'கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை' - உச்ச நீதிமன்ற உத்தரவு முழு விவரம்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது.

"இந்தப் பிரச்னைகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன. தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த சம்பவம் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானது. எனவே, இடைக்கால நடவடிக்கையாக விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம்." என்று நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது.

3 பேர் அடங்கிய குழு கண்காணிக்கும்

சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி, மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள்.

சென்னை உயர் நீதிமன்ற செயல்பாட்டில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி

அரசியல் பேரணிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மட்டுமே கோரும் மனுவில், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளின் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் ரிட் மனு, குற்றவியல் ரிட் மனுவாக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது. வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் மேற்படி மனுவை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் அதிகார வரம்பிற்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதியின் எந்த குறிப்பிட்ட அங்கீகாரமும் இல்லாமல், சென்னை உயர் நீதிமன்றம் (சென்னை அமர்வு) ஏற்றுக்கொண்டிருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சென்னை அமர்வு அந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

தமிழக அரசுக்கு 8 வாரம் அவகாசம்

தவெக மற்றும் பிற தரப்பினர் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, சிபிஐ விசாரணை கோரும் இரண்டு மனுக்களிலும் மனுதாரர்கள் தங்களுக்குத் தெரியாமல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக அரசு சார்பில் வாதாடிய ஏ.எம். சிங்வி மற்றும் பி. வில்சன் ஆகியோர் அமர்விடம் தெரிவித்தனர். இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய எட்டு வார கால அவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மனுக்கள் விவரம்

கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை மட்டுமே கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த மனு எதிர்த்தது. தவெக மற்றும் விஜய் மீது உயர் நீதிமன்றம் தெரிவித்த பாதகமான கருத்துகளுக்கும் அந்த மனுவில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சி கோரியது.

விசாரணையை சிபிஐக்கு மாற்ற மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அக்டோபர் 3 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு மற்ற மனுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

விசாரணையின் போது, ​​உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த விதம் குறித்து வாய்மொழியாக உச்சநீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. அரசியல் பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. கரூர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் அதிகார வரம்பிற்குள் வரும்போது சென்னையில் உள்ள முதன்மை அமர்வு எவ்வாறு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டது.

அதே இடத்தில் பாதை மிகவும் குறுகலானது என்று கூறி மற்றொரு கட்சியான அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 30-40 உடல்களின் பிரேத பரிசோதனை நள்ளிரவில் எப்படி செய்யப்பட்டது? அதிகாலை 4 மணிக்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கரூரில் நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் இரவு சுமார் 7 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்தது.

('லைவ் லா' இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு