பெரியார் பெயர் சொல்லாமல் திமுகவை விமர்சித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெரியார் பெயர் சொல்லாமல் திமுகவை விமர்சித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிரசுரிக்கப்பட்டது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வின் முதல் நாளில் இருந்தே, தேசிய கல்விக் கொள்கை பிரச்னையால் விவாதங்களுடன் தொடங்கியது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து அமளி ஏற்பட்டது. குறிப்பாக கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்காது என பேசினர்.

தொடர்ந்து அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,"பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்", என்று கூறினார்.

பி.எம்.ஶ்ரீ பள்ளி விவகாரத்தில் தமிழக அரசு யு டர்ன் அடித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதனை நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று பேசிய அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இன்று மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "உங்கள் போராட்டம் நாகரீகமற்ற முறையில் இருப்பதாகக் கூறியதால், கல்வித்துறை அமைச்சரை அவரது கூற்றை திமுகவினர் திரும்பப் பெற வைத்தனர். ஒரு மனிதர் தொடர்ந்து தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று கூறியபோதும், அவர்களின் பாசங்குதனத்தை பாருங்கள்", என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அவரது புகைப்படத்தை அனைத்து அறையிலும் வைத்துள்ளனர். அந்த கட்சியின் நாடாளுமன்ற அறையிலும் அவரது புகைப்படம் இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.அவரை போற்றுகின்றனர். வணங்குகின்றனர். திராவிட இயக்கத்தின் அடையாளம் என கூறுகின்றனர். ஆனால், அவர் தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று கூறியுள்ளார்.

அவர் வணங்கப்படுவது நம்பமுடியவில்லை. ஆனால், தர்மேந்திர பிரதான் நாகரீகமற்ற முறையில் போராட்டம் நடத்த வேண்டாம் எனக்கூறியதால், அவரைக் குற்றம்சாட்டினர்.

தமிழ் மீதான அவர்களது பற்று இந்த அளவில் இருந்தால், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி எனக்கூறிய இவரை எப்படி வணங்க முடியும்?", என்றும் குறிப்பிட்டார்.

அவர் பேசிய விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)