You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: தேர்தலில் போட்டியிடாமலே எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாரா?
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் நடைபெற இருக்கிறது. இதற்காக போட்டியிட விண்ணப்பித்து இருந்த வேட்பாளர்கள் மனுவை பெறுவதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக புலிகேசி நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேட்புமனு செய்து இருந்த அன்பரசன், கடைசி நேரத்தில் தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பாஜகவின் மேலிட பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்ததாக அதிமுக தெரிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தை வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் அடுத்து என்ன நடக்கும்?
பாரதிய ஜனதா கட்சிக்காக வேட்பாளரை அதிமுக திரும்பப் பெறுவது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் என்ன பலனை பெற்றுத் தரும்?
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பாக கர்நாடகா மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் எனக்கூறி பொதுக்குழு தீர்மானங்களை சுட்டிக் காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க அனுமதி வழங்கியது.
புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்பரசன் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
மேலும் அவரது விண்ணப்ப படிவத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்றும் அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ஏ,பி, படிவத்தில் கட்சியின் தலைமை குறிப்பிட்டு இருந்தது.
ஆனால் வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாளில், திடீரென அன்பரசன் தனது வேட்பு மனுவை திரும்பப்பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்து இருக்கதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை திரும்பப் பெறுவார் என்பது எதிர்பார்த்த ஒன்று என்று மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பிபிசியிடம் தெரிவித்தார்.
"வழக்கமாக கர்நாடகாவில் அதிமுக கோலார் தங்க வயல், காந்தி நகர் தொகுதிகளில் தான் போட்டியிடும். ஆனால் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தபோதே இப்படி நடக்கும் என நான் எதிர்பார்த்தேன்," என்று அவர் தெரிவித்தார்.
'தேர்தல் ஆணையத்தை ஏமாற்றுகிறார்'
கர்நாடகாவில் கோலார் தங்க வயல், காந்திநகர், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட ஓ.பி.எஸ் தரப்பினர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். அதில் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்து இருந்த ஓபிஎஸ் அணி வேட்பாளர் கே.குமாரின் மனு ஏற்கப்பட்டது.
கோலார் தங்க வயல் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருந்த ஆனந்தராஜின் வேட்புமனுவில் பி படிவம் இல்லாததால், அவரை சுயேட்சை வேட்பாளராக ஏற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம். மற்றொரு வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.
ஆனால் திடீரென ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களையும் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் தனது தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி, வேட்பாளரை அறிவித்து திரும்ப பெறுவதன் மூலம் தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்துள்ளார் என கூறினார்.
"கர்நாடக தேர்தலை காரணமாக வைத்து, தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தை வாங்க எடப்பாடி கணக்கு போட்டிருந்தார். அவருக்கு தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை. வேட்பாளரை நிறுத்தி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க உத்தரவு வந்த பிறகு இப்போது மனுவை திரும்ப பெற்று இருக்கின்றனர். இரட்டை இலைக்காக பொய் சொல்லி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார். இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் முயற்சி. நிச்சயம் இது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற விசாரணையில் பதிலடி கிடைக்கும்," என்று தெரிவித்தார்.
'பந்து எங்கள் பக்கம்'
அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் திரும்பப்பெற்றது குறித்து பிபிசியிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் வைகைச்செல்வன், வலிமையான அரசு அமையவே வேட்பாளரை திரும்பப் பெற்றோம் எனத் தெரிவித்தார்.
"கர்நாடகா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற உதவும் நோக்கில், அந்த கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டதால் எங்கள் வேட்பாளரின் மனுவை திரும்பப் பெற்றோம். இது கூட்டணியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு," என்று வைகைச்செல்வன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக பொதுச் செயலாளரும் பாஜக - அதிமுக கூட்டணி குறித்து சில கருத்துகளை தெரிவித்து இருந்த நிலையில், இந்த முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் வெளிப்படுத்தியது கட்சியின் நிலைப்பாடு. அதனால் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.
"வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சி தலைமையிலான ஒரு கூட்டணியால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியு. மாநில கட்சிகளின் பங்கும் அதில் இருந்தாலும், தேசிய கட்சியால் பெரிய விளைவுகளை உருவாக்க முடியும். அதன் அடிப்படையில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை, அதிமுக தலைமையில் பாஜகவுடனான கூட்டணி தொடரும். இதில் அண்ணாமலை பேசிய கருத்துகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது," என்று வைகைச்செல்வன் கூறினார்.
"தேர்தல் ஆணையத்தை ஏமாற்றினார் என்ற புகழேந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வைகைச்செல்வன், தேர்தல் ஆணையத்திடம் எங்கள் அணிக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவை காட்டி விட்டோம். செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால் சின்னம் தொடர்பான கோரிக்கையில் பந்து எங்கள் பக்கம் தான் சாயும். புகழேந்தியின் கருத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி," என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "தேர்தல் சின்னங்கள் ஆணை விதி எண் 10 மீறப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் போட்டியிடுவதை காரணம் காட்டித்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்ற வழக்கு மூலமாக தேர்தல் ஆணையத்தின் ஆணையை பெற்றார். ஆனால் தேர்தல் ஆணையத்தை தனக்கு சாதகமாக வளைக்க கர்நாடக தேர்தலை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொண்டார். இது விரைவில் வரவிருக்கும் டெல்லி உயர்நீதிமன்ற விசாரணையில் எதிரொலிக்கும்," என்று பேசினார்.
வேட்பாளரை திரும்பப்பெறுவதன் மூலம் மாநிலத்தில் நிலவும் வேற்றுமையை கடந்து பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி தலைமையுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று ஷ்யாம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்