டிராவை நோக்கி செல்கிறதா இந்தியா- ஆஸி இடையேயான 4வது டெஸ்ட்?

பிரசுரிக்கப்பட்டது

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளும் முதல் மூன்று நாட்களில் முடிவுக்கு வந்த நிலையில், இந்த ஆட்டம் 4வது நாளுக்கு சென்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா களமிறங்கினார்கள். சிறப்பான கூட்டணியை இருவரும் அமைத்திருந்தாலும், அஸ்வின் வீசிய 15வது ஓவரில் லாங் ஷாட் ஆட முயன்ற டிராவிஸ், ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 32 ரன்களில் அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷேன் 3 ரன்களிலும் ஆஸி அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்களிலும் பீட்டர் ஹேண்ட்ஸ்கேம்ப் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.

ஒரு பக்கம் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தாலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்தார். கேமரூன் கிரீன், கவாஜாவுடன் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினார்கள். கேமரூன் கிரீன் பவுண்டரிகளுக்கு பந்தைத் தட்டிவிட்டுக் கொண்டே இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய கவாஜா வீசப்பட்ட பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு சதம் அடித்தார்.

அசராமல் விளாசிய கவாஜா

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி 255 ரன்களைக் குவித்திருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சில், ஷமி 2 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது, தனது அதிரடியைத் தொடர்ந்து காட்டிய கிரீன் அரை சதம் அடித்தார். உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் கூட்டணியை உடைக்க முடியாமல் நீண்டநேரத்திற்கு இந்திய அணி திணறியது. ஆனால், மதிய இடைவேளைக்குப் பிறகு பந்துவீசக் களமிறங்கிய அஸ்வின் 114 ரன்களை எடுத்திருந்த கேமரூன் கிரீனை அவுட்டாக்கினார்.

அதே ஓவரின் கடைசி பந்தில் அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த அலெக்ஸ் கேரியையும் பூஜ்ஜிய ரன்களில் அஸ்வின் வெளியேற்றினார். கவாஜாவும் கிரீனும் இணைந்து 280 ரன்களை எடுத்து ஆஸி. அணியின் முதல் இன்னிங்சுக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தார்கள்.

முதல் நாளைப் போலவே விக்கெட்டுகள் சரிந்தாலும், அசராமல் நின்ற உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் 180 ரன்களை எடுத்திருந்தபோது, அக்ஷர் பட்டேலின் சுழற்பந்தில் சிக்கி வெளியேறினார்.

இறுதியாக 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸி அணி, 480 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, அக்ஷர் பட்டேல் ஆகியோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்கள்.

பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டிய சுப்மன் – புஜாரா ஜோடி

இரண்டாவது நாள் இறுதியில் இந்தியா 36 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது. ரோஹித் ஷர்மா 17 ரன்களையும் சுப்மன் கில் 18 ரன்களையும் எடுத்திருந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கி மூன்றாவது ஓவரில் இந்த நாளுக்கான முதல் பவுண்டரியை ஷுப்மன் கில் அடித்தார்.

ரோஹித், சுப்மன் கூட்டணி பவுண்டரிக்கு பந்துகளை ஃபோர், சிக்ஸ் என விளாசிக் கொண்டிருந்தது. அதை உடைக்கும் ஆஸ்திரேலியாவின் முயற்சி 21வது ஓவரில் பலன் கிடைத்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் ஷர்மா 35 ரன்களுக்கு அவுட்டானார். இந்தியா 21வது ஓவர் முடிவில் 74 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

மேத்யூ குன்னேமன் பந்துவீச்சில் இந்திய கேப்டனின் பேட்டிங் முடிவுக்கு வந்தது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, சுப்மன் கில்லுடன் கூட்டணி சேர்ந்தார். ஆஸியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நேதன் லயன், குன்னேமன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை அவர்கள் இருவரும் இயன்ற அளவுக்குச் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.

27வது ஓவரில் புஜாரா ஆஸிக்கு எதிராகத் தனது 2000வது ரன்னை பூர்த்தி செய்தார். 29வது ஓவரில் சுப்மன் கில் தனது 5வது டெஸ்ட் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்தியா 29 ஓவர்களில் 100 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்டான பிறகு இந்திய அணியின் பேட்டிங்கில் எந்தவித தடுமாற்றமும் இல்லை என்பதை சுப்மன் கில், புஜாரா கூட்டணி உறுதி செய்தது. ஆஸி அணிக்கு சவாலாக அவர்களுடைய பேட்டிங் இருந்தது. ரோஹித், சுப்மன் கூட்டணி 74 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் திறமையாக பேட்டிங் செய்தார்.

மதிய இடைவேளைக்குப் பிறகு 221 பந்துகளில் சுப்மன் கில், புஜாரா கூட்டணி 100 ரன்களைக் கடந்திருந்தது. சுப்மன் கில் 194 பந்துகளில் 100 ரன்களை கடந்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். புஜாரா 121 பந்துகளில் 42 ரன்களை எடுத்து வெளியேறியதைத் தொடர்ந்து விராத் கோலி களமிறங்கினார்.

விராத் கோலி, சுப்மன் கில் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில், தனக்கு ஏற்றவாறு அமைந்த பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவும் விராத் கோலி தவறவில்லை. அணியின் ஸ்கோர் 245 ஆக இருந்தபோது எல்பிடபிள்யு முறையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அப்போது அவர் 128 ரன்களை எடுத்திருந்தார்.

கில்லை தொடர்ந்து ரவிந்திர ஜடேஜா களமிறங்கினார்.மேற்கொண்டு விக்கெட்களை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் விராத் கோலி- ரவிந்திர ஜடேஜா ஜோடி தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர். 81.5 ஓவரில் மர்பி வீசிய பந்தை ஜடேஜா ஏறி வந்து அடிக்க முயன்றபோது அவரது காலில் பந்து பட்டது. ஆஸ்திரேலிய தரப்பில் எல்பிடபிள்யூ கோரப்பட்டது. எனினும் அம்பயர் ஆவுட் கொடுக்காதையடுத்து அவர்கள் ரிவ்யூ செய்தனர். எனினும், பந்து காலில் படுவதற்கு முன்பாக பேட்டில் உரசியது மூன்றாவது அம்பயர் முடிவில் தெரியவந்தது. அப்போது அணியில் ஸ்கோர் 250 ஆக இருந்தது.

அரை சதம் கடந்த விராத் கோலி

இதற்கிடையே, 92ஆவது ஓவரின் 2வது பந்தில் விராத் கோலி 2 ரன்களை எடுத்து 50 ரன்களை கடந்தார். கடந்த 16 இன்னிங்கிஸில் அவரது முதல் அரை சதம் இதுவாகும். விராத் கோலி- ஜடேஜா இணையை பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் அது பலனளிக்கவில்லை. 3வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவை விட 191 ரன்கள் பின்தங்கியுள்ளது. விராத் கோலி 59 ரன்களுடனும் ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ளது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸே முடியாத நிலையில் இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: