வெளிநாடுகளில் சர்வதேச கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் வரியா? அரசின் அறிவிப்பை எப்படி புரிந்துகொள்வது?

பட மூலாதாரம், Getty Images
இந்தியர்கள் தங்களது `இண்டர்நேஷனல் கிரெடிட் கார்டுகளை` பயன்படுத்தி வெளிநாடுகளில் செலவு செய்தால் அதற்கான டிசிஎஸ் பிடிப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு வெளியேயான சர்வதேச கிரெடிட் கார்டு செலவினங்கள் பணம் அனுப்புதல் திட்டத்தின் (LRS) கீழ் கொண்டுவரப்படுகிறது.
இந்தியர்கள் வெளிநாடுகளில் இந்தியாவில் வாங்கிய தங்களின் சர்வதேச கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவினங்களை சமாளிப்பதற்கு ஏற்ப இவற்றை எல்ஆர்எஸ் கீழ் கொண்டுவருவதற்கு FEM(CAT)விதிகள், 2000 த்தின் விதி 7 விலக்கு அளித்துவந்தது. தற்போது, இந்த விதி நீக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மளிகைப் பொருட்கள் வாங்குவது முதல் செல்போன், நகைகள் போன்ற ஆடம்பர பொருட்களை வாங்குவது வரை கிரெடிட் கார்டுகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது சரியா அல்லது தவறா என்ற விவாதங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. சரியான முறையில் கிரெடிட் கார்டுகளை உபயோகப்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கூற்றாக உள்ளது.
மக்களில் பலரும் தங்களது வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. வெளிநாட்டு பயணத்தின்போது ஷாப்பிங் செய்வதற்கு, வெளிநாட்டு கல்வி நிலையங்களில் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு போன்றவற்றுக்கு இந்தியாவில் வாங்கிய `இண்டர்நேஷனல் கிரெடிட் கார்டுகளை` சிலர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்தான், இந்தியர்கள் தங்களது `இண்டர்நேஷனல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் செலவு செய்தால் அதற்கான டிசிஎஸ் பிடிப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் வருடத்திற்கு 2,50,000 டாலர் வரையில் எவ்விதமான முன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் செலவு செய்வதற்கு அனுமதி இருந்தது. சர்வதேச கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் செலவுகள் எல்ஆர்எஸ் கீழ் சேர்க்கப்படாததால் அதற்கு டிசிஎஸில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, இவை எல்ஆர்எஸ் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நிதியமைச்சகம் கூறுவது என்ன?
இது தொடர்பாக மே 16ஆம் தேதியிட்ட மின் அரசிதழில் டிசிஎஸ் உயர்வுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், `டிசிஎஸ் செலுத்துவது இறுதி வரி அல்ல என்றும் டிசிஎஸ் செலுத்துபவர் வரி செலுத்துபவராக இருந்தால், வழக்கமான வருமானத்திற்கு எதிராக டிசிஎஸ்க்கான கிரெடிட்டை அவர் தனது வரி செலுத்துதலாகக் கோரலாம் மற்றும் முன்கூட்டிய வரி போன்றவற்றுக்கு எதிராக அதை சரிசெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மருத்துவம் அல்லது கல்வி கட்டணம் தொடர்பான பரிவர்த்தனைகளில் மாற்றம் இல்லை என்றும் 2023 நிதி சட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே ரியல் எஸ்டேட், பத்திரங்கள், பங்குகள் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகள், டூர் பேக்கேஜ், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் ஆகியவற்றில் மட்டுமே இதன் தாக்கம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், `வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஒருவர் தனது சர்வதேச டெபிட் கார்டு, சர்வதேச கிரெடிட் கார்டு அல்லது வேறு ஏதேனும் முறையை தங்களது கரெண்ட் அக்கவுண்ட் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துகின்றனர். டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் முன்பு இருந்தே எல்ஆர்எஸ் கீழ் இருந்து வருகிறது. கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த விலக்கால், அவற்றால் செய்யப்படும் செலவீனங்கள் எல்ஆர்எஸ் கீழ் கொண்டு வரப்படாமல் இருந்தது. இதனால், சிலர் எல்ஆர்எஸ் அளவுகளையும் கடந்து செலவு செய்தனர். டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு இடையே உள்ள வேறுபாடுகளை களைவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்?
இது தொடர்பாக பொருளாதார ஆலோசகர் சோம வள்ளியப்பன் நம்மிடம் பேசுகையில், ‘2004ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் இருந்து யாராவது வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு செய்வது, கல்வி கற்பதற்கு செல்வது, மருத்துவம் பார்ப்பது, சுற்றுலா செல்வது போன்றவற்றுக்கு ஆண்டுக்கு 2,50,000 டாலர் வரை செலவு செய்யலாம். அதே நேரத்தில் மக்கள் வெளிநாட்டு கிரெடிட் கார்டுகள் மூலம் செலவு செய்வது இந்த வரம்புக்குள் வராமல் இருந்தது. தற்போது மத்திய அரசு கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் இதற்குள் கொண்டு வந்துள்ளது.
2,50,000 டாலர் வரம்பை கடக்கும்போது மக்கள் தங்களின் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவு செய்கின்றனர். அவ்வாறு செலவிடும்போது 7 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் 5 சதவீதம் டிசிஎஸ் விதிக்கப்படுகிறது. தற்போது7 லட்சம் ரூபாய் என்பதையும் 5 சதவீதம் டிசிஎஸ் என்பதையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி, தற்போது ‘இண்டர்நேஷனல் கிரெடிட் கார்டு’ மூலம் வெளிநாடுகளில் பணம் செலவழித்தால் 20 சதவீதம் டிசிஎஸ் விதிக்கப்படும். இதுவரை யாரேல்லாம் வெளிநாடுகளுக்கு செல்லும்போது கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து வந்தார்களோ, இனி அவர்கள் தாங்கள் வெளிநாடுகளில் செய்யும் செலவுக்கு கணக்கு காட்ட வேண்டி வரும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இது வரியல்ல, முன்பணம். நீங்கள் உங்களின் செலவு குறித்த கணக்கு விவரங்களை சமர்பித்து பணத்தை திரும்ப பெறலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் வெளிநாடுகளில் 100 ரூபாய் செலவு செய்தால் அதற்கு 20 ரூபாய் வரி பிடித்தம் செய்யப்படும். இந்த வரி இந்திய அரசுக்கு செலுத்தப்படும். நீங்கள் கணக்கு காட்டி இந்த பணத்தை திரும்பப் பெறலாம்’ என்றார்.
வெளிநாடுகளில் போய் அதிகமாக செலவு செய்பவர்களுக்குதான் புதிய மாற்றத்தால் பாதிப்பு, சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ரூ.7 லட்சம் வரை டிசிஎஸ் கிடையாது
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மற்றொரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய்க்குள் செலவு செய்யும்போது அதற்கு எல்ஆர்எஸ் வரம்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் இந்த தொகைக்கு டிசிஎஸ் விதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





























