இந்தியாவிற்கு வந்த ஆப்ரிக்க சிவிங்கிப்புலிகளின் 'மர்ம' மரணத்திற்கு என்ன காரணம்?

சிவங்கிப்புலிகள், இந்தியா, விலங்குகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

மார்ச் 27 ஆம் தேதி இந்தியாவின் குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில் சிறுநீரக செயலிழப்பால் சாஷா என்ற சிவிங்கிப்புலி இறந்தது.

கடந்த செப்டம்பரில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட எட்டு சிவிங்கிப்புலிகளில் சாஷாவும் ஒன்று.

  • 1952 இல் இந்தியாவில் சிவிங்கிப்புலி இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
  • அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோதியின் பிறந்தநாளன்று நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்பட்டன.
  • சில மாதங்களுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்பட்டன.
  • சில வாரங்களுக்கு முன் ஒரு பெண் சிவிங்கிப் புலி நான்கு ஆரோக்கியமான குட்டிகளை ஈன்றது.
  • மார்ச் 27 ஆம் தேதி சாஷா மற்றும் ஏப்ரல் 22 அன்று உதய் என இரண்டு சிவிங்கிப்புலிகள் காலமாயின.
  • இந்த வகையில் தற்போது குனோ தேசிய பூங்காவில் மொத்தம் 22 சிவிங்கிப் புலிகள் உள்ளன.
சிவங்கிப்புலிகள், இந்தியா, விலங்குகள்

பட மூலாதாரம், ADRIAN TORDIFFE

அது குனோவுக்கு வந்ததிலிருந்து அதன் உடல்நிலை மோசமாகவே இருந்தது. அதற்கு நமீபியாவிலேயே சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சாஷாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால்தான் அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நீண்ட காலம் வைக்கப்பட்டது.

ஆனால் தற்போது மற்றொரு மரணம் நடந்துள்ளது, இது சிவிங்கிப் புலிகளின் இறப்புக்கு என்ன காரணம் என்று சிந்திக்க வைக்கிறது.

இந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி குனோ தேசிய பூங்காவில் மற்றொரு சிவிங்கிப்புலியான உதய் மிகவும் மர்மமான முறையில் இறந்தது. நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள் வந்த பிறகு, தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப்புலிகள் குடியேற்றத்திற்காக குனோவிற்கு கொண்டு வரப்பட்டன. ஆறு வயது உதய் அவற்றில் ஒன்று.

"நாங்கள் தினமும் சிவிங்கிப்புலிகளை பரிசோதித்து வருகிறோம். சனிக்கிழமையன்று எங்கள் குழுவினர் உதய் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதை கண்டறிந்தனர். ஞாயிற்றுக்கிழமை, குழு ஆய்வுக்கு சென்றபோது உதய் பலவீனமாக இருப்பதுபோலத்தோன்றியது.

தலையை குனிந்தபடி நடந்துகொண்டிருந்தது. அதற்கு மயக்க ஊசி கொடுத்து சிகிச்சைக்காக கொண்டு வந்தோம். ஆனால் இதன் போது சிறுத்தை இறந்துவிட்டது,” என்று மத்திய பிரதேச தலைமை வனவிலங்கு காப்பாளர் ஜே.எஸ்.சௌஹான் கூறினார்.

சிவங்கிப்புலிகள், இந்தியா, விலங்குகள்

பட மூலாதாரம், ADRIAN TORDIFFE

"முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகிறது. முழுமையான அறிக்கை இனிமேல்தான் வரும். அதில் ரத்தப் பரிசோதனை அறிக்கை, எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லும்,"என்று அவர் குறிப்பிட்டார்.

"விஞ்ஞானிகளாகிய நாங்கள் விலங்கின் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்கும் மரண பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். ஏதேனும் உடல்நலப் பிரச்னை இருந்தால் அதில் தெரியவரும்.

உடல்நலப் பிரச்னை ஏதேனும் வெளிப்பட்டால், எதிர்காலத்தில் இறப்புகள் ஏற்படாத வகையில் அதற்கு தீர்வு கண்டறியப்படும்,” என்று திங்களன்று நமீபியாவில் இருந்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், சீட்டா பாதுகாப்பு நிதியத்தின் இயக்குனர் லாரி மார்க்கர், கூறினார்.

சிவிங்கிப்புலிகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு வரலாறு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிவிங்கிப்புலிகளின் இறப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சிறுநீரக செயலிழப்பு என்பதை விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசின் தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையம், 1967-2014 க்கு இடையில், காடுகளில் வாழாத சிறைபிடிக்கப்பட்ட 243 சிவிங்கிப்புலிகள் மீது ஆராய்ச்சி செய்தது.

எமிலி மிட்செல் தலைமையில் நடத்தப்பட்ட இந்த தீவிர ஆராய்ச்சியில், "பாதுகாக்கப்பட்ட சூழ்நிலைகளில் வாழும் சில சிவிங்கிப்புலிகள் சிறு வயதிலிருந்தே சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளைக் காட்டுகின்றன. அது பின்னர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்று கண்டறியப்பட்டது.

சிறைபிடிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வாழும் இவை அதிகப்படியான மன அழுத்தத்தை எடுத்துக்கொள்கின்றன. இது அவற்றின் சிறுநீரகங்களை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்தது.

சிவிங்கிப்புலிகளில் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளை எவ்வாறு ஆரம்பத்தில் கண்டறிவது என்பது குறித்தும் இதனால் எப்படி வெற்றிகரமாக சிகிச்சையளிக்கமுடியும் என்பது குறித்தும் சிவிங்கிப்புலிகளைப் பாதுகாப்பதற்காகப் பணியாற்றும் பிரபல அமைப்பான 'சீட்டா கன்சர்வேஷன் ஃபண்ட்' அமைப்பின் ஆய்வுக் கட்டுரை கவனம் செலுத்துகிறது.

மத்திய பிரதேசத்தில் சிவிங்கிப்புலிகள்

சிவங்கிப்புலிகள், இந்தியா, விலங்குகள்

பட மூலாதாரம், Getty Images

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 1.15 லட்சம் ஹெக்டேர் குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, ஐந்து முதல் ஏழு வயது வரை உள்ள எல்லா 20 சிவிங்கிப் புலிகளும் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தில் வைக்கப்பட்டன.

அடுத்த கட்டத்தில் இவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு வெளியே நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வைக்கப்பட்டன, இதனால் அவை காட்டு விலங்குகள் மற்றும் வேட்டையாடுதல் போன்றவைகளுக்கு பழகும்.

நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகளும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப்புலிகளும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 18 சிவிங்கிப் புலிகள் தற்போது உயிருடன் உள்ளன. இந்தியாவிற்கு வரும் சிவிங்கிப்புலிகள் சரணாலயங்களில் இருந்து மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றின் இனப்பெருக்கம் அங்கு முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுபோன்ற 50 சரணாலயங்கள் உள்ளன, அதில் 500 ’வயது வந்த’ சீட்டாக்கள் உள்ளன.

"இந்த திட்டத்திற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். எல்லாம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த சிவிங்கிப்புலிகள், சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் தவிர மற்ற விலங்குகளை சுற்றி வாழ்ந்து வளர்ந்துள்ளன. அவை இந்தியாவை தங்கள் இருப்பிடமாக ஆக்கிக்கொள்ளும். அவைகளுக்கு சிறிது கால அவகாசம் மட்டுமே தேவை,” என்று சிவிங்கிப் புலிகள் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குனர் லாரி மார்க்கர், பிபிசியிடம் கூறினார்.

"குனோ தேசியப் பூங்கா இந்த சிவிங்கிப்புலிகளை மீள்குடியேற்றுவதற்கு மிகவும் பொருத்தமான இடம் என்று எனது குழுவினர் கண்டறிந்தனர். அதனால்தான் அவை இங்கு கொண்டு வரப்பட்டன. நானே முதல் தொகுப்புடன் இந்தியாவிற்கு வந்தேன். எல்லாமே சர்வதேச தரத்தில் இருந்தது,"என்றார் லாரி மார்க்கர்.

பல கவலைகள்

தற்போது, உலகில் சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை சுமார் 7,000 ஆகவுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை தென்னாப்ரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானாவில் உள்ளன.

1950களில் சிவிங்கிப்புலிகள் அழிந்துவிட்டதாக இந்தியா அறிவித்தது. அப்போது நாட்டில் ஒரு சிவிங்கிப் புலி கூட எஞ்சியிருக்கவில்லை.

இவ்வளவு பெரிய மாமிசம் உண்ணும் விலங்கு ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்தின் காடுகளுக்குக் கொண்டுவரப்பட்டது இதுவே முதல் முறை.

காட்டு சிவிங்கிப்புலிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவது மிகவும் சவாலானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர், ஏனெனில் இவை மனிதர்கள் மற்றும் கூண்டுகளின் அருகாமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன.

நீண்ட காலமாக புலிகள் குறித்து ஆய்வு செய்து வரும் வனவிலங்கு திரைப்பட தயாரிப்பாளர் அஜய் சூரி, "பிற சரணாலயங்களில் இருந்து புலிகளை இங்கு கொண்டு வந்து குடியேற்றுவது சாத்தியம். ஆனால் சீட்டாக்களின் குடியேற்றம் நடக்கும் வரை, அதைப் பற்றி அதிகம் கணிக்க முடியாது" என்றார்.

செப்டம்பரில் குனோவுக்கு வந்ததிலிருந்து சீட்டாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு குனோவில் நான்கு ஆரோக்கியமான சிவிங்கிப்புலிகள் பிறந்துள்ளன.

சிவிங்கிப்புலிகள் பற்றிய இந்த சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

  • சிவிக்கிப்புலிகள், புலி, சிங்கம் அல்லது சிறுத்தை போல கர்ஜிக்காது. அவற்றின் தொண்டையில் இதுபோன்ற குரலை எழுப்பும் எலும்பு இல்லை, அவை பூனைகளைப் போல குறைந்த ஒலியை எழுப்புகின்றன. சில சமயங்களில் பறவைகளைப் போல பேசுகின்றன.
  • சிவிங்கிப்புலி உலகில் வேகமாக ஓடும் விலங்கு. ஆனால் அது மிக நீண்ட தூரத்திற்கு அதிக வேகத்தில் ஓட முடியாது. பொதுவாக இந்த தூரம் 300 மீட்டருக்கு மேல் இருக்காது.
  • இவை வேகமான ஓட்டப்பந்தய வீரர்களாக இருக்கலாம். ஆனால் மற்ற பூனைகளைப் போலவே, அவை படுத்துக்கொண்டு அதிக நேரம் செலவிடுகின்றன.
  • சிவிங்கிப்புலிகள் ஸ்போர்ட்ஸ் காரை விட வேகமானவை. மணிக்கு, பூஜ்ஜியத்திலிருந்து 90 கிமீ வேகம் பிடிக்க மூன்று வினாடிகள் மட்டுமே ஆகும்.
  • சீட்டா என்ற பெயர் ’சித்தி’ என்ற இந்தி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஏனெனில் அதன் உடலில் ’சித்தி’ அதாவது புள்ளிகள் இருக்கின்றன.
  • சீட்டா மற்ற வகை பூனை இனங்களிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் அது இரவில் வேட்டையாடுவதில்லை
  • இவற்றின் கண்களுக்குக் கீழே கண்ணீரைப் போல் தோன்றும் கருப்புக் கோடுகள் சூரியனின் பிரகாசமான ஒளியைப் பிரதிபலிக்கின்றன, இதனால் அவை பிரகாசமான சூரிய ஒளியில் கூட தெளிவாகப் பார்க்க முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: