மெலிந்த தோற்றத்தில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் - நெதன்யாகுவின் பதில் என்ன?

மெலிந்த தோற்றத்தில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் - நெதன்யாகுவின் பதில் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேல் பணயக் கைதிகள் தொடர்பாக ஹமாஸ் வீடியோக்ள் வெளியிட்டுள்ள நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் பயங்கரவாதக் குழுவை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியை இந்த காட்சிகள் வலுப்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

இஸ்ரேல் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், காஸாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளுக்கு உதவி வழங்கச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது எனப் பார்க்கலாம்.

மெலிந்த தோற்றத்தில் இருக்கும் பணயக்கைதிகளின் வீடியோ சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த வீடியோ குறித்து தனது கண்டனத்தை தெரிவித்த நெதன்யாகு, ஹமாஸுக்கு பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை எட்டுவதில் எந்த ஆர்வமும் இல்லை என்பதை நிரூபிக்கிறது என்றும், பயங்கரவாதக் குழுவை "ஒழிக்க" வேண்டும் என்ற தனது உறுதியை இந்தக் காட்சிகள் வலுப்படுத்தியுள்ளன என்றும் கூறினார்.

"பிரச்சார நோக்கத்தில் பணயக்கைதிகளின் படங்கள் இவ்வாறு காட்டுவது அருவருப்பானவை" என்றும், அவர்கள் "நிபந்தனையின்றி" விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி கூறினார்.

இந்த வீடியோவை பார்த்து திகைத்துப் போனதாக ஜெர்மன் சான்சலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார். இதேபோல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ஹமாஸின் கொடூரமான கொடுமையை இவை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், போர் நிறுத்தத்தை மீட்டெடுப்பதற்கும், காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் பிரான்ஸ் தொடர்ந்து அயராது பாடுபடுவதாகக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு