கோவையில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களைக் கடத்தி மிரட்டல் - உறவினர்களிடம் பணத்தை வாங்க வந்த காவல்துறையினர்

பட மூலாதாரம், Getty Images
சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இருவரைக் கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் பணம் வாங்கிய 4 நபர்களை காவல்துறை தனிப்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தபோது, அவர்களில் இருவர் போலீசார் என்பது தெரியவந்தது.
அவர்கள் 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்; இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இதில் மற்றொரு திருப்பமாக, பணம் கேட்டு கடத்தப்பட்ட இருவர் மீதும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இன்னும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
'ஆட்களைக் கடத்தியது தெரியாமல், பணத்தை வாங்கி வைக்குமாறு தங்களது தம்பி கூறியதைக் கேட்டு, பணம் வாங்கவந்தபோது போலீசார் இருவரும் சிக்கிக்கொண்டதாக' காவல் ஆய்வாளர் அசோக் குமார் தெரிவித்தார். கடத்தல் பற்றி தெரியாது என்றாலும் பணத்தை வாங்கியதால் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் பிபிசியிடம் தெரிவித்தார்.
'போலீஸ் விசாரணைக்கு அழைப்பது போல ஆளைக் கடத்திய கும்பல்'

பட மூலாதாரம், Getty Images
கோவை அருகிலுள்ள வெள்ளலூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த பரமேஸ்வரி, கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று அதிகாலையில் போத்தனூர் காவல் நிலையத்தில் வந்து ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய உடன்பிறந்த தம்பி நவீன் (வயது 29) மற்றும் அவருடைய நண்பர் நிர்மல்குமார் இருவரையும் சிலர் கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவித்திருந்தார். அதன்பேரில் அன்று காலையிலேயே உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ள தகவலின்படி, நவீன் அதே வாரியக் குடியிருப்பில் வேறோரு வீட்டில் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாத நவீன், சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோன அவரின் பாட்டி வீட்டையும் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீடும் அதே குடியிருப்பிலேயே உள்ளது. ஜூன் 8 ஆம் தேதி மதியம், சாப்பிடுவதற்கு நவீன் வீட்டிற்கு வரவில்லை என்று பரமேஸ்வரியிடம் அவரது தாய் கூறியுள்ளார்.
அதன்பின்பு நவீனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. அவர் தங்கியிருந்த பாட்டி வீட்டுக்குச் சென்றபோது அந்த வீடும் பூட்டப்பட்டிருந்தது. கீழே நவீன் மற்றும் அவருடைய நண்பர் நிர்மல்குமார் இருவருடைய இரு சக்கர வாகனங்களும் நின்றிருந்துள்ளன. சிறிது நேரம் கழித்து மதியம் 3:30 மணிக்கு, அந்த போனுக்கு பரமேஸ்வரி போன் செய்து பார்த்துள்ளார்.
அப்போது அதை எடுத்துப் பேசிய நபர், ''நாங்கள் போலீஸ். உங்கள் தம்பியை ஒரு விசாரணைக்காக அழைத்து வந்திருக்கிறோம்.'' என்று கூறியுள்ளார். அதன்பின் மீண்டும் அந்த போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி நிர்மலின் மனைவி ஜெனிதாவிடம் பரமேஸ்வரி போனில் கேட்டபோது, நவீனைப் பார்க்க தனது கணவர் நேற்று மதியம் சென்றபின் வீடு திரும்பவில்லை, போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அன்றிரவு 9:30 மணியளவில் பரமேஸ்வரிக்கு போனில் பேசிய ஜெனிதா, தனது கணவரின் போனிலிருந்து தனக்கு வாட்ஸ்ஆப் கால் வந்ததாகவும், அதில் பேசியவர்கள், தன் கணவரை கடத்தி வைத்து இருப்பதாகவும், உடனே ரூ.50 லட்சம் கொடுக்காவிட்டால் அவரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். அதன் பின்பு ஜூன் 8 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கும் மீண்டும் அதே வாட்ஸ்ஆப் கால் வந்துள்ளது.
அப்போது பரமேஸ்வரி, அவருடைய குடும்பத்தினர், ஜெனிதா எல்லோரும் ஒரே இடத்தில் இருந்துள்ளனர். வாட்ஸ் ஆப் காலில் பேசிய நபர்களிடம், ''என்னிடம் அவ்வளவு பணமில்லை. எனது கணவரிடம் பேசவேண்டும்.'' என்று கூறியுள்ளார். உடனே நிர்மலைப் பேச வைத்துள்ளனர். அதில் பேசிய நிர்மல், ''என்னையும் நவீனையும் நேற்று கத்தியைக் காட்டி மிரட்டிக் கடத்தி வந்துவிட்டனர். எப்படியாவது பணத்தை தயார் செய்.'' என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அவர்கள் பேசி முடித்தவுடன் மீண்டும் அவர்கள் இருவருடைய போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பின்பே, இருவரின் குடும்பத்தினரும் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். அங்கு பரமேஸ்வரி பெயரில் புகார் அளித்தவுடன், நவீன், நிர்மல் இருவரையும் கடத்தியவர்களைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் அப்போதே விசாரணையில் இறங்கியுள்ளனர்.
வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் குடியிருப்புப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களில், அவர்கள் கடத்தப்பட்டதாகக் கூறிய நேரத்தில் இருந்த காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் அவர்களுக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அதற்குப் பின்பு கடத்தல்காரர்களைப் பிடித்தது பற்றி பிபிசியிடம் விளக்கினார் வழக்கின் விசாரணை அதிகாரியும், போத்தனூர் காவல் ஆய்வாளருமான அசோக் குமார்.
''கடத்தப்பட்ட நிர்மலுடைய செல்போனிலிருந்து அவருடைய மனைவி ஜெனிதாவிடம் அதுவும் வாட்ஸ்ஆப் காலில் மட்டுமே கடத்தல்காரர்கள் பேசிக்கொண்டிருந்தனர். வேறு யாரிடமும் பேசவில்லை. பேசிமுடித்ததும் அந்த போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, பரமேஸ்வரி, ஜெனிதா ஆகியோர் எங்களிடம் வந்து தகவல் தெரிவித்துவிட்டனர்.'' என்றார் அவர்.
''அதன்பின் எங்கள் முன்பாகவும் சிலமுறை நாங்கள் சொன்னபடி அவர்கள் பதில் கூறினர். தங்களிடம் 50 லட்ச ரூபாய் இல்லை, 10 லட்ச ரூபாய் தயார் செய்கிறோம் என்று பேசி அதற்கு முன் தன் கணவரைக் காண்பிக்குமாறு ஜெனிதா சொன்னதற்கு அவர்கள் காண்பிக்கவே இல்லை. ஆளைக்காட்டாமல் பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது என்று ஜெனிதா கூறியும் அவர்கள் காண்பிக்கவில்லை. இறுதியில் ரூ.3 லட்சம் மட்டுமே கையில் இருப்பதாகக் கூறியதும், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு திருப்பூரில் நல்லூர் பேருந்து நிலையம் அருகில் ஓரிடத்திற்கு வரச்சொன்னார்கள்.'' என்றார் காவல் ஆய்வாளர் அசோக்குமார்.
'ஆள்கடத்தலில் பிடிபட்ட 4 பேரில் 2 பேர் போலீஸ்'

கடத்தப்பட்ட இருவரும் பணம் கேட்டு மிரட்டிய நபர்களிடம்தான் இருக்கிறார்களா என்று தெரியாத நிலையிலும், பணத்தை வாங்கும் நபர்களை வைத்து, அவர்களைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையுடன், இவர்களை அங்கே பணத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்ததாக போத்தனூர் காவல்துறையினர் விளக்கினர். அவர்கள் வரச்சொன்ன இடத்திற்குச் சென்று தனிப்படையினர், ஏற்கெனவே அங்கு காத்திருந்துள்ளனர்.
ஜூன் 9 மதியத்துக்கு மேல், ஜெனிதா பணத்தைக் கொடுத்தபோது அதை வாங்குவதற்கு 4 பேர் அங்கு வந்துள்ளனர். அப்போது காவல்துறை தனிப்படையினர் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்துள்ளனர்.
அவர்கள் 4 பேரும் திருப்பூரைச் சேர்ந்த ராம்குமார் (வயது 31), காளிதாஸ் (வயது 29), ஆனந்த் (வயது 37) மற்றும் மோகன் (வயது 38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோதுதான் அவர்களில் ஆனந்த் மற்றும் மோகன் இருவரும், நல்லூர் காவல் நிலையத்தில் காவலர்களாகப் பணியாற்றி வருபவர்கள் என்பது தெரியவந்து தனிப்படை போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதற்குப்பின் பெருந்துறை அருகில் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிர்மல், நவீன் இருவரையும் மீட்டு வந்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
பிபிசியிடம் பேசிய காவல் ஆய்வாளர் அசோக் குமார், ''பணம் வாங்கும்போது அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்த பின்புதான், அவர்களில் ஆனந்தும் மோகனும் போலீஸ் என்பது தெரியவந்தது. தன்னுடைய தம்பி ராம்குமார், வேறு ஏதோ காரணம் கூறி பணத்தை வாங்கி வைக்கச்சொன்னதால்தான் மோகனைக் கூப்பிட்டுக்கொண்டு பணத்தை வாங்க வந்ததாக ஆனந்த் கூறினார். ஆள்களைக் கடத்தியது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றார். ஆனாலும் அவர்களையும் கைது செய்துவிட்டோம்.'' என்றார்.
அவர்கள் மீது பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து ஆள் கடத்துவது மற்றும் மிரட்டுவது ஆகிய குற்றங்களுக்காக பிஎன்எஸ் 140(2) மற்றும் பிஎன்எஸ் 351(3) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலில் முக்கியப் பங்காற்றியதாக கருப்புசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது 8 குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்த போத்தனூர் காவல்துறையினர், இன்னும் 4 பேர் சிக்காமல் இருப்பதாகவும், விரைவில் அவர்களையும் கைது செய்துவிடுவோம் என்றும் பிபிசியிடம் தகவல் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸார் ஆனந்த் மற்றும் மோகன் இருவரையும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளார்.
நவீன் மற்றும் நிர்மல் இருவரும் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரியில் பணம் நிறைய சம்பாதிப்பதாகத் தெரிந்து, அவர்களை கடத்தி, அவர்களுடைய குடும்பத்தினரிடம் பணம் கேட்டால் கிடைக்குமென்று நினைத்தே, ராம்குமாரும் அவருடைய நண்பர்களும் இந்த கடத்தலைச் செய்ததாக காவல்துறையினர் விளக்கினர்.
ஆனால் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் இவர்களுடன் கூட்டணி வைத்திருந்த ராம்குமாருக்கு இவர்கள் பணம் தரவேண்டியிருந்ததால், அதற்காகவே நண்பர்கள் உதவியுடன் ராம்குமார் இந்தக் கடத்தலைத் திட்டமிட்டதாகவும் மற்றொரு தகவலும் பரவியுள்ளது.
அதை மறுத்த காவல் ஆய்வாளர் அசோக்குமார், ''இவர்களில் நிர்மலுக்கும், ராம்குமாருக்கும் இதற்கு முன்பு எந்தப் பழக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நிர்மலும் நவீனும் சேர்ந்து ஆன்லைன் லாட்டரியில் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களைக் கடத்திப் பணம் பறிக்கலாம் என்றே திட்டமிட்டு ராம்குமார் இதைச் செய்துள்ளார்.'' என்றார்.
'கடத்தியவர்களும் கைது; கடத்தப்பட்டவர்களும் கைது'

பட மூலாதாரம், Getty Images
ஆட்கள் கடத்தப்பட்ட இவ்வழக்கில் போலீசார் இருவர் கைது செய்யப்பட்டது ஒரு திருப்புமுனையாக இருந்த நிலையில், கடத்தப்பட்ட நவீன், நிர்மல்குமார் இருவரையும் போத்தனூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது மற்றுமோர் திருப்பமாக அமைந்துள்ளது. இவர்கள் இருவர் மட்டுமே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்ததாகத் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன், ''இவர்கள் இருவரும்தான் தொடர்ச்சியாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் சம்பாதித்த பணம் இவர்களிடம் இருப்பதாக நினைத்து, பணம் பறிப்பதற்காகவே ராம்குமார் உள்ளிட்ட 6 பேர், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்வது போல இவர்களைக் கடத்தியுள்ளனர்.'' என்றார்.
''போலீஸ் விசாரணை என்ற பெயரில் இருவரையும் கடத்தியது பற்றி பணம் வாங்க வந்த போலீசார் இருவருக்கும் தெரியாது என்று அவர்கள் கூறினாலும் அதை விசாரணையில்தான் முடிவு செய்யமுடியும். இருப்பினும் கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தை வாங்க வந்தது அவர்கள் என்ற முறையில்தான் 2 போலீசாரையும் கைது செய்திருக்கிறோம். அதேநேரத்தில் கடத்தப்பட்டவர்கள் இருவரும் நீண்டகாலமாக ஆன்லைன் லாட்டரியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதால் அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.'' என்றார் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























