சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே பாஜக-வில் சேர வேண்டுமென மிரட்டப்பட்டாரா? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters
காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று ஜூலை 30ஆம் தேதி கோரிக்கை விடுத்தார்.
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூலை 20 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியின்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவங்கள், அமித் ஷாவின் உத்தரவின் பேரிலேயே நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தீப்கே, "போராட்டங்களின்போது மாணவர்கள் தாக்கப்பட்ட விதமும், அவர்களின் ரத்தம் சிந்தப்பட்டதும் அமித் ஷாவின் உத்தரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது. டெல்லி காவல்துறை அவருக்குக் கீழ்தான் செயல்படுகிறது. ஒருவேளை அமித்ஷாவுக்கு இது குறித்துத் தெரியவில்லை என்றால், அது உள்துறை அமைச்சகத்தின் தோல்வி" என்று கூறினார்.
அதோடு, பாஜகவில் இணைய வேண்டுமென்று தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வந்ததாகவும் தீப்கே குற்றம் சாட்டினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, தனக்கு மிரட்டல் விடுத்த நபரின் பெயரை தீப்கே வெளியிட வேண்டும் என்றும் கூறியது.
முன்னதாக புதன்கிழமை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, அமித் ஷா உத்தரவின் பேரிலேயே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, "அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே பிரதமருக்கு நாங்கள் கூறும் அறிவுரை. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இயங்கும் ஒரு சுதந்திரமான உயர்மட்டக் குழுவைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதமர் குறைந்தபட்சம் இதற்கான பொறுப்பை ஏற்கும் கண்ணியத்தையாவது காட்ட வேண்டும்" என்று கூறினார்.
ராகுல் காந்தியின் கருத்தை தானும் ஏற்றுக் கொள்வதாகக் கூறிய தீப்கே, "அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக" என்றார்.

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
'பாஜகவில் சேருமாறு எனக்கு மிரட்டல்கள் வந்தன'
அபிஜித் தீப்கே வியாழக்கிழமை சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களிடம் பேசினார். "பாஜகவில் இணையுமாறு இன்று உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்ததா?" என்று செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேட்டார்.
அதற்கு அவர், "நீங்கள் பாஜகவில் சேர வேண்டும், அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மிகவும் நல்லது என்று எனக்குப் பல மிரட்டல்கள் வந்தன. நாட்டின் பிரதமர் மற்றும் அமித் ஷாவின் பேரன் வயதில் நான் இருக்கிறேன் என்பதை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன். அவர்களுடைய பேரனின் வயதில் இருப்பவர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய பதவியில் இருந்து கொண்டு இத்தகைய மிரட்டல்களை விடுப்பதன் அர்த்தம் என்ன?" என்று கூறினார்.
இருப்பினும், தீப்கே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
பாஜக தலைவர் கேசவ் உபாத்யாயா கூறுகையில், அவர் ராகுல் காந்தியின் பாதையைப் பின்பற்ற விரும்பினால் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டுமெனத் தெரிவித்தார்.
மேலும், "அவர் ஒரு போராட்டத்தின் முகமாக இருந்தார். வினாத்தாள் கசிவுக்கு எதிராக மசோதாவை கொண்டு வந்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டும் பாஜக அரசு இவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. இதற்கு அவர் மதிப்பு அளித்திருக்க வேண்டும், ஆனால் அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். ராகுல் காந்தியின் பாதையைப் பின்பற்ற விரும்பினால், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும்" என்று கேசவ் உபாத்யாயா கூறினார்.

பட மூலாதாரம், @yadavtejashwi
பதிலடி கொடுத்த பாஜக
மகாராஷ்டிர மாநில மூத்த பாஜக தலைவரும் அமைச்சருமான சந்திரசேகர் பவன்குலே, தமக்கு மிரட்டல் விடுத்த தொண்டரின் பெயரை தீப்கே வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மகாராஷ்டிராவில் பாஜக-சுக்கு 1.51 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சம் பேர் தீவிர உறுப்பினர்கள். நாடு முழுவதும் 13 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் தீப்கேவை பாஜகவில் இணையுமாறு கேட்டிருந்தால், அதை அவர் வெளிப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், "அந்த நபர் யார் என்று பெயர் தெரிவிக்கப்பட்டால், எங்கள் தொண்டர் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை என்றால், அவர் பாஜக மீது அவதூறு ஏற்படுத்தக்கூடாது" என்றும் கூறினார்.
கங்கனா ரனாவத் பற்றி அவர் என்ன கூறினார்?
பாஜக எம்.பி. கங்கனா ரணாவத், பாபா ராம்தேவ் ஆகியோர் ஜென்-ஸி போராட்டக்காரர்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் பற்றிக் கேட்டபோது, "ஜனநாயகத்திற்காகவும், எங்கள் எதிர்காலத்திற்காகவும், கல்விக்காகவும் போராடுவது கலாசாரத்தைச் சீரழிக்கும் விஷயமாக இருந்தால், ஆம் நாங்கள் கலாசாரத்தைச் சீரழிக்கிறோம் என்றுதான் கூறுவேன்" என்று தீப்கே கூறினார்.
பாபா ராம்தேவின் கருத்து குறித்துப் பேசுகையில், "பதஞ்சலியின் தரமற்ற தயாரிப்புகள் மீது அவர் முதலில் கவனம் செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்றமும் இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறது. முதலில் அவர் தனது சொந்தத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தட்டும்" என்று தீப்கே தெரிவித்தார்.
புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி நியமிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், "பாஜகவிடம் சரியான நபர்கள் இல்லை. குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை புதிய கல்வி அமைச்சர் வரவேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாவதை பார்த்தேன். இந்தக் கட்சி ரவுடிகளையும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளையும் வரவேற்பதற்காகவே இருக்கிறது" என்று கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
'பெல்லட் துப்பாக்கிகள் சுடப்படுவதை என் கண்ணால் பார்த்தேன்'
போராட்டங்களின்போது போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என்று பாஜக கூறிய போதிலும், "போராட்டங்களின்போது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. அதை நானே நேரில் பார்த்தேன். மக்கள் கண் பார்வை இழந்தனர். தீவிரமான சூழ்நிலையில் மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பிகாரில் என்ன நடந்தது? ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டது யார், அங்கு எந்த அரசு ஆட்சியில் இருக்கிறது?" என்று தீப்கே கேள்வி எழுப்பினார்.
மேலும், "நாட்டின் குழந்தைகள் மீது நீங்கள் ஏகே 47 ரக துப்பாக்கியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. ஏகே 47 பயங்கரவாதிகள் மீதுதான் பயன்படுத்தப்படும். நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது அது பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று ஏகே 47 மாணவர்கள் மீது பயன்படுத்தப்படுகிறது" என்றார்.
மேலும், "போராட்டம் தற்போதுதான் முடிவடைந்துள்ளது, ஒப்பந்தத்தை அமல்படுத்துவதாக அரசு உறுதியும் அளித்துள்ளது. ஆனால் உண்மையில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பிய தீப்கே, "போலீசார் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை மிரட்டி வருகின்றனர். மக்களின் குரலை ஒடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் விதம், இந்த அரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த அரசாங்கத்தால் நாட்டின் ஜனநாயகம் பலவீனமடைந்துள்ளது" என்று விமர்சித்தார்.
"ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைவோம்."
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட நடவடிக்கையை நியாயப்படுத்தும் விதமாக டெல்லி காவல்துறையே கல்வீச்சு சம்பவத்தை ஒருங்கிணைத்ததாக தீப்கே குற்றம் சாட்டினார்.
ஜூலை 20 அன்று, வன்முறைக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க, டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டக் களத்திற்கு டெல்லி காவல்துறை லாரி நிறைய கற்களையும் சேதமடைந்த ஒரு வாகனத்தையும் கொண்டு வந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
அதோடு, "டெல்லி காவல்துறைதான் கல்வீச்சைத் தூண்டிவிட்டது. பாஜக ரவுடிகள் வந்து கற்களை வீசினார்கள், அந்தப் பழி மாணவர்கள் மீது போடப்பட்டது" என்றும் தெரிவித்தார்.
சிஜேபி அமைப்புக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த தீப்கே, "அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தபோதிலும் எங்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கிறது என்றால், அதுவும் அவரது தோல்விதான். அப்படியெனில் நீங்கள் என்ன மாதிரியான சாணக்கியர்? அந்தக் காரணத்திற்காகவும் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
தனது மகனுக்கு மிரட்டல் வந்ததாகக் கூறும் தீப்கே-வின் தாயார்
முன்னதாக புதன்கிழமை, அபிஜித் தீப்கே அரசியல் இயக்கத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, தமக்கு ஒரு வீடியோ மூலம் மிரட்டல் வந்ததாக அவரது தாயார் அனிதா தீப்கே கூறியிருந்தார்.
அந்த வீடியோவில், அபிஜித் பாஜகவில் சேர வேண்டும் என்றும், இல்லையெனில் அவரது பெற்றோர் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறப்பட்டிருந்தது.
பி.டி.ஐ செய்தி முகமையின்படி, இந்த மிரட்டலுக்குப் பிறகு, தானும் தனது கணவரும் சத்ரபதி சம்பாஜிநகரை விட்டு வெளியேறி, கொங்கன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் சுமார் இரண்டு வாரங்கள் தங்க வேண்டியிருந்ததாகக் கூறினார் அனிதா தீப்கே.
சத்ரபதி சம்பாஜி நகரில் மராத்தி செய்தித் தொலைக்காட்சி ஒன்றுடன் பேசியபோது, அபிஜித் தீப்கே-வின் பெற்றோரான அனிதா மற்றும் பகவான் தீப்கே இதைத் தெரிவித்தனர்.
பி.டி.ஐ தகவலின்படி, இந்த உரையாடல் அவர்களின் மகன் புது டெல்லியில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்பாக நடைபெற்றது. நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நான்கு வாரங்களுக்கும் மேலாக நடந்த போராட்டத்திற்குப் பிறகு, தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியதாயிற்று.
இந்தப் போராட்டத்தில், கல்வியாளர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார், மேலும் ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, போராட்டக் களத்தில் இருந்து அவரை காவல்துறை அழைத்துச் சென்றது.
ஆனால் ஜூலை 20 அன்று, பெருந்திரளான இளைஞர்கள் திரண்டு, தடுப்புகளை உடைத்து நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். இதனால் காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது.
ரிசர்வ் பாதுகாப்புப் படையும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக, அதில் குறைந்தது மூவர் காயமடைந்ததாக சிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
ஜூலை 20ஆம் தேதி சம்பவத்திற்குப் பிறகு, ஜந்தர் மந்தரில் பல போராட்டக்காரர்கள் திரண்டனர். ஜூலை 25ஆம் தேதிக்குள், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வது போலத் தோன்றியது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































