You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பணத்தால் எதையும் வாங்க முடியும்': உலகக் கோப்பையின் பல மில்லியன் டாலர் பேக்கேஜ்களின் பின்னணி
- எழுதியவர், அலெஸாண்ட்ரா கொரியா
- பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
உலககோப்பை கால்பந்தின் 6 முன்வரிசை டிக்கெட்டுகள் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 4 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ-37.86 கோடி) விற்பனை செய்யப்பட்டன. விருது வழங்கும் விழாவின் போது, வெற்றி பெற்ற அணி கோப்பையை உயர்த்தும் அதே தருணத்தில், ஆடுகளத்திற்குள் நுழையும் அனுமதி இவர்களுக்கு வழங்கப்படும்.
இது , பெரும் செல்வம் படைத்த வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான தனிப்பட்ட ('கான்சியர்ஜ்') சேவைகளை வழங்கும் 'நைட்ஸ்பிரிட்ஜ் சர்க்கிள்' நிறுவனத்தால் விற்கப்பட்ட அதி சொகுசு பேக்கேஜின் ஒரு பகுதியாகும்.
"போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக வழங்கப்படும் வாய்ப்பு" என விவரிக்கப்பட்ட இந்த சலுகை, அழைப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இதில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அவர்கள் மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
"இந்த பேக்கேஜ் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் எங்களது உறுப்பினர்களில் ஒருவருக்கு விற்கப்பட்டது" என்று நைட்ஸ்பிரிட்ஜ் சர்க்கிள் தலைவர் ஸ்டூவர்ட் மெக்நீல் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் தெரிவித்தார்.
உலகக் கோப்பையில் கலந்துகொள்ள விரும்பும் பெரும் பணக்காரர்களுக்கு ஆடம்பர பேக்கேஜ்களை வழங்கும் பல நிறுவனங்களில் நைட்ஸ்பிரிட்ஜ் சர்க்கிளும் ஒன்றாகும்.
முதன்முறையாக, உலகக் கோப்பையின் இந்தத் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
மேலும் இது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் விளையாடப்படுகிறது. 16 நகரங்களில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும்.
உலகக் கோப்பையை நெருக்கமாக பின்தொடர விரும்பும் பல ரசிகர்களுக்கு, நீண்டகால திட்டமிடல் இருந்தபோதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதிக விலையுள்ள டிக்கெட்டுகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் அமெரிக்கா விசா பெறுவதில் உள்ள சிரமங்கள் போன்றவை அதில் அடங்கும்.
ஆனால், மிகச் சிறிய அளவிலான பார்வையாளர்களுக்கு இந்த அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
அவர்கள் போட்டியை நடத்தும் நகரங்களுக்குத் தனி ஜெட் விமானங்களில் வருகிறார்கள், ஹெலிகாப்டர் அல்லது சொகுசு கார் மூலம் மைதானங்களுக்குச் செல்கிறார்கள்.
கடைசி நேரத்தில் முடிவு செய்திருந்தாலும் கூட, அவர்களுக்கு விஐபி பகுதிகளில் உறுதியான இடம் வழங்கப்படுகிறது.
"நான் 22 ஆண்டுகளாக இந்த (ஆடம்பர) சந்தையில் பணியாற்றி வருகிறேன், இந்த உலகக் கோப்பையில் பணம் இருந்தால் நடைமுறையில் எதையும் வாங்க முடியும் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம், இது ஒரு புதிய விஷயம்" என்று மெக்நீல் கூறுகிறார்.
அவரும் உயர்நிலை ஆடம்பரப் பிரிவைச் சேர்ந்த பிற நிபுணர்களும் உலகக் கோப்பையில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் பெயர்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் இவர்களில் உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள், பில்லியனர்கள், நிறுவனங்களின் நிறுவனர்கள், தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் தடகள வீரர்கள் உள்ளிட்டோர் அடங்குவர் என்று அவர் கூறுகிறார்.
செலவு
உலகக் கோப்பைக்கான அனைத்து ஆடம்பர பேக்கேஜ்களும் மில்லியன் டாலர் விலை மதிப்பைக் கொண்டிருப்பதில்லை, ஆனால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் பல பயணத்திட்டங்களின் மதிப்பு "எளிதாக ஆறு இலக்கங்களை தாண்டிவிடுகிறது".
இவற்றில் தனிநபர் ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் முதல் விஐபி விமான நிலைய சேவைகள், பாதுகாப்பு குழுக்கள் மற்றும் ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் குழுமங்களில் தங்குமிடம் வரை அனைத்தும் அடங்கும்.
ஆடம்பர பயண கான்சியர்ஜ் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான 'மேக்மா குளோபல்' நிறுவனத்தின் ஓய்வு பயண பிரிவு துணைத் தலைவர் நிக்கோல் வாலாச், ஒரு ஜோடிக்கான குறைந்தபட்ச பேக்கேஜ் விலை 25,000 டாலர் (19,000 பவுண்டு) முதல் 75,000 டாலர் (57,000 பவுண்டு ) வரை இருக்கும் என்று மதிப்பிடுகிறார்.
இதில் ஐந்து நட்சத்திர தங்குமிடம், போட்டிக்கான டிக்கெட்டுகள், பிசினஸ் கிளாஸ் விமானங்கள் மற்றும் தனியார் வாகன போக்குவரத்து ஆகியவை அடங்கும்.
சில வாடிக்கையாளர்கள் பல நாட்கள் மற்றும் போட்டிகள் நடக்கும் பல நகரங்களை உள்ளடக்கிய ஆடம்பர பயணத்திட்டங்களுக்கு கணிசமான அளவு அதிக தொகையை செலுத்துகிறார்கள். அதேபோல் உலகக் கோப்பையுடன் மற்ற இடங்களுக்கான பயணங்களையும் இணைக்க முடிவு செய்பவர்களும் இருக்கிறார்கள்.
"எனது வாடிக்கையாளர்கள் சிலர் லாஸ் ஏஞ்சலிஸில் போட்டிகளைப் பார்க்கச் சென்று, பின்னர் ஹவாயில் சில இரவுகளைக் கழிப்பதற்காக விமானம் மூலம் அங்கு செல்கிறார்கள்" என்று வாலாச் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் தெரிவித்தார்.
இறுதிப் போட்டி நடைபெறும் வார இறுதி நாட்களுக்கு, நியூயார்க்கில் உள்ள ஆடம்பர தங்குமிடங்களுடன் சேர்த்து, செலவுகள் எளிதாக ஆறு இலக்கங்களை எட்டிவிடும் என்று அவர் மதிப்பிடுகிறார்.
விர்ச்சுவோசோ என்ற உலகளாவிய ஆடம்பர பயண நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட 'ஃபர்ஸ்ட் இன் சர்வீஸ் டிராவல்' நிறுவனத்தின் மூலோபாய இயக்குனர் ஜினா காபார்ட் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறுகையில், பெரும் பணக்கார ரசிகர்களுக்கான வசதிகள் விஐபி டிக்கெட்டுகள் மற்றும் போட்டியின் போது சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்படும் உணவுகள் முதல் மிகவும் விரிவான பேக்கேஜ்கள் வரை உள்ளன என்றார்.
"அவற்றில், வீரர்களுடனான பிரத்யேக சந்திப்புகளும் அடங்கும்" என்று காபார்ட் கூறுகிறார்.
மேலும், "விஐபி டிக்கெட்டுகள், போட்டியைப் பொறுத்து, ஒரு நபருக்கு 5,000 டாலர் (3,800 பவுண்டு) முதல் செலவாகலாம். பல போட்டிகள் மற்றும் நகரங்கள் இதில் ஈடுபடும்போது பேக்கேஜ்களின் விலை பல லட்சம் டாலர்களை எட்டக்கூடும்"என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தனியுரிமை மற்றும் அணுகல்
வாலாச்சின் கூற்றுப்படி, இந்தப் பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விலையை விட வசதி, தனியுரிமை மற்றும் பிரத்யேக அணுகல் ஆகியவை தான் மிக முக்கியமானவை.
"அவர்கள் தங்களது சொந்தக் குழுவுடன் இணைந்து பயணிக்கிறார்கள், மேலும் இவ்வளவு பெரிய அளவிலான ஒரு நிகழ்வு என்று வரும்போது உண்மையிலேயே மிகவும் பிரத்யேக அனுபவத்தை எதிர்பார்க்கிறார்கள்."
இருப்பினும், குறிப்பிட்ட சில போட்டிகளுக்கு, மைதானங்களைச் சென்றடைவதற்கான பயண ஏற்பாடுகளை விட அதற்கான தேவை அதிகமாக இருக்கலாம்.
"கிடைக்கக்கூடிய விமானங்கள் மற்றும் தரையிறங்கும் தளங்களின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு உள்ளது" என்று வாலாச் கூறுகிறார்.
அத்தகைய சூழ்நிலையில், தனிப்பட்ட ஓட்டுநருடன் கூடிய ஆடம்பரக் கார் தான் அதற்கான தீர்வாக முன்வைக்கப்படுகின்றது .
வாலாச்சின் கூற்றுப்படி, இத்தகைய வாடிக்கையாளர்கள் வெறும் விஐபி டிக்கெட்டை மட்டும் விரும்புவதில்லை.
"அனைவரும் முன் வரிசையில் அமர விரும்புவதில்லை. பலருக்கு, தனியுரிமையும் பிரத்யேக சேவைகளுக்கான அணுகலும் தான் முன்னுரிமையாக உள்ளது. அவர்கள் ஒரு முழுமையான விஐபி அனுபவத்தைத் தேடுகிறார்கள்"என்று கூறும் வாலாச்,
"சராசரி ரசிகர் வரிசையில் நின்று நேரத்தை வீணடித்து, நாள் முழுவதும் உணவு மற்றும் பானங்களுக்குப் பணம் செலுத்தும்போது, இந்த வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாகப் பிரத்யேக நுழைவு மற்றும் சிறந்த உணவு வகைகளுடன் கூடிய தனிநபர் ஓய்வறைகளுக்கான அணுகல் இருக்கும்"எனக் குறிப்பிடுகிறார்.
இப்பயணிகள் வெறுமனே மிகவும் விலையுயர்ந்த அனுபவத்தை மட்டுமே தேடுகிறார்கள் என நினைப்பது தவறு என்று கூறும் வாலாச், "அவர்கள் விரும்புவது எந்தவொரு சிரமமும் இல்லாத ஒரு அனுபவத்தைத் தான்"என்கிறார்.
இதில், மற்ற விஷயங்களுடன், கூட்ட நெரிசலைக் கையாள வேண்டியதில்லை அல்லது பயணத்திட்டத்தின் எந்தவொரு விவரத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதும் அடங்கும்.
"அவர்கள் தனித்துவத்தை விரும்புகிறார்கள், அவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க விரும்புவதில்லை. இது ஒரு உண்மையான சிவப்பு கம்பள வரவேற்பு உபசரிப்பு போன்றது, இதற்காக அவர்கள் பணம் செலுத்தத் தயாராக இருக்கிறார்கள்" என்று மெக்நீல் கூறுகிறார்.
பொதுவாக இந்த வாடிக்கையாளர்களுடன் பயணம் செய்யும் ஆதரவுக் குழுக்களில், பாதுகாவலர்கள் முதல் தனியார் சமையல்காரர்கள் வரை பலதரப்பட்ட தொழில் வல்லுநர்கள் இடம்பெறக்கூடும்.
"பல சந்தர்ப்பங்களில், பயண ஆலோசகர் வாடிக்கையாளரின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் பிற குழு உறுப்பினர்களுடன் நேரடியாக இணைந்து ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்" என்று காபார்ட் குறிப்பிடுகிறார்.
கடைசி நேர முடிவுகள்
இந்த வகையான பயணிகளை சாதாரண ரசிகர்களிடமிருந்து வேறுபடுத்தும் மற்றொரு அம்சம், முன்கூட்டிய திட்டமிடல் இல்லாதது ஆகும்.
"அவர்கள் பணத்தை விட தங்களது நேரத்திற்குத் தான் அதிக மதிப்பு அளிக்கிறார்கள், மேலும் பல நேரங்களில் கடைசி நிமிடத்தில் தான் முடிவுகளை எடுக்கிறார்கள்" என்று வாலாச் கூறுகிறார்.
மெக்நீலின் கூற்றுப்படி, உலகக் கோப்பையின் மீது அவரது வாடிக்கையாளர்களுக்கு இருந்த ஆர்வம் ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தது.
"அமெரிக்காவிற்கு வெளியிலிருந்து வரும் பயணிகளுக்கு, அங்குள்ள அரசியல் சூழல் காரணமாக ஒரு உண்மையான தயக்கம் இருந்தது" என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், சமீபத்திய வாரங்களில் இதற்கான தேவை அதிகரித்துள்ளது.
மேலும் 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்று நெருங்கும் போதும், எந்தெந்த நாடுகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது தெளிவாகும் போதும் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"உண்மையில், எங்களுக்கு இது இப்போது தான் தொடங்குகிறது, ஏனென்றால் நாங்கள் சேவை செய்யும் உறுப்பினர்கள் பெரும்பாலும் தங்களது திட்டங்களைக் கடைசி நிமிடத்தில் தான் இறுதி செய்கிறார்கள்" என்று மெக்நீல் கூறுகிறார்.
"பலர் தனிநபர் ஜெட் விமானங்களில் பயணம் செய்வதால், அவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொள்வது வசதியாகவும் எளிதாகவும் இருக்கிறது" என்று மெக்நீல் குறிப்பிடுகிறார்.
போட்டித் தொடர் தொடங்கியதில் இருந்தே இதற்கான தேவை அதிகரித்துள்ளதை தான் கண்டுள்ளதாகக் கூறும் வாலாச், "உண்மையைச் சொல்வதானால், இது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது என நினைக்கிறேன்"என்கிறார்.
மெக்நீலின் கூற்றுப்படி, போட்டிகளைத் தவிர, உலகக் கால்பந்து வரலாற்றில் புகழ்பெற்ற ஆளுமைகளுடன் நெருக்கமாகப் பேசும் வாய்ப்பை வழங்கும் வகையில், முன்னாள் உலகக் கோப்பை வீரர்களுடன் அவரது நிறுவனம் ஏற்பாடு செய்யும் மதிய விருந்து நிகழ்வுகள் போன்ற பிற பிரத்யேக அனுபவங்களுக்கும் தேவை இருக்கிறது.
மற்ற சில சமயங்களில், நட்சத்திர வீரர்களை மிக அருகில் பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள், அந்த தடகள வீரர் ஆதரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்குகிறார்கள்.
"பல வீரர்கள் தொண்டு காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என்று மெக்நீல் கூறுகிறார்.
மேலும், "அவர்களது விடுமுறை நாளில், பயிற்சி மையத்தில் சில வாடிக்கையாளர்களைச் சந்திக்க அவர்கள் ஒப்புக்கொள்ளலாம். எங்களது வாடிக்கையாளர்கள் [ஒரு தொண்டு நிறுவனத்திற்கு] நன்கொடை அளிப்பார்கள், மேலும் அவர்கள் [அந்த தடகள வீரருடன்] புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம், பந்தைக் காலால் உதைத்து விளையாடலாம் அல்லது அது போன்ற சில செயல்களில் ஈடுபடலாம்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
4 மில்லியன் டாலர் தொகுப்பைத் தவறவிட்டு, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான "அதி-பிரத்தியேக" அணுகலைப் பெற ஆர்வமாக இருப்பவர்களுக்கு, ஆடுகளத்தின் ஓரத்தில் இரண்டு பிரத்தியேக இருக்கைகளுடன் ஒரு புதிய வாய்ப்பு இருப்பதாக மெக்நீல் நினைவூட்டுகிறார்.
இவை ஒவ்வொன்றிற்கும் "வெறும்" 1.5 மில்லியன் டாலர் ( சுமார் ரூ-14 கோடி) மட்டுமே செலவாகும்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு