே மாதத்தில், நான் காற்றை போல ஓடுவேன். அதற்கு பிறகு என்னை நீங்கள் ‘காற்று’ என்றே அழைப்பீர்கள்” என்று சிரிப்பது போன்ற ஒரு முகபாவணையில் அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)